தேடுதல்

கராச்சி பேராயர், கர்தினால் ஜோசப் கூட்ஸ் கராச்சி பேராயர், கர்தினால் ஜோசப் கூட்ஸ்  (AFP or licensors)

ஆள்கடத்தல், மதமாற்றம் கொடுமை – கர்தினால் கூட்ஸ்

சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த சிறுமிகளை பலவந்தமாகக் கடத்தி, அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, இஸ்லாமியருக்கு திருமணம் செய்துவைக்கும் கொடுமை, பாகிஸ்தானில் வளர்ந்து வருகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த வயதில் குறைந்த சிறுமிகளை பலவந்தமாகக் கடத்தி, அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, இஸ்லாமியருக்கு திருமணம் செய்துவைக்கும் கொடுமை, பாகிஸ்தானில் வளர்ந்துவருகிறது என்று, அந்நாட்டு கர்தினால் ஒருவர் கூறியுள்ளார்.

அக்டோபர் மாதம் 13ம் தேதி கராச்சி நகரில் கடத்தப்பட்ட 13 வயது சிறுமி Arzoo Raja அவர்கள், மதமாற்றம் செய்யப்பட்டு, 43 வயது நிறைந்த Ali Azhar என்பவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்ட கொடுமையைக் குறித்து, கராச்சி பேராயர், கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்கள் பீதேஸ் செய்திக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு கூறினார்.

இந்த வழக்கையொட்டி நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பில், சிறுமி Arzoo Raja அவர்கள், தன் கணவருடன் தொடர்ந்து வாழலாம் என்றும், அவர்கள் இருவருக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் கூறியிருப்பது, சிறுபான்மையினருக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள கொடுமையான தீர்ப்பு என்று கூறி, அக்டோபர் 28, இப்புதனன்று, கராச்சி உயர் மறைமாவட்டம் போராட்டம் ஒன்றை மேற்கொண்டது.

நீதித்துறையும், காவல்துறையும் இத்தகைய தவறுகளை செய்யும்போது, இந்நாட்டில், சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள், குறிப்பாக, சிறுமிகளும், இளம் பெண்களும் எவ்வித பாதுகாப்பும் இன்றி இருப்பதை உணரமுடிகிறது என்று, கர்தினால் கூட்ஸ் அவர்கள் கூறினார்.

முஸ்லிம் மனித உரிமை ஆர்வலரான Shema Kirmani அவர்கள் பீதேஸ் செய்தியிடம் பேசியபோது, இஸ்லாமிய மதத்தின் பெயரால் நடைபெறும் இத்தகைய செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டனம் செய்கிறோம், தற்போது நடந்துள்ளது, உண்மையிலேயே ஆள்கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை, ஒருவர், தன்னைக் கடத்திச் சென்றவரையே மணம் முடிக்கும்படி எந்த மதமும், அனுமதிப்பதில்லை என்று கூறினார்.

இதற்கிடையே, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், Lord Alton அவர்கள் தலைமையில், பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள இந்தக் கொடுமையை வன்மையாகக் கண்டனம் செய்துள்ளதோடு, இந்த விவகாரத்தை, பிரித்தானிய பாராளுமன்றத்திலும், ஐ.நா.வின் மனித உரிமை அவையிலும் எழுப்பப்போவதாகக் கூறியுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும், பாகிஸ்தானில், கிறிஸ்தவ, இந்து மதங்களைச் சேர்ந்த 1000த்திற்கும் அதிகமான சிறுமிகளும், இளம்பெண்களும் ஆள்கடத்தல் செய்யப்பட்டு, பலவந்தமாக இஸ்லாமியருக்கு திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது. (Fides/ ICN)

30 October 2020, 13:55