அன்னை மரியாவின் திரு உருவத்தை முழந்தாளிட்டு கடந்து செல்லும் பக்தர்கள் அன்னை மரியாவின் திரு உருவத்தை முழந்தாளிட்டு கடந்து செல்லும் பக்தர்கள் 

அன்னை மரியா, இறைவனின் அன்னை – அருள்பணி அமல்ராஜ் ம.ஊ.ச.

அக்டோபர் மாதம் முழுவதும், கத்தோலிக்கர், உலகில் அமைதி நிலவவும், கொரோனா தொற்றுக்கிருமி முற்றிலும் ஒழியவும் செபமாலை செபித்து வருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்பு இதயங்களே, அக்டோபர் மாதம், செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம். இந்த மாதம் முழுவதும், கத்தோலிக்கர், உலகில் அமைதி நிலவவும், கொரோனா தொற்றுக்கிருமி முற்றிலும் ஒழியவும் செபமாலை செபித்து வருகின்றனர். அன்னை மரியாவுக்குப் பல்வேறு பெயர்கள் சூட்டி, அவரைப் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்து வருகின்றோம். மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த அருள்பணி அமல் ராஜ் அவர்கள், அன்னை மரியா, இறைவனின் அன்னை என்பது பற்றி இன்று விளக்குகிறார், 

அன்னை மரியா, இறைவனின் அன்னை

'அன்னை மரியே, இறைவனின் தாயே"

1. 'அன்னை மரியே, இறைவனின் தாயே" என்ற வாழ்த்தொலியினுடைய தோற்றம் மற்றும் பின்னணி

மரியாவுடைய மன்றாட்டு மாலையில் வரும் முதல் வாழ்த்தொலி 'அன்னை மரியே, இறைவனின் தாயே" என்பதாகும். இது கிறிஸ்தியல் மற்றும் மரியியலை அடிப்படையாகக் கொண்ட கிறித்தவ விசுவாசத்தினுடைய அடிப்படைக் கோட்பாடாகும். இக்கோட்பாடானது ஆதித்திருஅவையினுடைய இயேசு கிறஸ்து, மற்றும், மரியாள் மீதான அவர்களுடைய நம்பிக்கையிலிருந்து எழுந்ததாகும். இதைத்தான் திருஅவையினுடைய மறைக்கல்வி ஏடானது, 'மரியாளைப் பற்றி திருஅவை என்ன நம்புகின்றதோ, அது இயேசு கிறிஸ்துவின் மீதான அதனுடைய நம்பிக்கையைச் சார்ந்ததென்றும், மரியா பற்றிய அதனுடைய போதனையானது இயேசு கிறிஸ்துவின் மீதான அதனுடைய நம்பிக்கையை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றதென்றும்" கூறுகின்றது (எண்.487).

ஆதிக் கிறஸ்தவக் குழுமங்களில் அவர்களுடைய நம்பிக்கைத் தேடலில் அவர்களுக்குள் எழுந்த கேள்விகள் பல. அவைகளுள் முக்கியமானது அவர்களுடைய நம்பிக்கையின் ஆணிவேராக இருந்த கிறிஸ்துவைப் பற்றிய கேள்விகளுக்கான பதிலின் தேடல்தான். அவர்களுடைய அடிப்படைக் கேள்வி, தாங்கள் தங்களுடைய கடவுளாக, மற்றும், மீட்பராக ஏற்று விசுவசிக்கும் இந்த இயேசு யார் என்ற கேள்வியாகும். ஆக, தாங்கள் நம்பும் இந்த இயேசு யார் என்கின்ற தேடலில் அவர்களுக்குக் கிடைந்த பதில், இயேசு கிறிஸ்து உண்மையிலேயே இறை மகன், இவர் இயல்பிலேயே முழு மனிதர், மற்றும், முழு இறைவன். இவருக்குள் மனித இயல்பும் இறை இயல்பும் எவ்வாறு இருந்திருக்க முடியும் என்கின்ற அவர்களுடைய அடிப்படை கேள்விக்கான பதிலின் தேடலில் அவர்கள் எழுப்பிய மற்றொரு கேள்வி, இயேசு கிறிஸ்து முழு மனிதர், மற்றும், முழு கடவுள் எனில் அவருடைய தாயாகிய இந்த மரியா யார் என்பதாகும். கி.பி. 431ம் ஆண்டு எபேசு திருச்சங்கத்தில் நடைபெற்ற இந்த விவாதத்தின் இறுதியில் அவர்களுக்குக் கிடைத்த பதில்தான்  Theotokos,  அதாவது, அன்னை மரியா, இறைவனின் தாய் என்பதாகும். இதுவே, அன்னை மரியா பற்றிய திருஅவையினுடைய முதல் கோட்பாட்டு மறையுண்மையாகும். இக்கேட்பாடானது கி.பி. 451 ஆண்டு நடைபெற்ற கால்சதோனியன் திருச்சங்கத்தால், அவருடைய தெய்வீகத் தன்மையைப் பொருத்தவரை தந்தையிடமிருந்து யுகங்களுக்கு முன்பே பிறந்ததாலும், இவ்விறுதி நாட்களில், நமக்காகவும் நமது மீட்புக்காகவும் அவருடைய மனிதத்தன்மை குறிக்கின்றவாறு இறைமகனும், ஆண்டவரும், ஒரே மகனுமாகிய அதே கிறிஸ்து,  இறைவனின் தாயாகிய கன்னி மரியிடமிருந்து பிறந்தார்" என்று மீண்டுமாக அறிவிக்கப்படுகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டே மரியாவுடைய மன்றாட்டு மாலையில் 'அன்னை மரியே, இறைவனின் தாயே" என்று அன்போடு அழைத்து அவரிடம் வேண்டுகின்றோம்.

2. அன்னை மரியா, இறைவனின் தாய் கோட்பாட்டு வரலாறு (History of the Dogma of Mary, Mother of God)

அன்னை மரியாவை இறைவனின் தாய் என்று திருவழிபாட்டிலும் பக்தி முயற்சியிலும் அழைக்கும் வழக்கமானது, திருஅவையின் தொடக்க காலங்களில் எகிப்தில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களிடையே இருந்து வந்ததைக் காணலாம். இது 3ம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் வாஞ்சையோடு பாடப்படும் 'ஓ இறைவனின் தாயே, உம் பாதுகாவலின் கீழ் நாங்கள் தஞ்சமடைகின்றோம்" எனப் பொருள்படும் Sub tuum praesidium confugimus, Sancta Dei Genetrix என்கின்ற பாடலில் இடம்பெறும் CHRISTOKOS, அதாவது இறைவனின் தாயே  என்னும் சொல்லாடல் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. இதுவே பின்னாளில், கி.பி. 431ம் ஆண்டு நடைபெற்ற எபேசு திருச்சங்கத்திலும் பல்வேறு நேர் மற்றும் எதிர்மறை விவாதங்களுக்குப் பிறகு கோட்பாட்டு வரையறையாக அறிவிக்கப்பட்டது.

எபேசு திருச்சங்கமானது நிசேயன் விசுவாசக் கோட்பாட்டிற்கு ஆதவராகவும், கான்ஸ்டான்டின் நாபொலியினுடைய ஆயராக இருந்த நெஸ்டோரியசின் அன்னை மரியா பற்றிய தப்பறைக் கொள்கையைக் கண்டித்தும் வாதம் செய்தது. அதாவது, நெஸ்டோரியஸ், அன்னை மரியாவை, இறைவனின் தாய் என்று பொருள்படும் THEOTOKOS என்னும் சொல்லால் அழைக்கக் கூடாது, மாறாக, கிறிஸ்துவின் தாய் என்று பொருள்படும் CHRISTOKOS என்ற சொல்லால் மட்டுமே அழைக்கப்படலாம் என்று வாதிடடார். ஏனெனில், 'இயேசு மரியாவிடமிருந்து பிறக்கும்போது, சாதாரண மனிதராகத்தான் பிறந்தார்; பின்னர் தம் வாழ்க்கைக் காலத்தில் கடவுளாக மாறினார்" என்பது அவருடைய வாதமாக இருந்தது. ஆனால், திருஅவையின் தந்தையர்களாகிய சிரில், மற்றும், அலெக்சாந்ரியாவின் பிதாபிதாவினுடைய அற்புதமான விவாதத்தின் இறுதியில் எபேசு திருச்சங்கத் தந்தையர்கள் ஒருமித்த குரலில் அன்னை மரியா, கிறஸ்துவின் தாய் மட்டுமல்ல, அவர் இறைவனின் தாயும் ஆவார் என்று அறிவித்தார்கள், அதாவது Blessed Virgin Mary is not only the mother of Christ, but also the mother of God. “இயேசுவில் இறைத்தன்மையும், மனிதத் தன்மையும் முழுமையாகக் குடிகொண்டிருகின்றன. ஆகவே மரியா, இறைவனின் தாய்” ஆவார் என்று விளக்கினார்கள்.

இவ்வாறு, அன்னை மரியாயின் தனிப்பெரும் பேறான கடவுளின் தாய் என்பது, இயேசு இறை-மனித இயல்புகளை உள்ளடக்கிய ஒரே கடவுள் என்பதால் உண்மையாகிறது. இயேசு கடவுளின் மகன் மட்டுமல்ல. இயேசு கடவுள் ஆவார். இயேசு கடவுள் என்றால் அன்னை மரியா, கடவுளின் தாயே!

3. அன்னை மரியா, இறைவனின் தாய் என்பதற்கான விவிலியப் பின்னணி

அன்னை மரியா இறைவனின் தாய் என்பதற்கான பல விவிலிய ஆதாரஙகள் இருக்கின்றன. ஒரு பெண்ணானவள் ஒரு கருவைத் தாங்கும் பொழுதுதான் அவள் தாயாகின்றாள். அன்னை மரியா இயேசுவைத் தன் கருவறையில் தாங்குவதற்குச் சம்மதம் தெறிவித்த அந்த நிமிடமே இறைவனின் தாயாகின்றார். இக்கருத்தை நற்செய்தியாளர் லூக்கா, வானதூதர் கபிரியேல் மரியாவுக்குக் கிறிஸ்து பிறப்பின் அறிவுப்புச் செய்தியைச் சொல்லும் நிகழ்வில், 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்" (லூக்.1,35) எனத் தெளிவாகப் பதிவு செய்கின்றார்.

இருப்பினும் அன்னை மரியா, இறைவனின் தாய் என நேரடியாக எந்த நற்செய்தியாளரும் குறிப்பிடவில்லையே என்ற கேள்வியையும் ஒரு சிலர் நம்முன் வைக்கின்றனர். கடவுளின் தாய் என்ற வார்த்தையை வெளிப்படையாகப் பயன்படுத்துவதை விவிலியத்தில்   நாம் காணவில்லை என்பது உண்மைதான். இருப்பினும், அன்னை மரியாவை மீண்டும் மீண்டும் இயேசுவின் தாய் என்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிடுகிறார். நற்செய்தியாளர் யோவான் கூறுவதைப் போன்று, வார்த்தையே மனுவுருவாகி நம் மத்தியில் குடிகொண்ட (யோவா 1,14) அந்த இயேசுவின் தாய்தான் மரியா எனில், நாம் கடவுளாக ஏற்றுக்கொள்ளும் இயேசு கிறிஸ்துவைப் பெற்றெடுத்த அவரை, இறைவனின் தாய் என்று அழைப்பதுதானே முறையாகும். 

மேலும், எலிசபெத்துக்கும் மரியாவுக்கும் இடையிலான சந்திப்பின்போது, 'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" (லூக் 1, 43) என்று வாழ்த்தும் எலிசபெத்தினுடைய வார்த்தைக்கான (லூக் 1, 43) விளக்கத்திலிருந்து மரியாவைக் கடவுளின் தாய் என்ற தலைப்பில் அழைப்பதற்குரிய காரணம் பற்றிய ஆழமானதொரு புரிதலை நாம் பெறலாம். அற்புதமான இச்சந்திப்பும் அவர்களுக்கிடையேயான உரையாடலும் எபிரேய மொழியில் நடந்திருக்க வேண்டும். அப்படியானால், 'என் ஆண்டவர்" என்பதற்கான எபிரேயச் சொல் Adonai  ஆகும். யூதர்கள் இவ்வார்த்தையை அவர்களுடைய கடவுளான Yahwehயைக் குறிக்கப் பயன்படுத்தினர். 'இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்" (இணைச்சட்டம் 6, 4) என்னும் அவர்களுடைய மைய உறுதிமொழியில் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுவதிலிருந்து இது தெளிவாகின்றது. 

இந்த மொழியியல் ஒப்பீட்டு ஆய்வின் அடிப்படையில், எலிசபெத்து மரியாவை வாழ்த்தும்பொழுது குறிப்பிடும் அந்த ஆண்டவர்தான் தந்தையாம் இறைவன், என்று பொருள்கொண்டு, மனுவுருவான அந்த இறைவனின் தாயான அன்னை மரியாவிடம் செபித்து, அவருடைய பாதுகாவலையும் பரிந்துரையையும் நாளும் வேண்டுவோம். இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையம் நிறைவாக ஆசீர்வதிப்பாராக

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2020, 12:45