லெபனான் நாட்டு இளையோர் லெபனான் நாட்டு இளையோர் 

நாட்டைவிட்டு வெளியேறும் சோதனையை இளையோர் கைவிட

கர்தினால் ராய் : இளையோரின் துடிப்பும், கல்வியும், மனச்சான்றும், கலாச்சாரமும், வாழும் வழிமுறைகளும் லெபனான் நாட்டிற்கு தேவைப்படுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

அண்மையப் பதட்டநிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள லெபனான் நாட்டு இளையோர், நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு எழும் சோதனையைக் கைவிடவேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளார், அந்நாட்டு கர்தினால் Beshara Raï.

லெபனான் நாட்டு இளையோரின் ஏமாற்றத்தையும், அவர்கள் நாட்டின் மீது நம்பிக்கையிழந்து வருவதையும் தான் புரிந்துகொள்வதாக உரைத்த மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் Raï அவர்கள், இளையோரின் புரட்சி மனப்பான்மையும், அவர்களது நியாயமானக் கோபமும், லெபனான் நாட்டிற்குத் தேவைப்படுகின்றன என்று கூறினார்.

அண்மையில் இடம்பெற்றுவரும் அரசியல், பொருளாதார, மற்றும், நிர்வாக நெருக்கடிகள் காரணமாக 55 விழுக்காட்டு மக்கள் வறுமைக்கோட்டில் வாழ்ந்து, தற்கொலைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தன் கவலையை வெளியிட்டுள்ள கர்தினால் ராய் அவர்கள், ஆட்சி அதிகாரத்தில் உள்ளோர், மக்களின் துன்பநிலைகள் குறித்து எவ்விதக் கவலையும் இன்றி செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

நாட்டுப் பிரச்சனைகளின் காரணமாக குடிபெயர முயலும் இளையோர் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டியது அவசியம் என்று கூறியுள்ள கர்தினால் Raï அவர்கள், பொருளாதார, நிதி, சமுதாய, மற்றும், நலப்பிரச்சனைகள், ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் நிலவுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இளையோரின் துடிப்பும், கல்வியும், மனச்சான்றும், கலாச்சாரமும், வாழும் வழிமுறைகளும் லெபனான் நாட்டிற்குத் தேவைப்படுகின்றன என மேலும் கூறினார் லெபனான் கர்தினால் ராய். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 October 2020, 13:50