பேராயர் ஈமோன் மார்ட்டின் பேராயர் ஈமோன் மார்ட்டின்  

அயர்லாந்தில் பொது வழிபாடுகள் மீண்டும் துவங்கும் வாய்ப்பு

கொள்ளைநோய் பரவுவதற்கு, பொது வழிபாடுகள் காரணம் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லையென்பதால், ஏனைய ஐரோப்பிய நாடுகளைப்போல, அயர்லாந்திலும் பொதுவழிபாடுகள் கட்டுப்பாடுகளுடன் நடைபெற அனுமதி வழங்கவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அயர்லாந்து பிரதமர், Micheál Martin அவர்களைச் சந்தித்தபின், தங்கள் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள பொது வழிபாடுகள் மீண்டும் துவங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று தான் நம்புவதாக, அயர்லாந்து ஆயர் பேரவைத் தலைவரான பேராயர் ஈமோன் மார்ட்டின் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

அயர்லாந்து ஆயர் பேரவை உறுப்பினர்களோடும், பிரதமர் மார்ட்டின் அவர்களோடும் மேற்கொண்ட உரையாடல்களில், கோவிட்-19 கொள்ளைநோய் பரவுவதற்கு, பொது வழிபாடுகள் காரணம் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லையென்றும், ஏனைய ஐரோப்பிய நாடுகளைப்போல, அயர்லாந்திலும் பொதுவழிபாடுகள் நடைபெற அனுமதி வழங்கவேண்டும் என்றும் கூறப்பட்டதாக, பேராயர் மார்ட்டின் அவர்கள் கூறியுள்ளார்.

கிறிஸ்தவ சமுதாயத்திற்கு அடிப்படை சக்தியை வழங்கும் பொது வழிபாடுகளிலிருந்து மக்களைத் தடுத்துவைப்பது, அவர்களுக்கு இழைக்கப்படும் துன்பம் என்பதை பிரதமரிடம் தான் வலியுறுத்தியதாக பேராயர் மார்ட்டின் அவர்கள் கூறினார்.

கூடிவந்து இறைவேண்டல் செய்வது, கிறிஸ்தவ சமுதாயத்திற்கே உரிய தனி முத்திரை என்றும், குறிப்பாக, நெருக்கடிகள் சூழும் வேளையில், இந்த சமுதாய வேண்டுதல்கள் இடம்பெறவேண்டும் என்றும் அயர்லாந்து ஆயர்கள் வெளியிட்ட விருப்பத்தை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளதாக பேராயர் மார்ட்டின் அவர்கள் எடுத்துரைத்தார். (UCAN/CNS)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2020, 14:00