தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ், மின்ஸ்க் பேராயர்  Kondrusiewicz திருத்தந்தை பிரான்சிஸ், மின்ஸ்க் பேராயர் Kondrusiewicz  

‘தர்மமான போர்’ என்பது அறவே கிடையாது - திருத்தந்தையர்

இன்றைய காலக்கட்டத்தில் பயன்படுத்தப்படும் போர் முறைகள், மற்றும் சக்தி வாய்ந்த போர்க்கருவிகள் நேரடியாக போர்க்களத்தில் சண்டையிடும் வீரர்களை மட்டுமல்லாமல், பல்லாயிரம் உயிர்களை அழிக்கின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்றைய உலகம் மேற்கொள்ளும் போர் முயற்சிகள் மற்றும் போர் கருவிகளின் சக்தி ஆகியவற்றை மனதில் கொண்டு, அண்மைய ஆண்டுகளில் திருத்தந்தையர் எந்த ஒரு போரும் ‘தர்மமான போர்’ என்று சொல்லமுடியாது என்று கூறியிருப்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தன் அண்மையத் திருமடலில் வலியுறுத்தியுள்ளார் என்று இறையியல் பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

உரோம் நகரில் உள்ள உர்பானியா பல்கலைக்கழகத்திலும், புனித பொனவென்ச்சர் கல்லூரியிலும் நன்னெறி இறையியல் பேராசிரியராகப் பணியாற்றிவரும் பிரான்சிஸ்கன் சபை துறவி, ஜூலியோ செஸரேயோ (Giulio Cesareo) அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வெளியிட்ட 'அனைவரும் உடன்பிறந்தோர்' (“Fratelli tutti”) என்ற திருமடலைக் குறித்து தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

இத்திருமடலின் 7ம் பிரிவில், 256, 257 ஆகிய எண்களில், இவ்வுலகம் பின்பற்றவேண்டிய அமைதிப்பாதையைக் குறித்து தன் எண்ணங்களை வலியுறுத்திக் கூறியுள்ள திருத்தந்தை, 'தர்மமான போர்' என்ற கருத்தை இனி ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று கூறியுள்ளார் என்பதை, அருள்பணி செஸரேயோ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருஅவை வரலாற்றில் 5ம் நூற்றாண்டு முதல், 15ம் நூற்றாண்டு வரை, போர்களைக் குறித்த பல்வேறு கொள்கைகள் நிலவிவந்தன என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய அருள்பணி செஸரேயோ அவர்கள், இரண்டாம் வத்திக்கான் சங்கமும், இன்னும் குறிப்பாக, திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள் வெளியிட்ட 'Pacem in terris' திருமடலும், போர்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை தெளிவு படுத்தின என்று கூறினார்.

இன்றைய காலக்கட்டத்தில் பயன்படுத்தப்படும் போர் முறைகள், மற்றும் சக்தி வாய்ந்த போர்க்கருவிகள் நேரடியாக போர்க்களத்தில் சண்டையிடும் வீரர்களை மட்டுமல்லாமல், பல்லாயிரம் உயிர்களை அழிக்கின்றன என்பதால், போர்களை எவ்வகையிலும் நாம் 'சரியான போர்' என்றோ, 'தர்மமான போர்' என்றோ கூற இயலாது என்று, அருள்பணி செஸரேயோ அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த எண்ணங்கள் அண்மைய ஆண்டுகளில் பல திருத்தந்தையரின் கூற்றுகளிலும், எழுத்துக்களிலும் வெளிவந்துள்ளன என்றும், இந்த எண்ணங்கள், திருத்தந்தை வழங்கியுள்ள 'அனைவரும் உடன்பிறந்தோர்' திருமடலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்றும் அருள்பணி செஸரேயோ அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்திக் கூறினார்.

29 October 2020, 14:17