தேடுதல்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை விடுவிக்க கோரி அமைதி போராட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை விடுவிக்க கோரி அமைதி போராட்டம்  (AFP or licensors)

அருள்பணி ஸ்டான் சுவாமியுடன் ஒருமைப்பாட்டில் ஆசிய திருஅவை

கர்தினால் போ : தன் மக்களின் மாண்பிற்காக குரல் எழுப்பியதற்காக, மகாத்மா காந்தி சிறைவைக்கப்பட்டதை, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் சிறைவைப்பு நினைவூட்டுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் ஏழை பழங்குடி மக்களிடையே பணியாற்றிவரும் இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், ஆசிய திருஅவை அவருடன் ஒருமைப்பாட்டில் ஒன்றிணைந்து நிற்பதாகவும் அறிவித்துள்ளார், கர்தினால் சார்ல்ஸ் மாங் போ.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுடனும், பூர்வீக இன மக்களுடன் பணியாற்றும் அனைவருடனும், ஆசிய திருஅவை தன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதாக தன் அறிக்கையில் கூறியுள்ள, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் போ அவர்கள், தன் மக்களின் மாண்பிற்காக குரல் எழுப்பியதற்காக தேசத்தந்தை மகாத்மா காந்தி சிறைவைக்கப்பட்டதை, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் சிறைவைப்பு நினைவூட்டுகிறது என அதில் கூறியுள்ளார்.

சந்தை பொருளாதாரத்தால், சுற்றுச்சூழல் அகதிகளாக மாற்றப்பட்டிருக்கும் பூர்வீக இன மக்களுக்காக காந்தீய அகிம்சா வழியில் போராடிய இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் மீது குற்றம் சுமத்தியிருப்பது குறித்து ஆசிய திருஅவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக உரைத்த கர்தினால் போ அவர்கள், இவ்வுலகின் நுரையீரல் எனும் காடுகளைக் காப்பாற்றி பாதுகாக்கும் பழங்குடி மக்களுக்காக குரல் கொடுத்தவர் அருள்பணி ஸ்டான் சுவாமி என குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பூர்வீக இன மக்களின் பங்கை அங்கீகரித்து, அவர்களையும் அவர்களுக்காக உழைப்பவர்களையும் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என, இந்திய அரசுக்கு விண்ணப்பம் ஒன்றையும் விடுத்துள்ளார், கர்தினால் போ.

மகாத்மாவின் பூமியும், கிழக்கு நாடுகளின் ஆன்மீக அன்னயுமாகிய இந்திய நாட்டின் அரசுத் தலைவர்கள், பூர்வீக இன மக்கள், மற்றும், அவர்களுக்காக உழைத்தவர்கள் விடுதலைசெய்வதற்குரிய ஞானத்தை பெறுவார்களாக எனவும், தன் செய்தியில் கூறியுள்ளார் கர்தினால் போ.

26 October 2020, 14:32