கர்தினால் Jean-Claude Hollerich கர்தினால் Jean-Claude Hollerich  

ஐரோப்பிய நாடுகளைப் பற்றி திருத்தந்தையின் கனவுகள்

ஐரோப்பிய கண்டத்தின் வரலாற்றைப் புரட்டிப்பார்ப்பது மட்டும் போதாது, அந்த வரலாற்றுக்கு நமது பங்களிப்பையும் வழங்கவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பிய கண்டத்தின் வரலாற்றைப் புரட்டிப்பார்ப்பது மட்டும் போதாது, அந்த வரலாற்றுக்கு நமது பங்களிப்பையும் வழங்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு மடல் வழியே அழைப்பு விடுத்திருப்பதற்கு, ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் (COMECE) தலைவர், கர்தினால் Jean-Claude Hollerich அவர்கள் தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு (COMECE) ஆரம்பிக்கப்பட்டதன் நாற்பதாம் ஆண்டு, திருப்பீடத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு, ஐரோப்பிய அவையில் நிரந்தரப் பார்வையாளராக, திருப்பீடத்தின் பிரதிநிதித்துவம் தொடங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு ஆகிய மூன்று முக்கிய நினைவுகளைக் கொண்டாடும் நிகழ்வுகள், அக்டோபர் 28, இப்புதன் முதல், அக்டோபர் 30, வருகிற வெள்ளி முடிய, Bruxelles நகரில் நடைபெற்று வருகின்றன.

இந்நிகழ்வுகளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களுக்கு, அக்டோபர் 27, இச்செவ்வாயன்று அனுப்பியிருந்த மடலைக் குறித்து கருத்து தெரிவித்த கர்தினால் Hollerich அவர்கள், இவ்வாறு கூறினார்.

ஐரோப்பிய கண்டத்தின் அனைத்து நாடுகளிலும் வாழும் மக்கள், தங்கள் வாழ்வை மேம்படுத்தவும், அதே வேளையில், ஐரோப்பிய கண்டத்தில் புகலிடம் தேடி வருவோரின் வாழ்வை மேம்படுத்தவும், திருத்தந்தையின் மடல் அழைப்பு விடுக்கிறது என்று, கர்தினால் Hollerich அவர்கள் எடுத்துரைத்தார்.

"ஐரோப்பாவே, உன்னையே நீ அறிந்துகொள்; நீ, நீயாகவே இரு" என்ற அறைகூவலுடன், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கிய ஓர் அறிவுரையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த கொள்ளைநோய் காலத்தில், இம்மடல் வழியே, இன்னும் முன்னெடுத்துச் செல்கிறார் என்று, கர்தினால் Hollerich அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கிறிஸ்தவ விழுமியங்களான உடன்பிறந்த உணர்வில், ஐரோப்பிய நாடுகளை வளர்ப்பது, ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் ஒரு முக்கிய கனவாகவும், கடமையாகவும் இருக்கவேண்டும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மடலில் வலியுறுத்தியிருப்பதை, கர்தினால் Hollerich அவர்கள் நினைவுகூர்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2020, 14:03