திருத்தந்தை பிரான்சிஸ்,கர்தினால் சார்லஸ்  போ(2017) திருத்தந்தை பிரான்சிஸ்,கர்தினால் சார்லஸ் போ(2017) 

உடன்பிறந்த உணர்வு, அமைதிக்கு அடித்தளம், வழித்தடம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், “அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற புதிய திருமடலை அடிக்கடி வாசித்து, தியானித்து, அம்மடலில் திருத்தந்தை விடுத்துள்ள விண்ணப்பங்களைச் செயல்படுத்துமாறு, ஆசிய கத்தோலிக்கருக்கு அழைப்பு – கர்தினால் போ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli tutti)” என்ற தனது புதிய திருமடலில், அனைத்து மனிதர்களையும் மதித்து அவர்களுடன் உரையாடி, அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளுமாறு பலமுறை வலியுறுத்தியிருப்பதைச் செயல்படுத்துமாறு, ஆசிய திருஅவைத் தலைவர் ஒருவர், ஆசிய கத்தோலிக்கர் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரும், மியான்மார் நாட்டின் யாங்கூன் பேராயருமான, கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், திருத்தந்தையின் புதிய திருமடலை மையப்படுத்தி, ஆசியத் திருஅவைகளுக்கென வெளியிட்டுள்ள நீண்டதோர் அறிக்கையில், இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

உடன்பிறந்த உணர்வு மற்றும், சமுதாய நட்பை மையப்படுத்திய, திருத்தந்தையின்   புதிய திருமடலை அடிக்கடி வாசித்து, தியானித்து, செபித்து, அந்த திருமடலில் திருத்தந்தை விடுத்துள்ள விண்ணப்பங்களைச் செயல்படுத்துமாறு, கர்தினால் போ அவர்கள், ஆசிய கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில், முதலில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்கள் முன்பாகச் சிரம்தாழ்த்தி, தனக்காகச் செபிக்குமாறும், நாம் ஒருவர் ஒருவருக்காக எப்போதும் இறைவேண்டல் செய்யவேண்டும், இந்த உலகில் உடன்பிறந்த உணர்வு மிக அதிகமாக சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக, உலகமனைத்திற்காக நாம் செபிப்போம் என கூறினார் என்றும், கர்தினால் போ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

திருஅவை, வியப்புக்களை ஆற்றுகின்றது

இந்த கொள்ளைநோய் காலத்தில், பெருங்குழப்பமும், வருங்காலம் பற்றிய அச்சமும், பசியும் அதிகரித்துள்ளன, ஆயினும், இந்த நெருக்கடிக்கு மேலெழுந்தவாரியாகப் பதில் அளிக்காமல் இருக்கவும், ஒருவர் ஒருவர் மீது நன்மதிப்பை கட்டியெழுப்பவும், இந்த உலகை வருங்காலத்திற்கு இட்டுச்செல்லும் ஆவலில் வாழவும் வேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொள்ளதைக் குறிப்பிட்டுள்ளார், கர்தினால் போ.

திருஅவை எப்போதும் உயிர்த்துடிப்புடன் உள்ளது, அது எப்போதும் வியப்புக்களை ஆற்றுகின்றது என்றும், திருஅவை மறைப்பணியை ஒருபோதும் நிறுத்திவிடக் கூடாது என்றும், நற்செய்தியின் மகிழ்ச்சி, இதயங்களில் குறைந்துவிடாமலும், புறக்கணிப்பு கலாச்சாரத்திற்கு வழிவிடாமலும் வாழுமாறு, புதிய திருமடலில் அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, நம் சகோதரர், சகோதரிகள் மீது அக்கறை காட்டி, அவர்களை மதிப்பது உடன்பிறந்த உணர்வு என்றும், இதுவே, அமைதிக்கு அடித்தளம் மற்றும், வழித்தடம் என்றும் கூறியிருக்கிறார்.

உடன்பிறந்த உணர்வு என்பது, ஒருமைப்பாடு மற்றும் உரையாடல் ஆகும், இதுவே உண்மையான மதமாகும், இந்த உணர்வு இன்றி, சுதந்திரம், மற்றும், சமத்துவம் ஆகிய பண்புகளுக்கு எவ்வித அர்த்தமும் கிடையாது என்றும், திருத்தந்தை குறிப்பிட்டிருப்பதை, கர்தினால் போ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். 

நோய்கள், இனவெறி, சமத்துவமின்மை, வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கள், வறியோர், கருவில் வளரும் குழந்தைகளும், வயதுமுதிர்ந்தோரும் புறக்கணிக்கப்படல், பெண்களும், சிறாரும் வரத்தகம் செய்யப்படல் போன்ற தீமைகள், கோவிட்-19 கொள்ளைநோய்க்குச் சமமாக இவ்வுலகில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கர்தினால் போ அவர்கள் கூறியுள்ளார்.

ஆசியாவில் குறைந்தது 18 நாடுகளில் மரண தண்டனை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளன, ஆசியாவில் ஆயுத வர்த்தகமும், நீண்ட காலம் நடைபெறும் சில போர்களும் ஆசியாவில் இடம்பெறுகின்றன என்றுரைத்துள்ள கர்தினால் போ அவர்கள், இலட்சக்கணக்கான மக்கள் வாழ வழியின்றி, வேலைதேடி வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர், இந்நிலையில், இந்த தீமைகளுக்கு எதிராக, பரிவன்பு, தோழமை மற்றும், நீதி ஆகிய குணப்படுத்தும் ஊசிமருந்துகளை ஊக்குவிக்கும் நல்ல சமாரியர்களாக வாழவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 October 2020, 14:54