கேமரூன் வன்முறைகள் கேமரூன் வன்முறைகள் 

கேமரூன் அமைதிக்கு கிறிஸ்தவ தலைவர்கள் விண்ணப்பம்

இங்கிலாந்து கிறிஸ்தவ சபை தலைவர்கள் : கேமரூன் நாட்டின் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளும் மதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அனைத்துலக சமுதாயத்தின் கடமை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கேமரூன் நாட்டில் நிலவிவரும் வன்முறைகளை முடிவுக்குக் கொணர, இங்கிலாந்தும், உலக சமுதாயமும் உதவவேண்டும் என, இங்கிலாந்தின் கிறிஸ்தவ சபையினருடன் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

இங்கிலாந்தின் கத்தோலிக்க ஆயர்கள் Declan Lang, Philip Egan ஆகியோர், கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கேமரூனில் ஆங்கிலம் பேசும் பகுதி, மத்திய அரசுக்கு எதிராக பிரிவினைவாதத்தைத் துவக்கியதால் எழுந்துள்ள வன்முறைகள், முடிவுக்கு வர உதவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இங்கிலாந்து ஆயர் பேரவையின் வெளிநாட்டு விவகார அலுவலக தலைவராக ஆயர் Declan Lang அவர்களும், கேமரூனின் Bamenda உயர் மறைமாவட்டத்துடன் இணைந்து பணியாற்றும் Portsmouth மறைமாவட்டத்தின் ஆயராக Philip Egan அவர்களும் பணியாற்றி வருகின்றனர்.

கேமரூனின் ஆங்கிலம் பேசும் பகுதிகளில் வாழும் மக்கள், அண்மைக்காலங்களில் பல்வேறு வன்முறைகளுக்கும், சட்டத்தை மீறிய கொலைகளுக்கும், சட்ட விரோத கைதுகளுக்கும் உள்ளாக்கப்படுவது குறித்து, தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள இங்கிலாந்தின் கிறிஸ்தவ சபை தலைவர்கள், இந்த மத்திய ஆப்ரிக்க நாட்டின் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளும் மதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அனைத்துலக சமுதாயத்தின் கடமை என்பதை வலியுறுத்தியுள்ளனர்.

வன்முறைகளை ஒழிக்கவும், அமைதியின் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும், கேமரூன் நாட்டு மக்களோடு ஒன்றிணைந்து உழைத்துவரும் அனைத்து குழுக்களுக்கும் தங்கள் ஆதரவை வழங்குவதுடன், அவர்களோடு எப்போதும் நெருக்கமாக இருப்பதாகவும், இங்கிலாந்து கிறிஸ்தவ தலைவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2020, 14:33