இயேசு தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார் - லூக்கா 13:13 இயேசு தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார் - லூக்கா 13:13 

விவிலியத்தேடல்: கூன் விழுந்த பெண் குணமடைதல் 4

ஓய்வுநாளன்று, தொழுகைக்கூடத்தில், கூன்விழுந்த பெண்மணியை இயேசு குணமாக்கியதும், அங்கு எழுந்த பிரச்சனையையும், அதை இயேசு துணிவுடன் சந்தித்ததையும் சிந்திப்போம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

லூக்கா நற்செய்தி – கூன் விழுந்த பெண் குணமடைதல் 4

அன்னை மரியாவின் பெயரால், கத்தோலிக்கத் திருஅவையில், ஒவ்வோர் ஆண்டும், 18 பொதுவான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இவற்றில், ஒன்று, செப்டம்பர் 15ம் தேதி சிறப்பிக்கப்படும், துயருறும் அன்னை மரியாவின் திருநாள்.

ஏனைய விழாக்கள், அன்னை மரியாவின் வாழ்வில் நிகழ்ந்த மகிழ்வான தருணங்களைக் கொண்டாடும் வேளையில், இந்தத் திருநாள் மட்டும், அன்னை அடைந்த துயரங்களை நினைவுகூரும் ஒரு நாளாக விளங்குகிறது. அத்துடன், இவ்விழா, செப்டம்பர் 14ம் தேதி சிறப்பிக்கப்படும் திருச்சிலுவை உயர்த்தப்பட்டத் திருநாளைத் தொடர்ந்து சிறப்பிக்கப்படுகிறது. ஒன்றையொன்று தொடர்ந்து வரும் இவ்விரு திருநாள்களும், துன்பம், நம் வாழ்வில் உருவாக்கும் தாக்கங்களைச் சிந்திக்க நம்மை அழைக்கின்றன. துயருறும் அன்னை மரியாவின் திருநாளையொட்டி, நாம் மேற்கொண்டிருக்கும் விவிலியத்தேடலில், கூன்விழுந்த பெண்ணைப்பற்றி சிந்திக்க நாம் வாய்ப்பு பெற்றுள்ளதை, ஓர் அருள்நிறைந்த தருணமாகக் கருதுவோம்.

18 ஆண்டுகளாக, "தீய ஆவி பிடித்து, உடல்நலம் குன்றி, சிறிதும் நிமிரமுடியாதவாறு கூன்விழுந்த நிலையில்" இருந்த அப்பெண்ணை, நம் பிரதிநிதியாக எண்ணிப்பார்க்கலாம். அப்பெண், ஓய்வுநாளன்று, இயேசுவை, தொழுகைக்கூடத்தில் சந்தித்த நிகழ்வு, நம்மில் பலருக்கு நிகழ்ந்துள்ள அனுபவங்களை நினைவுறுத்துகிறது. வாரம் முழுவதும், பல்வேறு பணிகளின் சுமைகளால் அழுத்தப்படும் நாம், வார இறுதியில், ஓய்வுநாளன்று, இறைவனைச் சந்திக்கச் செல்லும் வேளையில், அந்த வாரம் நம்மை வந்தடைந்த சுமைகளால், மனதளவில், ஏறத்தாழ, கூன்விழுந்த நிலையில் கோவிலுக்குச் செல்வதைப்போல் உணர்ந்திருக்கிறோம்.

கோவிட் 19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள பாரங்களால், நிமிரமுடியாத நிலையில் வாழ்ந்துவரும் வறியோரை, கூன்விழுந்த இப்பெண்மணியின் உருவில் நாம் காண்கிறோம். அப்பெண்மணியை இயேசு குணமாக்கி, அவர், நிமிர்ந்து நிற்பதற்கு உதவியதை சிந்திக்கும் வேளையில், வறியோரின் சுமைகளையும் அவர் இறக்கிவைத்து, அவர்களும் நிமிர்ந்துவாழ வழிசெய்யவேண்டும் என்ற வேண்டுதலோடு, நம் தேடலைத் தொடர்வோம்.

18 ஆண்டுகளாக தீய ஆவியினால் கட்டுண்டு கிடந்த பெண்ணை, இயேசு குணமாக்கியதும், அதுவும், ஓய்வுநாளன்று, தொழுகைக்கூடத்தில் குணமாக்கியதும், அங்கு ஒரு பிரச்சனை எழுகிறது. ஓய்வுநாளை மீறுவது பெரும் பிரச்சனை. அதையும், தொழுகைக்கூடத்தில் மீறுவது, மிகப்பெரும் பிரச்சனை. இயேசு ஏன் இப்படி செய்தார்? பிரச்சனைகளைத் தேடிச்சென்றாரா? மேலோட்டமாகப் பார்த்தால், அப்படித் தோன்றலாம். ஆனால், இன்னும் ஆழமாய்த் தேடினால், இயேசு, இவற்றை, ஒரு தீர்மானத்தோடு செய்தார் என்பது விளங்கும். தான் ஆற்றும் புதுமைகளால், தனியொருவர் மட்டும் பயன்பெற்றால் போதும் என இயேசு நினைத்திருந்தால், ஊருக்கு வெளியே, தனியொரு இடத்தில், அப்புதுமைகளைச் செய்திருக்கலாம். அல்லது, தேவையுள்ளவர் வீடுதேடிச் சென்று, புதுமைகளைச் செய்திருக்கலாம். அத்தகையப் புதுமைகளும் நற்செய்திகளில் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், ஓய்வுநாள் குறித்து, இயேசு தெளிவான எண்ணங்கள் கொண்டிருந்ததால், பிரச்சனைகளுக்கு மத்தியில், கேள்விகளுக்கு மத்தியில் புதுமைகளை ஆற்றுகிறார். இறைவனைக்குறித்தும், வாழ்வைக்குறித்தும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள், தொழுகைக்கூடங்களில் சொல்லித்தரப்பட்டதால், இயேசு, ஓய்வுநாள் குறித்த பாடங்களையும், தொழுகைக்கூடத்தில் தன் புதுமைகள் வழியே சொல்லித்தந்தார்.

ஓய்வுநாளன்று, தொழுகைக்கூடத்தில், கூன்விழுந்த பெண்மணியை இயேசு குணமாக்கியதும், அங்கு எழுந்த பிரச்சனையையும், அதை இயேசு துணிவுடன் சந்தித்ததையும், நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு விவரித்துள்ளார்:

லூக்கா 13:14-16

இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள்; ஓய்வுநாளில் வேண்டாம்” என்றார்.

ஆண்டவரோ அவரைப் பார்த்து, “வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வுநாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டுபோய்த் தண்ணீர் காட்டுவதில்லையோ? பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டிவைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வுநாளில் விடுவிப்பது முறையில்லையா?” என்று கேட்டார்.

“வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே” என்று, தொழுகைக்கூடத் தலைவர் கூறிய சொற்கள், கடவுள், சீனாய் மலையில், மோசேயிடம் கூறிய சொற்களை, மக்களுக்கு நினைவுறுத்தியதுபோல் அமைந்திருந்தன:

விடுதலைப் பயணம் 20:8-11

ஓய்வுநாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வுநாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

இறைவன் வழங்கிய இந்தக் கட்டளையில், 'ஓய்வுநாளில், யாரும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்' என்று கூறியதை, மக்களுக்கு விளக்குவதற்கு, இஸ்ரயேல் மதத்தலைவர்கள், ஒய்வுநாள் என்றால் என்ன, அன்று செய்யக்கூடிய, செய்யக்கூடாத வேலைகள் என்ன... என்ற விளக்கங்களை வழங்கிவந்தனர். நாளடைவில் இந்த விளக்கங்களே சட்டங்களாக மாறின.

ஒய்வுநாளில் என்ன செய்யலாம், செய்யக்கூடாதென்பதை விளக்க இவர்கள் தந்த எடுத்துக்காட்டுகள், பெரியதொரு பட்டியலாக நீண்டன. ஒய்வுநாளில் சமைக்கக்கூடாது, பொருளை சேகரிக்கக்கூடாது, எதையாவது கைதவறி கீழே போட்டுவிட்டால், குனிந்து எடுக்கக்கூடாது, பயணம் செய்யக்கூடாது, பாரம் சுமக்கக்கூடாது... இப்படி, ‘கூடாது’ என்ற இந்த பட்டியல் நீளமானது. அதேபோல், எவ்வளவு தூரம் நடக்கலாம், எவ்வளவு உண்ணலாம், குடிக்கலாம், என்று மிகவும் நுணுக்கமான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இறைவன் கொடுத்த ஒய்வுநாள் கட்டளையை விளக்குவதற்கென தரப்பட்ட இந்த விளக்கங்கள், அந்த அடிப்படை கட்டளையையே மறைத்துவிட்டன.

திருநாட்களில், ஊர்வலத்தில் கொண்டுசெல்ல இறைவன், அல்லது புனிதர்களின் திருஉருவைத் தேரில் ஏற்றுவோம். அந்தத் தேர் முழுவதையும் அலங்காரத்தால் நிரப்புவோம். இந்த அலங்காரங்கள், பலவேளைகளில், அந்த திருஉருவத்தையே மறைத்துவிடும். அத்துடன், இந்த அலங்காரங்களைச் செய்தவர்கள், அல்லது பூக்களுக்கு நிதியுதவி செய்தவர்களின் பெயர்கள் எழுதப்பட்ட பலகைகள் தேரில் வைக்கப்படும். இறைவனைவிட, புனிதர்களைவிட, அலங்காரமும், அவற்றைச் செய்தவர்களும் முக்கியமாகி விடுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும். இறைவன் தந்த ஒய்வுநாள் கட்டளையை மறைத்துவிடும் வண்ணம், அத்துடன் இணைக்கப்பட்ட விதிமுறைகளை, மதத்தலைவர்கள், பெரும் மலையாக குவித்துவிட்டனர். இதைத்தான் இயேசு கடுமையாக எதிர்த்தார்.

தொழுவத்தில் கட்டப்பட்டுள்ள மாட்டையோ, கழுதையையோ அவிழ்த்துக் கொண்டுபோய், அவற்றிற்கு தண்ணீர் காட்டுவதை ஒய்வுநாளில் செய்யும் மதத்தலைவர்கள், சாத்தானால் கட்டப்பட்ட ஒரு பெண்ணை விடுவித்த புதுமையை, ஒய்வுநாள் சட்டங்களை மீறும் செயலாகப் பார்க்கின்றனரே என்று, இயேசு, வருத்தத்துடன், சிறிது கோபத்துடன் கூறினார்.

மேலும், அந்தப் பெண்ணை, "ஆபிரகாமின் மகள்" என்று இயேசு குறிப்பிடுகிறார். 'ஆபிரகாமின் மகன்' என்ற சொற்றொடர், விவிலியத்தில் ஒரு சில இடங்களில் இடம்பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாக, லூக்கா நற்செய்தியில், வரிவசூலிப்பவரான சக்கேயுவின் இல்லத்தில் இயேசு உணவருந்தும் வேளையில், “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!” (லூக்கா 19:9) என்று கூறியிருப்பதை நாம் அறிவோம். அதேவண்ணம், தம்மிடம் திருமுழுக்குப் பெற வந்த மக்களிடம், திருமுழுக்கு யோவான், "ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உள்ளத்தில் சொல்லத் தொடங்காதீர்கள். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்" (லூக்கா 3:8) என்று கூறுகிறார். திருத்தூதர் பவுல், கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில், “ஆகவே நம்பிக்கைகொண்டு வாழ்பவர்களே ஆபிரகாமின் மக்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (கலா. 3:7,29) என்று கூறியுள்ளார்.

'ஆபிரகாமின் மகன், மக்கள், பிள்ளைகள்' என்று பலவாறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள இச்சொற்றொடர்கள் அனைத்தும், ஆண்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளன. ஆனால், 'ஆபிரகாமின் மகள்' என்ற சொற்றொடர், விவிலியம் முழுவதிலும், இந்த ஒரே ஓர் இடத்தில் மட்டுமே, பதிவு செய்யப்பட்டுள்ளது. கூன் விழுந்த அப்பெண்ணை, இயேசு, 'ஆபிரகாமின் மகள்' என்று குறிப்பிட்டது, சூழ இருந்த மக்களை ஆச்சரியத்திலும், மதத் தலைவர்களை, அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கும்.

கடவுள் தந்த ஒய்வுநாள் மனிதருக்கு நலம்தரும் வழிகளைச் சொல்லித்தர ஏற்படுத்தப்பட்டது. வேலை, சம்பாதிக்கும் பணம் ஆகியவற்றைவிட மேலான உண்மைகள் வாழ்க்கையில் உள்ளன. இறைவனை, பிறரை, குடும்பத்தை நினைத்துப் பார்க்க ஒய்வுநாள் தேவை. இதுதான் ஒய்வுநாளைப் பற்றி இறைவன் சொல்லித்தர விரும்பிய முக்கிய பாடம்.

ஆனால், ஒய்வுநாளை உருவாக்கிய கடவுளையே மறந்துவிட்டு, மதத்தலைவர்கள், மனிதாபிமானமற்ற முறையில் ஒய்வுநாளை வழிபட ஆரம்பித்தது, இயேசுவை அதிகமாய் பாதித்திருக்கவேண்டும். எனவேதான் அவர், ஒய்வுநாள் விதிகளை மீறினார். அதுவும் தொழுகைக்கூடத்தில் ஒய்வுநாள் விதிகளை மீறி, கூன் விழுந்த பெண்ணுக்கு நலமளித்தார். அதைத் தடுத்த தொழுகைக்கூடத் தலைவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் கடுமையானச் சொற்களில் சவால் விடுத்தார். அவர் தந்த அதிர்ச்சி வைத்தியம் பலன் தந்தது என்பதை, இந்தப் புதுமையின் இறுதி வரிகள் கூறுகின்றன:

இயேசு இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர். (லூக்கா 13:17)

நலம்பெற்ற அந்தப் பெண்ணும், அப்புதுமையைப் பார்த்த மனிதர்களும் கடவுளைப் புகழ்ந்தபோது, ஒய்வுநாளின் தலைவனாகிய கடவுளை மீண்டும் மக்கள் மனங்களில் அரியணை ஏற்றிய மகிழ்வு, இயேசுவுக்கு உருவாகியிருக்கும்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2020, 13:58