தேடுதல்

“இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று இயேசு கேட்டார். மத்தேயு 21:31 “இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று இயேசு கேட்டார். மத்தேயு 21:31 

பொதுக்காலம் 26ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக நாம் செயல்பட்டிருக்கிறோம். முரண்பாடான இந்த மனித நிலையைச் சிந்தித்துப்பார்க்க, இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 26ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

செல்வம் மிகுந்த இளையவர் ஒருவர், அதிக நோயுற்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. சோதனைகளின் முடிவுகளை எடுத்துக்கொண்டு, இளையவரின் அறைக்குச் சென்ற தலைமை மருத்துவர்,  அவரிடம், "உண்மையைச் சொல்லவேண்டுமெனில், நீங்கள் குணமடையும் வாய்ப்புக்கள் மிக, மிகக் குறைவாகவே உள்ளன" என்று வெளிப்படையாகக் கூறினார்.

இளையவர், கண்ணீர்பொங்க, மருத்துவரின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு, "டாக்டர், எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள். நான் குணமாகி வீடுதிரும்பியதும், உங்கள் மருத்துவமனையின் கட்டட நிதிக்காக ஒரு கோடி ரூபாய் தருகிறேன்" என்று கூறினார். அடுத்த ஒரு வாரத்தில், இளையவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இரு வாரங்கள் சென்று, அவர், தன் வீட்டுக்குத் திரும்பிச்சென்றார்.

சில மாதங்கள் கடந்தன. ஒரு நாள், அந்த மருத்துவர், இளையவரை ஒரு விருந்தில் சந்தித்தார். அவர், அந்த இளையவரிடம், "நீங்கள் மருத்துவமனையில் இருந்தபோது, எங்கள் கட்டட நிதிக்காக ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொன்னீர்களே, நினைவிருக்கிறதா? இப்போது, எங்களுக்கு அது மிகவும் உதவியாக இருக்கும்" என்று கூறினார். இளையவர் மருத்துவரிடம், "நான் அப்படியா சொன்னேன்? டாக்டர், உங்களுக்கே தெரியும். நான் மருத்துவமனையில் இருந்தபோது, நோயின் உச்சத்தில் எதையாவது உளறியிருப்பேன்" என்று கூறியபின், அவ்விடத்தைவிட்டு அகன்றார்.

சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். நாமும், அவ்வாறு செயல்பட்டிருக்கிறோம். முரண்பாடான இந்த மனித நிலையைச் சிந்தித்துப்பார்க்க, இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது. சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று, என வாழும் இரு மகன்களைப்பற்றிய ஓர் உவமையை, இன்றைய நற்செய்தியில், இயேசு நமக்கு வழங்குகிறார்.

இந்த உவமையில் இயேசு கூறும், இரு மகன்களுமே, தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை. ஒருவர் முதலில் மறுத்துவிட்டு, பின்னர் நிறைவேற்றுகிறார். மற்றொருவர், உடனே செய்வதாகச் சொல்லிவிட்டு, ஒன்றும் செய்யாமல் போகிறார். இவ்விருவரில், இரண்டாவது மகன், கொடுத்த வாக்கை காக்கத்தவறிய அரசியல் தலைவர்களை, நம் நினைவுக்குக் கொணர்கிறார். இன்றைய உலகத் தலைவர்களில் பலர், கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போனது மட்டுமல்லாமல், இந்தக் கொள்ளைநோய் காலத்தை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, தங்கள் அதிகாரத்தை இன்னும் உறுதிப்படுத்தி வருகின்றனர் என்ற செய்திகள் நமக்கு கவலை தருகின்றன.

இந்த உவமையில், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற விருப்பமில்லை என்று முதலில் சொன்ன மூத்தவர், இறுதியில் அவர் விருப்பத்தை நிறைவேற்றினார். இவரை, 'செயல் வீரர்' என்று நாம் அழைக்கலாம். "நான் போகிறேன் ஐயா" என்று தேனொழுகச் சொல்லிவிட்டு, ஒன்றும் செய்யாத மற்றொரு மகனை, 'வாய்ச்சொல் வீரர்' என்று அழைக்கலாம்.

'வாய்ச்சொல் வீரர்' என்ற அடைமொழியைக் கேட்டதும், நம் மனக்கண்களில் பலர் ஊர்வலமாகச் சென்றிருப்பர். குறிப்பாக, அரசியல் தலைவர்களை, 'வாய்ச்சொல் வீரர்கள்' என்று எளிதில் முத்திரை குத்தியிருப்போம். அது உண்மைதான். ஆனால், பிறரை முத்திரை குத்துவதோடு நம் பொறுப்பு முடிந்துவிடுவதில்லை. அடுத்தவரை முத்திரை குத்தும் பொழுதுபோக்கிலிருந்து விடுபட்டு, ஓர் ஆன்ம ஆய்வை மேற்கொண்டால், நமக்குள்ளேயே, செயல்வீரரும், வாய்ச்சொல் வீரரும் மோதிக்கொள்வதை உணரலாம்.

நம் ஆன்ம ஆய்வினை, இறைவனிடம் ஒரு வேண்டுதலாக எழுப்புவோம். இந்த வேண்டுதல், அமெரிக்காவில், கான்சாஸ் மாநில மக்களின் பிரதிநிதிகள் அவையைத் துவக்கிவைக்க சொல்லப்பட்ட ஒரு செபம். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் கொண்ட போதகர், Joe Wright அவர்கள் சொன்ன செபம், அங்கிருந்தோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாத சிலர், செனட் அவையைவிட்டு வெளியேறினர்.

அரசியல் தலைவர்களுக்கு சவால் விடும் வண்ணம் அமைந்த இந்த செபம், நமக்கும் சவால்கள் விடுக்கின்றது. அரசியல்வாதிகளில் பலர், சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற இரட்டை வேடமிட்டு வாழ்கின்றனர் என்று குறைகூறுகிறோம். அத்தகைய இரட்டைவேடம் நம் வாழ்க்கையிலும் இடம்பெற்றுள்ளதா என்ற உண்மையான ஆழ்மனத் தேடலில் ஈடுபட, இந்த செபம் உதவியாக இருக்கும். இதோ, போதகர், Joe Wright அவர்கள் சொன்ன செபம்:

வானகத் தந்தையே, உம்மிடம் மன்னிப்பு வேண்டி, உமது ஒளியையும், வழிகாட்டுதலையும் தேடி இங்கு கூடிவந்துள்ளோம். 'தீயனவற்றை நல்லவை என்று சொல்வோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு' என்று நீர் கூறும் வார்த்தைகளை நாங்கள் அறிவோம். அவ்விதமே நாங்கள் செய்துள்ளோம் என்பதையும் உணர்கிறோம்.

எங்கள் ஆன்மீகச் சமநிலையைத் தொலைத்துவிட்டதால், எங்கள் மதிப்பீடுகளை மாற்றி அமைத்துள்ளோம்.

ஏழைகளை அநியாயமாய் வஞ்சித்துவிட்டு, அதை முன்னேற்றம் என்று சொன்னோம்.

கருவிலுள்ள குழந்தைகளைக் கொன்றுவிட்டு, அது அவரவர் தனிப்பட்ட உரிமை என்று சொன்னோம்.

குழந்தைகளைக் கண்டிக்கத் தவறிவிட்டு, அவர்களது சுயமரியாதையை வளர்ப்பதாகக் கூறினோம்.

அதிகாரத்தைத் தவறாகக் கையாண்டுவிட்டு, அதை அரசியல் என்றோம்.

அடுத்தவர் உடைமைகள் மேல் பேராசையை வளர்த்துவிட்டு, அதை வாழ்வின் இலட்சியம் என்று கூறினோம்.

ஆபாசங்களால் சமுதாயச் சிந்தனையைக் களங்கப்படுத்திவிட்டு, அதை, பேச்சுரிமை என்று சொன்னோம்.

எங்கள் உள்ளங்களை ஆராய்ந்து, எங்களைப் பாவங்களினின்று கழவி, விடுதலை தாரும். ஆமென்.

இரு மகன்களை மையப்படுத்திய இந்த உவமையை இயேசு சொன்ன சூழலையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். மத்தேயு நற்செய்தி, 21ம் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த உவமையை சொல்வதற்கு முன், இயேசு, எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்தார். அவர் எந்த அதிகாரத்தில், அதைச் செய்தார் என்று, யூதகுருக்கள் கேள்விகேட்டபோது, அந்தக் கேள்வியில் பொதிந்திருந்த வன்மத்தை உணர்ந்த இயேசு, அக்கேள்விக்கு தான் விடையளிக்கப் போவதில்லை என்று கூறினார். இதைத் தொடர்ந்து, இயேசு இரு மகன்கள் உவமையைக் கூறினார். இந்த உவமையைக் கூறியபின், அங்கு நிகழ்ந்த உரையாடலை, நற்செய்தியாளர் மத்தேயு இவ்வாறு கூறியுள்ளார்:

மத்தேயு 21: 31-32

“இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று இயேசு கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர். “வரிதண்டுவோரும், விலைமகளிரும், உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

இயேசு சொன்ன இந்த வார்த்தைகள் அவரைச் சுற்றியிருந்த பலரது உள்ளங்களில், சாட்டையடிபோல விழுந்திருக்கும். இறையாட்சியில் தங்களுக்கு மட்டுமே முன்னுரிமை உண்டு, வரிதண்டுவோரும், விலைமகளிரும் இறையாட்சியில் இடம்பெற இயலாது என்று நினைத்திருந்த மதத்தலைவர்களின் செவிகளில், இயேசு கூறிய இச்சொற்கள், பழுக்கக் காய்ச்சிய ஈட்டிபோல் பாய்ந்திருக்க வேண்டும்.

யூதர்களுக்கும், யூத மதக்குருக்களுக்கும் இறையரசில் இடமில்லை என்று மட்டும் இயேசு சொல்லிவிட்டு போயிருக்கலாம். ஆனால், அதற்குப் பதிலாக, “யாரை நீங்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்று நினைக்கிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு முன்னதாகவே இறையரசில் இடம் பெறுவர்” என்று இயேசு சொன்னார். இந்தச் சாட்டையடிகளுக்குப் பிறகாகிலும் அவர்கள் விழித்தெழ வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.

நம்மை உயர்வானவர்களாகவும், இறைவனுக்கு நெருங்கியவர்களாகவும், மற்றவரை சமுதாயத்தின் குப்பைகளாகவும் நாம் அவ்வப்போது எண்ணியிருந்தால், தீர்ப்பிட்டிருந்தால், இயேசுவின் இந்த சாட்டையடிகளை நாமும் பணிவோடு ஏற்றுக்கொண்டு, பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.

மீண்டும், இயேசு சொன்ன அந்த உவமைக்குத் திரும்புவோம். ‘நான் போகிறேன் ஐயா!’ என்று பணிவோடு, ஆனால் உள்ளத்தில் வேறு எண்ணங்களோடு பேசிய அந்த இளைய மகனை நினைத்துப் பார்க்கும்போது, “உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுவோரை” நினைக்கத் தூண்டுகிறது. அவர்களால், நம் வாழ்வில் உருவான வேதனைகளை நினைக்கத் தோன்றுகிறது. இந்த வேதனைகள் இன்னும் ஆறாமல் இருந்தால், நம்மை இறைவன் குணமாக்கவேண்டும் என்று மன்றாடுவோம். உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசியதன் விளைவாக, நாம் மற்றவர்களை புண்படுத்தியிருந்தால், இறைவனிடமும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்பு கேட்பது, இன்று பொருத்தமாக இருக்கும்.

உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாமல், நேர்மையாய், உண்மையாய், அன்பாய் நடந்துகொள்ளும் வரத்தை வள்ளலார் அன்று இறைவனிடம் வேண்டினார். அவரது வார்த்தைகளின் துணையோடு, நாமும், நம் இறைவனை வேண்டுவோம்:

“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்றஉத்தமர் தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மைபேசாதிருக்க வேண்டும்…. 

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்றவாழ்வில் நான் வாழவேண்டும்...”

ஞாயிறு சிந்தனை நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியது வத்திக்கான் வானொலி.

அன்பு இதயங்களே, இறைவன் தந்த ஓர் அற்புத கொடையான குரல்வளத்தால், கோடான கோடி உள்ளங்களைத் தொட்ட பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்கள், செப்டம்பர் 25, இவ்வெள்ளியன்று, தன் 75வது வயதில் தன் உலக வாழ்வை நிறைவுசெய்தார். அவர் பாடியுள்ள பல்லாயிரம் பாடல்களில், கிறிஸ்தவப் பாடல்களும் அடங்கும்.

இறைவன் அவருக்கு நிறையமைதியை அருளவேண்டும் என்றும், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதல் வழங்கவேண்டும் என்றும், வத்திக்கான் வானொலி குடும்பத்தின் சார்பில் இறை வேண்டல்செய்து, இயேசுவைப் போற்றி S.P.பாலசுப்ரமணியம் அவர்கள், பாடியுள்ள ஒரு பாடலை, ஒலிபரப்பு செய்கிறோம்.

26 September 2020, 14:00