இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்  

சமய மற்றும், இனக் கட்சிகள் தடைசெய்யப்பட வேண்டும்

ஒரு மதம், அடுத்தவரை அழிக்கின்றது என்றால், அதன் அர்த்தம் என்ன? அத்தகைய கடவுள் எங்கே இருக்கின்றார் என்று காட்டுங்கள் - கர்தினால் மால்கம் இரஞ்சித்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

நாட்டை பிளவுபடுத்தும், சமய மற்றும், இனக் கட்சிகள் தடைசெய்யப்பட வேண்டும் என்று, இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், தேசிய நோயாளர் நாளன்று ஆற்றிய மறையுரையில் வலியுறுத்தினார்.

இலங்கையின் தேசிய நோயாளர் நாளையொட்டி, Tewatteவிலுள்ள, இலங்கை அன்னை மரியா திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய, கொழும்பு பேராயரான, கர்தினால் இரஞ்சித் அவர்கள், அந்நாட்டில், சமயத் தீவிரவாதம் மிகவும் ஆபத்தான முறையில் பரவி வருகின்றது என்று கூறினார்.

கடந்த ஆண்டு உயிர்ப்புப் பெருவிழா அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றியும், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் நிலவும் மந்தநிலை பற்றியும் குறிப்பிட்ட கர்தினால் இரஞ்சித் அவர்கள், மதம், மக்கள் மத்தியில் பிரிவினைகளை உருவாக்கவோ அல்லது, அவர்களைக் கொல்வதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது என்று கூறினார்.

ஒரு மதம், அடுத்தவரை அழிக்கின்றது என்றால், அதன் அர்த்தம் என்ன? அத்தகைய கடவுள் எங்கே இருக்கின்றார் என்று காட்டுங்கள் என்று சவால்விடுத்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு, மதத் தலைவர்கள் பொறுப்பாக இருந்தால், அது அதிர்ச்சி தருகிறது என்று கூறினார்.

கடந்த ஆண்டு உயிர்ப்புப் பெருவிழா அன்று, இரு கத்தோலிக்க ஆலயங்களும், ஒரு கிறிஸ்தவ சபை ஆலயமும், மூன்று பயணியர் விடுதிகளும் பயங்கரவாதத்தால் தாக்கப்பட்டன. இவற்றில் 45 வெளிநாட்டவர் உட்பட ஏறத்தாழ 280 பேர் இறந்தனர்.

இவை நடந்து ஓராண்டு ஆகியும், இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றும், இந்த தாக்குதல்களில் குண்டுகளை வைத்தவர்கள் யார், இதை திட்டமிட்டவர்கள் யார், இதற்கு நிதியுதவி செய்தவர்கள் யார் என்பதை அதிகாரிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும், இலங்கை கர்தினால் கூறினார். (Asia News)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2020, 13:38