இஸ்பெயின் விசாரணையின்போது Inocente Orlando Montano இஸ்பெயின் விசாரணையின்போது Inocente Orlando Montano 

இயேசு சபை அருள்பணியாளர்களை கொன்றவருக்கு 133 ஆண்டு சிறை

எல் சால்வதோர் நாட்டில் நடந்த கொலைகளுக்கு, 30 ஆண்டுகளுக்குப்பின், இஸ்பெயினில் வழங்கப்பட்டுள்ள தண்டனைத் தீர்ப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

எல் சால்வதோர் நாட்டின் தலைநகர், சான் சால்வதோரில் இயங்கிவரும், மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில், 1989ம் ஆண்டு, ஐந்து இயேசு சபை அருள்பணியாளர்கள், மற்றும், இரு பொதுநிலை பணியாளர்கள் ஆகியோர் கொல்லப்பட்ட நிகழ்வு, இராணுவ உயர் அதிகாரி ஒருவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தீர்ப்பளித்துள்ளது, இஸ்பானிய நீதிமன்றம்.

எல் சால்வதோர் நாட்டு வழக்காடு மன்றத்தில் நீதி கிடைக்காத நிலையில், கொல்லப்பட்ட இயேசு சபை அருள்பணியாளர்கள், இஸ்பானிய நாட்டவர்கள் என்பதால், இவ்வழக்கு இஸ்பானிய நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்ததில், தற்போது, Inocente Orlando Montano, என்ற இராணுவ உயர் அதிகாரியே இக்கொலைகளை திட்டமிட்டு, இராணுவ வீரர்களின் துணைகொண்டு நிறைவேற்றினார் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஒப்புரவை உருவாக்க அயராது உழைத்த இயேசு சபை அருள்பணியாளர்களை, போராட்டக்காரர்களுக்கு உதவிய துரோகிகள் என இராணுவ உயர் அதிகாரி Montano கருதியதால், அவர்களைக் கொலைசெய்ய திட்டமிட்டதாக, அவருடன் பணியாற்றியவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சான் சால்வதோரில் இயங்கும் மத்திய அமெரிக்க பல்கலைக்கழகத்தின் அதிபர், இயேசு சபை அருள்பணியாளர்  Ignacio Ellacuria, மற்றும், இயேசு சபை அருள்பணியாளர்கள் Juan Ramón Moreno, Amando López,  Segundo Montes, Joaquín López, மற்றும், இயேசு சபை இல்லத்தில் பணியாற்றிய Julia Elba Ramos என்ற பெண்மணி, அவரின் மகள் Celina ஆகிய எழுவரும் 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி, பல்கலைக்கழக வளாகத்திலேயே கொலைசெய்யப்பட்டது குறித்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்ந்துவந்த எல்சல்வதோர் இராணுவ உயர் அதிகாரி Montano அவர்கள், 2017ம் ஆண்டு இஸ்பெயினுக்கு கொணரப்பட்டு, தொடர்ந்து இடம்பெற்ற வழக்கில் தற்போது, அவருக்கு, 133 ஆண்டுகள், நான்கு மாதங்கள், ஐந்து நாட்கள் சிறைத்தண்டனை என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எல் சால்வதோர் நாட்டில் பல ஆண்டுகளாக, இடது சாரி புரட்சியாளர்களுக்கும், வலதுசாரி மரணப்படைகளுக்கும் இடையே  இடம்பெற்றுவந்த உள்நாட்டுப்போர், அமைதி ஒப்பந்தம் வழியாக 1992ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தபோது, 75,000 பேரை பலிவாங்கியிருந்ததோடு, பல ஆயிரக்கணக்கான மக்களை நாட்டைவிட்டு வெளியேறவும் வழிவகுத்தது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2020, 13:04