லெஸ்போஸ் தீவில் வாழும் புலம்பெயர்ந்த மக்களுக்கு மருத்துவ பணிகள் லெஸ்போஸ் தீவில் வாழும் புலம்பெயர்ந்த மக்களுக்கு மருத்துவ பணிகள் 

புலம்பெயர்ந்தோர் குறித்து ஐரோப்பிய திருஅவைகளின் கடமைகள்

லெஸ்போஸ் முகாம் மக்கள் குறித்து நீதியான முடிவுகள் எடுக்காமல் காலம் தாழ்த்துவது என்பது, ஐரோப்பிய சமூகத்திற்கு இழுக்காகவும், வரலாற்றில் பெரும் கறையாகவும் இருக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிரேக்கத்தின் லெஸ்போஸ் தீவில் வாழும் புலம்பெயர்ந்த மக்களுள், நோயாளிகள், பெண்கள், குழந்தைகள் என மிகவும் வலிமையற்றவர்களாக வாழ்வோர் முதலில் வரவேற்கப்பட்டு காப்பாற்றப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன, JRS எனப்படும் இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோர் பணி அமைப்பு, சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு, மற்றும், Scalabrinian துறவு சபை.

இந்த மூன்று கத்தோலிக்க பணி அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், புலம்பெயர்ந்து இத்தீவில் வாழ்ந்து, தற்போது பெரும் தீயால் தங்கள் உறைவிடங்களை மீண்டும் இழந்து வாழும் மக்களைக் காப்பாற்றுவது குறித்து, உடனடி முடிவுகளை எடுக்கவேண்டிய நேரம் வந்துள்ளது என்றனர்.

அனைவரின் நலனையும் மனதில்கொண்டு நீதியான முடிவுகள் எடுக்காமல் காலம் தாழ்த்துவது என்பது, மனித உரிமைகளை மதிப்பதற்கு பெயர்போன ஐரோப்பிய சமூகத்திற்கு இழுக்காகவும், வரலாற்றில் பெரும் கறையாகவும் இருக்கும் எனவும், அகதிகளோடு பணிபுரியும், இந்த மூன்று அமைப்புகளின் அறிக்கை உரைக்கிறது.

Moria முகாம்களில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தங்குமிடங்கள் அமைத்துக் கொடுப்பதோடு, துருக்கியிலிருந்து புதிதாக அடைக்கலம் தேடிவரும் மக்களையும் அவர்களுக்கேயுரிய மனித மாண்புடன் வரவேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கும் இந்த கத்தோலிக்க பணி அமைப்புகள், 2016ம் ஆண்டு லெஸ்போஸ் தீவுக்கு வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து மூன்று குடும்பங்களை விமானத்தில் உரோம் நகருக்கு அழைத்துச் சென்றதைக் குறிப்பிட்டு, இத்தகைய எடுத்துக்காட்டை ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டும் என விண்ணப்பித்தன.

ஐரோப்பிய திருஅவைகள், இந்த லெஸ்போஸ் தீவு புலம்பெயர்ந்தோரை வரவேற்பது குறித்து, அவரவர் நாட்டு அரசுகளை வலியுறுத்தும் என்ற நம்பிக்கையையும், இயேசு சபை புலம்பெயர்ந்தோர் அமைப்பு, சான் எஜிதியோ அமைப்பு, Scalabrini துறவு சபை ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.

கடந்த ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், லெஸ்போஸ் தீவில் வாழும் புலம்பெயர்ந்தோரை சிறப்பான விதத்தில் குறிப்பிட்டு, அவர்களுடன் ஒருமைப்பாட்டை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2020, 14:02