தேடுதல்

திருத்தந்தையர்களின் தலைமை ஆலயமான ஜான் லாத்ரன் திருத்தந்தையர்களின் தலைமை ஆலயமான ஜான் லாத்ரன் 

திருத்தந்தையர் வரலாறு : அடிமைகளின் விடுதலையில் திருஅவை

உரோமிலும், ஏன், அரசவை பதவிகளிலும் கிறிஸ்தவர்கள் பலம் பெற்று வருவதை விரும்பாத பேரரசர், கிறிஸ்தவ மறைக்கு மக்கள் மனம் திரும்புவதை சட்டத்தின் வழி தடுத்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

வரலாற்றில் 14வது திருத்தந்தையாக பொறுப்பேற்றுக்கொண்டவர், புனித முதலாம் விக்டர். இவர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். அதாவது, உரோமைய ஆட்சிக்கு உட்பட்ட ஆப்ரிக்க பகுதியிலிருந்து வந்தவர். இவர், பேரரசர் Commodusன் 7ம் ஆண்டு ஆட்சிகாலத்தில் பொறுப்பேற்றார் என வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. இவர் பொறுப்பேற்றது, 186, 187, மற்றும், 189ம் ஆண்டு என வெவ்வேறு ஆண்டுகள் கூறப்படுவதால், அதையொட்டி, 9 முதல் 11 ஆண்டுகள், புனித முதலாம் விக்டர் திருத்தந்தையாக திருஅவையை வழிநடத்திச் சென்றார் என அறிகிறோம்.

பேரரசர் Commodusன் இறுதி ஆண்டுகளிலும் பேரரசர் Septiminus Severusன் துவக்க காலங்களிலும் உரோமையக் கிறிஸ்தவர்கள் எவ்வித வன்முறைகளுக்கும் உள்ளாகாமல், அமைதியிலேயே வாழ்ந்தனர். இங்கு நாம் சிறு கதை ஒன்றை கூறவேண்டும். அதாவது, பேரரசர் Commodusன் மனைவி கொல்லப்பட்டபின், Marcia என்ற பெண், திருமணம் புரியாமலேயே பேரரசருடன் வாழ்ந்துவந்தார். Marciaவுக்கு கிறிஸ்தவர்களைப் பிடிக்கும். எனவே, இவர் ஒருநாள், திருத்தந்தை முதலாம் விக்டர் அவர்களை, அரசவைக்கு அழைத்து, அவரிடம் Sardegna தீவில் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக தண்டனை அனுபவித்து வந்த கிறிஸ்தவர்களின் பெயர்களைக் கேட்டார். திருத்தந்தையும் ஒரு பெரிய பட்டியலை வழங்கினார். அப்பட்டியலில் இருந்தோர் அனைவரும், முந்தையப் பேரரசர்களின் கிறிஸ்தவ விரோதப்போக்குகளால், Sardegna தீவில், சுரங்கத்தொழிலுக்கு தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். இந்த பெயர் பட்டியலை பெற்ற Marcia, பேரரசர் Commodusடம் நம்பகமாகப்பேசி இவர்களின் விடுதலையைப் பெற்றுத் தந்தார். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுள் ஒருவர் Callixtus. இவரைப்பற்றி பிறகு பார்ப்போம்.

இயேசு உயிர்ப்பை எந்நாளில் கொண்டாடுவது என்ற பிரச்சனை முந்தைய திருத்தந்தையர்களின் காலத்தில் துவங்கி திருத்தந்தை, புனித விக்டர் அவர்களின் காலத்திலும் தொடர்ந்தது. ஞாயிறன்றுதான் கொண்டாடப்படவேண்டும் என்பது, திருத்தந்தை புனித விக்டர் அவர்களின் வாதம். ஆனால் கிழக்கத்திய திருஅவையோ, Nissan மாதத்தின் 14ம் நாளில்தான் இயேசு உயிர்ப்பு கொண்டாடப்படவேண்டும் என்பதில்  விடாப்பிடியாக நின்றது. சிறிது பிளவு ஏற்படும் சூழுல் ஏற்பட்டது. ஆனால், இந்த முரண்பாடு அதிக காலம் நீடிக்கவில்லை. இதற்கிடையில், கான்ஸ்டாண்டிநோபிளைச் சேர்ந்த, Theodotus என்ற பணக்கார கிறிஸ்தவர் ஒருவர், கிறிஸ்துவைக் குறித்த தவறான கோட்பாட்டை பரப்ப ஆரம்பித்தார். இயேசு ஒரு மனிதர்தான், அவரது திருமுழுக்கின்போதுதான் தூய ஆவியார், இயற்ககைக்கு அப்பாற்பட்ட சக்திகளை அவருக்கு வழங்கினார் என்பது அவரது போதனையாக இருந்தது. இதை, திருத்தந்தை புனித விக்டர் அவர்கள் வன்மையாக கண்டித்தார். இதனால், Theodotus, தன்னை பின்பற்றுபவர்களுடன் புதிய சபை ஒன்றைத் துவக்கி, சிறிது காலம் அந்த சபை உயிரோடு இருந்தது.

திருத்தந்தை புனித விக்டர் அவர்களின் மறைவுக்குப்பின், பெரிய அளவில் இறையியல் கல்வி இல்லாத புனித Zephyrinus அவர்கள், திருத்தந்தையானார். 198 முதல் 217 வரை பணியாற்றிய இவர், மிகவும் எளிமையானவராக வாழ்ந்தார். Sardegna தீவிலிருந்து விடுவிக்கப்பட்டு, உரோமுக்கு சிறிது வெளியேயுள்ள Antium (தற்போதய Anzio) என்ற இடத்தில் வாழ்ந்துவந்த Callixtus என்பவரை உரோமுக்கு அழைத்து, கிறிஸ்தவர்களின் கல்லறைத் தோட்டத்தின் காவலராக அவரை நியமித்தார், திருத்தந்தை Zephyrinus. இக்காலத்தில்  Hippolytus என்ற இறையியலார், திருஅவையின் படிப்பினைகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டு, இயேசுவின் தெய்வீகம் குறித்த தப்பான கோட்பாடுகளை பரப்பி வந்தார். அதேவேளையில், பேரரசர் Septimus Severus கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் திரும்பத் துவங்கினார். கிறிஸ்தவர்கள் உரோமிலும், ஏன், அரசவை பதவிகளிலும் பலம் பெற்று வருவதை விரும்பாத பேரரசர், கிறிஸ்தவ மறைக்கு மக்கள் மனம் திரும்புவதை சட்டத்தின் வழி தடுத்தார். இத்தகைய ஒரு பின்னணி இருக்கும்போது, திருத்தந்தை Zephyrinus அவர்கள் காலமானார்.

இவரைத் தொடர்ந்து, 16வது திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற Callixtus அவர்களின் வாழ்க்கை, மிகவும் சுவாரஸ்யமானது. Carpophorus என்ற கிறிஸ்தவரிடம், அடிமையாக இருந்தவர் Callixtus. இவரிடம் தன் வங்கியை நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தார் Carpophorus. Callixtus என்ற இந்த அடிமை, வங்கி வழியாக பலருக்கும் பணம் கடன் கொடுத்தார். இவ்வாறு கடன் பெற்றவர்களுள் பெரும்பான்மையினர் யூதர்கள். எல்லா பணமும் திரும்பி வரவில்லை. வங்கி உடைந்தது. பயந்துபோன Callixtus அவர்கள், கப்பலேறி தப்பியோடினார். இவரது முதலாளி Carpophorus, இன்னொரு படகில் இவரை விரட்டிக்கொண்டு போக, பயந்துபோன Callixtus கப்பலிலிருந்து நீரில் குதித்தார். ஆனால், மீட்கப்பட்டு உரோமுக்கு கொணரப்பட்டு, செக்கிழுக்கும் தண்டனை வழங்கப்பட்டார். நான் எப்படியும் பணத்தை மீட்டுத்தருவேன் என வாக்குறுதி அளித்ததால் விடுதலை வழங்கப்பட்டு, காலக்கெடுவும் கொடுக்கப்பட்டார். தன் வங்கியில் கடன் பெற்றவர்கள் யூதர்கள் என்பதால், நேரடியாக யூத கோவிலுக்குச் சென்று, அவர்கள் முன்னால் நின்று, பணத்தை திரும்பிக் கொடுக்கும்படி சப்தம் போட்டார். பணத்தை திரும்ப கொடுக்க விரும்பாத யூதர்கள் இணைந்து, இவர் யூதக்கோவிலை தாக்கியதாக குற்றம் சாட்டி தண்டனை பெற வைத்து, Sardegna தீவின் சுரங்கத்தில் பணிபுரிய அனுப்பி வைத்தனர். இது முன் கதை.

இதற்கு பின்னர் இவர் திருத்தந்தை விக்டரின் காலத்தில், Marciaவின் முயற்சியின் பேரில் விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுடன் இணைந்து விடுவிக்கப்பட்டதும், திருத்தந்தை Zephyrinusன் காலத்தில் பதவியேற்றதும் நாம் அறிந்ததே. இந்த  Callixtusதான், அதாவது, அடிமையாக இருந்து மக்களால் ஏமாற்றப்பட்டு, பணத்தையும் வேலையையும் இழந்து, பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, சுரங்கத் தொழிலாளியாக இருந்த இவர்தான், திருஅவையின் 16வது திருத்தந்தையானார்.

எப்பெரும் பாவிகளும் திருஅவைக்குள் திரும்பிவருவதை வரவேற்றார், இத்திருத்தந்தை. ஏழையென்றும், அடிமையென்றும், பணக்காரனென்றும் பாகுபாடுகள் திருஅவையில் இல்லை என்றார். Hippolytus என்ற இறையியலாளர் இதனை எதிர்த்தார். திருத்தந்தை Callixtusக்கு எதிராகச்சென்று, தன்னைத்தானே உரோம் ஆயராக முடிசூட்டிக் கொண்டு, தானே திருத்தந்தை எனவும் அறிவித்தார் Hippolytus. இரண்டு திருத்தந்தையர்களின் ஆட்சி, முதலில் துவங்கியது, திருத்தந்தை Callixtus அவர்களின் காலத்தில்தான்.

இந்த பிரச்சனைகள் போதாதென்று, பேரரசரின் கோபத்திற்கும் கிறிஸ்தவர்கள் உள்ளானார்கள். கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலகமும் உரோமில் துவங்கியது. இந்த கலகத்தில் திருத்தந்தை Callixtus கொல்லப்பட்டு, அவர் உடல் கிணற்றில் வீசப்பட்டு, கல்லால் எறியப்பட்டதாக ஒரு வரலாற்று ஏடு கூறுகிறது. இவர் மறைசாட்சியாக உயிரிழந்தார் என்பது உறுதி. ஆனால், எத்தகைய மரணமடைந்தார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இவர் இறப்பிற்குப் பின்னரும், திருத்தந்தையர்களுக்கு எதிரான Hippolytus என்ற எதிர் திருத்தந்தையின் ஆட்சி தொடர்ந்தது.

அன்பு நெஞ்சங்களே, வரலாற்றில் முதன்முறையாக ஒரு திருத்தந்தை, தானே முன்வந்து பதவி விலகியது, முதல் எதிர் திருத்தந்தை திருஅவையோடு ஒப்புரவாகியது, 40 நாட்களே ஒரு திருத்தந்தை வழிநடத்தியது, என்பவை குறித்து, வரும் வாரம் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2020, 14:57