சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட மரம் நடுதல் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட மரம் நடுதல் 

பிலிப்பீன்ஸ் மறைமாவட்டத்தில் ஒரே நாளில் 60,000 மரக்கன்றுகள்

மரங்கள் நடுவது, படைப்பை அன்புகூரவும், படைப்பின்மீது அக்கறையை வெளிப்படுத்தவும் இளையோருக்கு ஒரு நல்ல வாய்ப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகம் முழுவதும் கத்தோலிக்கத் திருஅவையில் படைப்பின் காலம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிலிப்பீன்ஸின் Tagbilaran மறைமாவட்டம், ஒரே நாளில் 60,000 மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளது.

செப்டம்பர், முதல் தேதி துவங்கி, அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் திருவிழாவான அக்டோபர் 4ம் தேதி முடிய சிறப்பிக்கப்படும் படைப்பின் காலத்தையொட்டி, அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர், குறிப்பாக, இளையோரும் சிறாரும் இணைந்து, ஒரே நாளில் 60,000 மரக்கன்றுகளை, மறைமாவட்டம் முழுவதும் நட்டுள்ளதாக அறிவித்த Tagbilaran மறைமாவட்ட ஆயர் Alberto Uy அவர்கள், படைப்பை அன்புகூரவும், அது குறித்த அக்கறையை வெளிப்படுத்தவும் இளையோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது என்றார்.

Tagbilaran மறைமாவட்டத்தின் ஒவ்வொரு பங்குத்தளத்திலும் 100 சுயவிருப்பப் பணியாளர்கள் தலைமையில் இந்த மரம் நடும் பணி எடுத்து நடத்தப்பட்டது என்று கூறிய ஆயர் Alberto Uy அவர்கள், மரங்கள், சுற்றுச் சூழலை அழகுபடுத்துவதோடு, மனிதர்களுக்கு அதிக பலன்களையும் தரக்கூடியவை என்றார்.

GFW எனப்படும், உலக காடுகள் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வுகளின்படி, 2001ம் ஆண்டிலிருந்து, 2019ம் ஆண்டுவரை பிலிப்பீன்ஸ் நாடு, 12 இலட்சத்து 30 ஆயிரம் ஹெக்டேர் காடுகளை இழந்துள்ளது. இதனால் ஆக்சிஜன் வெளியீட்டின் அளவு குறைந்து, கரியமலவாயுவின் அளவு சுற்றுச்சூழலில் அதிகரித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2020, 13:37