தேடுதல்

கோவிட்-19 காலத்தில் செபமாலை செபிக்கும் மனிதர் கோவிட்-19 காலத்தில் செபமாலை செபிக்கும் மனிதர் 

கோவிட்-19ஐ எதிர்கொள்ள குடும்ப செபமாலை

கொடி மரத்தைப் பற்றிக்கொண்டிருப்பதுபோல், செபமாலைமீது பற்றுக்கொண்டிருக்க வேண்டும். அன்னை மரியா இன்றி நம்மால் வாழஇயலாது – அயர்லாந்து பேராயர் Martin

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்த உலகினின்று கோவிட்-19 கொள்ளைநோய் ஒழிக்கப்படுவதற்காக, வருகிற அக்டோபர் மாதத்தில், குடும்பத்தினர் எல்லாரும் சேர்ந்து செபமாலை செபிக்குமாறு, அயர்லாந்து நாட்டு கத்தோலிக்கத் திருஅவைத் தலைவரும், Armagh பேராயருமான, பேராயர் Eamon Martin அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இப்போதைய கொரோனா தொற்றுக்கிருமி காலத்தில், நம் அனைவரையும் கடவுள் பாதுகாக்குமாறு, ஒவ்வொரு நாளும் வீடுகளில், குடும்ப செபமாலையை செபிக்குமாறு, அயர்லாந்து நாட்டின் அனைத்துக் குடும்பங்களுக்கும் அழைப்புவிடுப்பதாக, பேராயர் Martin அவர்கள் கூறியுள்ளார். 

பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, நம்பிக்கையிலும், செபத்திலும் வளர்ப்பதில், முதன்மை ஆசிரியர்களாகவும், தலைவர்களாகவும் செயல்படுவதற்கு அழைப்புப்பெற்றுள்ளனர் என்பதை உணர்வதற்கு கடந்த ஆறு மாதங்கள், உதவியுள்ளன என்றும், இந்தக் காலக்கட்டம், இல்லத் திருஅவையின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவுபடுத்தியுள்ளது என்றும், பேராயர் Martin அவர்கள் கூறியுள்ளார்.

"அருள்மிகப்பெற்ற மரியே வாழ்க என்ற செபம்", "இயேசு கற்றுக்கொடுத்த செபம்", "மூவொரு கடவுளுக்கு வாழ்த்துச் செபம்" ஆகியவற்றை, குடும்பங்களாக இணைந்து செபிக்கும் படங்கள் அல்லது, காணொளிகளை, குடும்ப செபமாலை நடவடிக்கை, அல்லது, அக்டோபர் குடும்ப செபமாலை ஆகிய ஹாஷ்டாக்குகளைப் (#FamilyRosaryCrusade or #OctoberFamilyRosary) பயன்படுத்தி, வலைத்தளத்தில் வெளியிடுமாறும், பேராயர் Martin அவர்கள், குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அக்டோபர் மாதத்தில், ஒவ்வொருவரும், கோவிட்-19 கொள்ளைநோய்க்கு எதிராக, செபமாலை அல்லது, செபமாலையின் ஒரு பத்து மணிகளை செபித்து, தனது குடும்பம், உறவுகள் மற்றும், இந்த தொற்றுக்கிருமியால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள மக்களுக்காக அர்ப்பணிக்குமாறு, அயர்லாந்து தலத்திருஅவைத் தலைவர், அந்நாட்டு மக்கள் எல்லாரையும் வலியுறுத்தியுள்ளார்.

செபமாலை செபிக்கவேண்டும் என்ற உள்தூண்டுதல், Armagh நகரில் பணியாற்றும் புனித அன்னை தெரேசா சபையினரின் இல்லத்தைப் பார்வையிட்டபின் கிடைத்தது எனவும், கொடிமரத்தைப் பற்றிக்கொண்டிருப்பதுபோல், செபமாலைமீது பற்றுக்கொண்டிருக்குமாறும், அன்னை மரியா இன்றி நம்மால் வாழ இயலாது எனவும்,  பேராயர் Martin அவர்கள் கூறியுள்ளார். (ICN)

வாழ்வுக்கு ஆதரவு நாள்

அயர்லாந்து தலத்திருஅவை, வருகிற அக்டோபர் 4, ஞாயிறன்று, வாழ்வுக்கு ஆதரவு நாளைச் சிறப்பிக்கவிருப்பதை முன்னிட்டு, மேய்ப்புப்பணி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர்கள், வாழ்வு, நம்பிக்கையோடு நோக்கப்படவேண்டும் மற்றும், மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையும் மதிப்புமிக்கது என்று கூறியுள்ளனர்.

அயர்லாந்தில் 2019ம் ஆண்டில், 6,666 கருக்கலைப்புக்கள் இடம்பெற்றுள்ளதையும், ஆயர்கள், தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2020, 15:37