திருத்தந்தை, புனித Anicetus திருத்தந்தை, புனித Anicetus 

திருத்தந்தையர் வரலாறு ---- முரண்பாட்டு படிப்பினைகளின் துவக்கம்

திருத்தந்தை Soter ஒரு பாசமுள்ள தந்தையாக, ஏழைகளின் ஆதரவாளராக, நலிந்த தலத்திருஅவைகளின் பாதுகாவலராகச் செயல்பட்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

திருஅவையின் 10வது திருத்தந்தை முதலாம் பத்திநாதருக்குப்பின் வந்தார் புனித Anicetus. திருத்தந்தையர்களின் வரலாற்றைப் பார்த்தோமானால், துவக்க காலத்திலிருந்த திருத்தந்தையர்கள் பலரும் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டனர் என்பது தெரியவருகிறது. அதாவது, துவக்க காலத்திலேயே தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்து, இறப்புக்கும் அஞ்சாமல், கிறிஸ்தவர்கள் செயல்பட்டதால்தான் இவ்வளவு பெரிய மரமாக கிறிஸ்தவம் வளர்ந்துள்ளது. 11வது திருத்தந்தையாக, கி.பி.157ம் ஆண்டில் பதவியேற்று, ஏறத்தாழ 11 ஆண்டுகள் தலைமைப் பணியாற்றிய புனித Anicetus காலத்திலேயே, திருஅவையின் அடிப்படை படிப்பினைகள் குறித்த கேள்விகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. இவர் காலத்தில், கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா, கீழைநாடுகளிலும், மேற்கு நாடுகளிலும் வேறு வேறு நாள்களில் சிறப்பிக்கப்பட்டது. அன்றைய Nisan மாதத்தின் 14வது நாள், அதாவது, அது எந்தக் கிழமையானாலும் உயிர்ப்புப் பெருவிழா கீழைநாடுகளில் சிறப்பிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளிலோ, இயேசுவின் இறப்பு, வெள்ளியன்றும், உயிர்ப்பு, ஞாயிறன்றும் சிறப்பிக்கப்பட்டன. கீழைநாடுகளில் இருந்து புனித Polycarp, இந்த முரண்பாடு தொடர்பாக திருத்தந்தை Anicetusஐ சந்தித்து, பேச்சு வார்த்தைகள் நடத்தினார்(160-162). ஆனால், எவ்வித முடிவும் காணப்படவில்லை. இந்த திருத்தந்தை Anicetusன் காலத்தில் பிறிதொரு முக்கிய முரண்பாட்டுக் கொள்கையும் தலைதூக்கியது. கருங்கடலை ஒட்டிய துருக்கி பகுதியின் Pontus மாவட்டத்தின் sinope என்ற மறைமாவட்ட ஆயரின் மகன் பெயர் Marcion. ஓர் ஆயரின் மகனாக இருந்தாலும், இவர் மனத்தில் கடவுள் குறித்த சில முரண்பாட்டு எண்ணங்கள் உதித்தன. முற்றிலுமாக யூத ஆதிக்கத்திலிருந்து கிறிஸ்தவம் தனிப்பட்டு நிற்க வேண்டும் என, அக்காலத்தில் சில கிறிஸ்தவர்கள் எண்ணியது போல், இவரும் சிந்தித்து, சில தீவிரக் கொள்கைகளைக் பின்பற்றத் துவங்கினார். அதாவது, இயற்கையைப் படைத்த யூதர்களின் கடவுள் வேறு, அவர் கொஞ்சம் சிறிய கடவுள். ஆனால், அவரைவிட பெரிய கடவுளாலேயே இயேசு உலகிற்கு அனுப்பப்பட்டார். எனவே, யூதர்களின் பழைய ஏற்பாட்டு நூல்களையும், புதிய ஏற்பாட்டின் சில நூல்களையும் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என போதித்தார். புனித பவுலின் பத்து திருமடல்கள், மற்றும், புனித லூக்கா நற்செய்தியின் சில பகுதிகள் தவிர, வேறு எதையும் ஏற்கக் கூடாது என, Marcion போதித்தார். இது திருஅவையின் படிப்பினைகளுக்கு எதிராகச் சென்றது. இதனை நம் திருத்தந்தை Anicetus எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. Marcionன் தவறான படிப்பினைகளால் கவரப்பட்ட பலர், அவரைப் பின்பற்றவும் துவங்கினர். அவர் உருவாக்கிய கிறிஸ்தவ சபை 300 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தது என்பது வரலாற்று உண்மை. Marcion, Marcellinus, Valentine, Cordo ஆகியோரும் உரோம் நகரில் தங்கியிருந்து தவறான கிறிஸ்தவ கோட்பாடுகளை போதித்தனர். இத்தகைய போராட்டங்களின் மத்தியில் திருத்தந்தை Anicetus மறைசாட்சியாக உயிரிழந்தார்.

Marcionன் தவறான படிப்பினைகள், அடுத்துவந்த திருத்தந்தை Soter அவர்கள் (167-175 அல்லது 166-174) காலத்திலும் தொடர்ந்தன. திருத்தந்தை Soter அவர்கள்,  ஒரு பாசமுள்ள தந்தையாக, ஏழைகளின் ஆதரவாளராக, நலிந்த தலத்திருஅவைகளின் பாதுகாவலராகச் செயல்பட்டார் என, அக்காலத்து வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஏழைகள் இவரிடம் ஆறுதல் கண்டனர். இவர் தலத்திருஅவைகளுக்கு எழுதிய ஒரு சுற்றுமடல் குறித்து, பல ஆசிரியர்கள மிகப் புகழ்ந்து எழுதியுள்ளனர். ஆனால், அந்த சுற்றுமடல் வரலாற்றில் கானாமற்போயுள்ளது என்பது உண்மை. அதேவேளை, இந்த சுற்றுமடலை புகழ்ந்து, கொரிந்தின் புனித Dionysius  அவர்கள், இத்திருத்தந்தைக்கு எழுதிய மடல் கிடைத்துள்ளது. இத்தாலியை சேர்ந்த திருத்தந்தை புனித Soter அவர்கள், மறைசாட்சிகளுள்  ஒருவராக குறிப்பிடப்படுகின்றபோதிலும், இவரின் மறைசாட்சிய மரணம் குறித்து எவ்விதச் சான்றுகளும் இல்லை.

புனித Eleutherius (174-189) அவர்கள், கி.பி. 174ம் ஆண்டு, திருஅவையின் 13ம் திருத்தந்தையாக பதவியேற்றார். இவர், திருத்தந்தை Anicetusன் கீழ் உரோம் மறைமாவட்டத்தின் திருத்தொண்டாராகப் பணியாற்றியுள்ளார். கிரேக்கத்தைச் சார்ந்த இத்திருத்தந்தையின் காலத்தில், கிறிஸ்தவர்கள் மீதான உரோமைய அரசின் சித்ரவதைகள் குறைந்திருந்தன என குறிப்பிடலாம். Cesare Lucio Marco Aurelio Commodo Antonino Augusto என நீண்ட பெயர் கொண்டு, Commodo என அறியப்பட்ட உரோமை ஆளுநரின் காலத்தில் கிறிஸ்தவர்கள் அமைதியில் வாழ முடிந்தது. இவர் காலத்தில்தான் புனித Appollonius, உரோம் நகரில் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்(180-185). எனினும், பொதுவாக, கிறிஸ்தவர்கள் அச்சமின்றியே வாழ்ந்து வந்தனர். ஏற்கனவே Marcion என்பவரின் கொள்கைகள், திருஅவையின் அதிகாரப்பூர்வப் படிப்பினைகளுக்கு எதிராகச் சென்று கொண்டிருந்த வேளையில், துருக்கியின் ஆசிய பகுதியைச் சேர்ந்த Montanus என்பவர், புதிதாக ஒரு கிறிஸ்தவ இயக்கத்தைத் துவக்கினார். தனக்கு தூய ஆவியின் தனிப்பட்ட தூண்டுதல் உண்டு என அறிவித்த இவர், பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர் போல், கடவுளின் சார்பாக தன்னை முன்னிறுத்திப் பேச ஆரம்பித்தார். Montanusன் போதனைகளுக்குத் துணையாக, Priscilla, மற்றும், Maximilla எனும் இரு பெண்களும் சேவையாற்றத் துவங்கினர். இம்முவரும் ஊர் ஊராகச் சென்று போதித்தனர். Priscilla என்பவர், தனக்கு இயேசு பெண் வடிவில் தோன்றினார் என போதித்தார். அனைவரும் நோன்பிருந்து செபிக்கவேண்டும் என வலியுறுத்தினார். தங்கள் வழியாக கடவுள் உலகோடு பேசுகிறார் என போதித்து வந்தனர். அக்கால Montanus இயக்கம் உரோமையப் பகுதிகளிலும், ஆப்ரிக்காவிலும், இங்கிலாந்திலும் பரவத் தொடங்கி, 7ம் நூற்றாண்டு வரை உயிரோட்டத்துடன் இருந்த பின்னரே மறைந்தது. இந்த இயக்கம் துவக்கப்பட்ட காலத்தில்தான்  திருஅவையும் வேரூன்றி வளரத் தொடங்கியிருந்தது. ஆகவே, கிறிஸ்தவ விசுவாசிகளை இத்தகைய தவறான கோட்பாடுகளிலிருந்து காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பை திருத்தந்தை Eleutherius கொண்டிருந்தார் என்பதும், அதற்காக அவர் போராட வேண்டியிருந்தது என்பதும் உண்மை.

அக்காலத்திலேயே திருஅவை, அடிமைகளை மீட்டெடுத்து வாழவைப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தியது. ஆப்ரிக்காவிலிருந்து முதல் திருத்தந்தையும் பதவியேற்றார். அவை குறித்து வரும் வாரம் நோக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2020, 10:47