தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் அமெரிக்க திருத்தூதுப் பயணம் திருத்தந்தையின் அமெரிக்க திருத்தூதுப் பயணம்  (AFP or licensors)

திருத்தந்தையின் அமெரிக்க திருத்தூதுப் பயணத்தின் 5ம் ஆண்டு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்ட ஒவ்வொரு நிகழ்வும் நினைவில் பதிந்தது என்றாலும், அவர், மக்களை நேரடியாகச் சந்தித்த நிகழ்வுகள் இன்னும் பசுமையாக பலரது நினைவுகளில் தங்கியிருக்கும் - பேராயர் கர்ட்ஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐந்து ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 22ம் தேதி முதல் 27ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தைக் குறித்து, அன்றைய நாளில் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவராக பணியாற்றிய பேராயர் ஜோசப் கர்ட்ஸ் அவர்கள் CNS கத்தோலிக்கச் செய்திக்கு வழங்கிய பேட்டியில் நினைவுகூர்ந்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்ட ஒவ்வொரு நிகழ்வும் நினைவில் பதிந்தது என்றாலும், அவர், மக்களை நேரடியாகச் சந்தித்த நிகழ்வுகள் இன்னும் பசுமையாக பலரது நினைவுகளில் தங்கியிருக்கும் என்று பேராயர் கர்ட்ஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

மக்கள் தன் மீது காட்டிய பரிவும், ஆர்வமும் தனது உள்ளத்தை தொட்டதென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகருக்குத் திரும்பிச்சென்ற விமானப் பயணத்தில் கூறியதை, பேராயர் கர்ட்ஸ் அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு தான் மேற்கொள்ளும் முதல் பயணம் என்று கூறிய திருத்தந்தை, தான் ஓர் உடன்பிறந்த உறவாக அம்மண்ணில் காலடி பதித்ததாகக் கூறியது மக்களை அவர் மீது இன்னும் கூடுதலாக ஈடுபடவைத்தது என்று பேராயர் சுட்டிக்காட்டினார்.

செப்டம்பர் 27ம் தேதி, ஃபிலடெல்ஃபியா நகரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய இறுதித்திருப்பலியில் 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டது, செப்டம்பர் 25ம் தேதி, நியூ யார்க் நகரின் மையப்பூங்காவில் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் கூடியிருந்தது ஆகியவை, நினைவில் பதிந்த நிகழ்வுகள் என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க ஐக்கிய நாட்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில், அனைவரையும் வரவேற்கவேண்டுமென்று இந்நாட்டை உருவாக்கியவர்கள் கண்ட முதல் கனவை நனவாக்க, பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளிடம் திருத்தந்தை கூறியது, மறக்க இயலாத ஓர் உரை என்று, பேராயர் கர்ட்ஸ் அவர்கள் கூறினார்.

8வது உலக குடும்பங்கள் மாநாட்டின் இறுதி நிகழ்வாக, ஃபிலடெல்ஃபியாவில் நிறைவேற்றிய திருப்பலியில், பரந்துபட்ட மனித சமுதாயம் என்ற குடும்பத்தின் மீது ஆர்வம் கொள்ள அமெரிக்காவில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் திருத்தந்தை விடுத்த அழைப்பு அவரது பிரியாவிடை செய்தியாக அமைந்தது என்று, பேராயர் கர்ட்ஸ் அவர்கள் தன் பேட்டியில் கூறினார்.

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், உலக அளவில் போர்நிறுத்தம் இடம்பெறுமாறு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். ஏற்கனவே விடுத்த இதே அழைப்பிற்கு, 180 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன - ஐ.நா. தலைமை பொதுச்செயலர்

23 September 2020, 14:24