தேடுதல்

அதிகாலையில் இயற்கையின் அழகு அதிகாலையில் இயற்கையின் அழகு 

பங்களாதேஷில் படைப்பைக் காப்பாற்ற கிறிஸ்தவர்கள் உறுதி

செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, அசிசி நகர் புனித பிரான்சிசின் திருவிழாவான வருகிற அக்டோபர் 4ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் படைப்பின் காலத்தில், கடவுளின் படைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று, உலகில் 220 கோடி கிறிஸ்தவர்கள் செபித்துவருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பங்களாதேஷ் நாட்டில், காலநிலை மாற்றம், மற்றும், இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராகவும், இயற்கையைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு, அந்நாட்டு கத்தோலிக்க மற்றும், ஏனைய கிறிஸ்தவத் தலைவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.

“படைப்பின் காலம்/காலநிலை மாற்றம் மற்றும், இயற்கைப் பேரிடர்கள் தடுப்பு” என்ற தலைப்பில், கிறிஸ்தவ சபைகள் இணைந்து, செப்டம்பர் 17, இவ்வியாழனன்று நடத்திய இணையவழி கருத்தரங்கில், இவ்வாறு கிறிஸ்தவத் தலைவர்கள் உறுதி எடுத்துள்ளனர்

பங்களாதேஷ் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் நீதி மற்றும், அமைதி அவையும், ஒரு கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பான, உலக கண்ணோக்கு பங்களாதேஷ் என்ற அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கில், பல்வேறு துறவு மற்றும், கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த ஏறத்தாழ எண்பது பேர் கலந்துகொண்டனர்.

இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், இந்த உலகில், உண்பதற்கும், ஆனந்தமாய் வாழ்வதற்கும் மட்டும் நம்மை இறைவன் படைக்கவில்லை, மாறாக, இந்தப் பூமியைப் பாதுகாக்கும் பொறுப்பை, அவர் நம்மிடம் கொடுத்துள்ளார் என்று கூறப்பட்டது.

இயற்கையைப் புண்படுத்துவதை இப்போதே நாம் நிறுத்தவேண்டும் என்றும், நம் முழு இதயத்தோடும், முழு மனதோடும் கடவுளின் படைப்பை அன்புகூர்வதற்கு காலம் கனிந்துள்ளது என்றும், பங்களாதேஷ் பாப்பிட்ஸ் சபையின் பொதுச்செயலர் அருள்திரு John S. Karmokar அவர்கள் கூறினார்.

செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, இயற்கையின் பாதுகாவலரான, அசிசி நகர் புனித பிரான்சிசின் திருவிழாவான வருகிற அக்டோபர் 4ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் படைப்பின் காலத்தில், கடவுளின் படைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று, உலகில் 220 கோடி கிறிஸ்தவர்கள் செபித்துவருகின்றனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2020, 14:43