ஈராக் அரசு அதிகாரியுடன் கர்தினால் சாக்கோ ஈராக் அரசு அதிகாரியுடன் கர்தினால் சாக்கோ  

ஊழலுக்கு எதிரான ஈராக் அரசின் முயற்சிக்கு ஆதரவு

ஈராக் நாட்டைச் சீரமைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, நம்பிக்கையுடன் அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள், அண்மை வாரங்களில், ஆயுதம் ஏந்திய குழுக்களால் தடைகளை எதிர்நோக்குகின்றன - கர்தினால் சாக்கோ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டில் இடம்பெறும் வன்முறை மற்றும், ஊழலுக்கு எதிராகவும்,  புரட்சியாளர்கள் ஆயுதங்களைச் சரணடைய வலியுறுத்தவும், அந்நாட்டு பிரதமர் Mustafa al-Kadhimi அவர்களும், அவரது அரசும் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர், தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

ஈராக்கை உறுதியான மற்றும், இராணுவபலம் கொண்ட நாடாக கட்டியெழுப்புவதற்கு, அந்நாட்டின் தற்போதைய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் லூயில் இரபேல் சாக்கோ அவர்கள், இவ்வாறு கூறினார்.

குற்றங்கள், கடத்தல்கள், இன மற்றும், வகுப்புவாதப் பதட்டநிலைகள் ஆகியவற்றுக்கு எதிராகவும், சட்டத்திற்குப் புறம்பே செயல்படுகிறவர்களைத் தடுத்து நிறுத்தவும் தீர்வு காண்பதற்கு, ஈராக் அரசும், நாட்டின் தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதுபோல் தெரிகின்றது என்று, கர்தினால் சாக்கோ அவர்கள் கூறினார்.

எனினும், நாட்டைச் சீரமைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, நம்பிக்கையுடன் அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள், அண்மை வாரங்களில், ஆயுதம் ஏந்திய குழுக்களால் தடைகளை எதிர்நோக்குகின்றன, இந்த குழுக்கள், வன்முறை மற்றும், குழப்பத்தை விதைத்துவருகின்றன என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் குறிப்பிட்டார்.

எடுத்துக்காட்டாக, இம்மாதம் 3ம் தேதி, பாக்தாத் நகரிலுள்ள G4S பாதுகாப்புப் பணிகள் அலுவலகம் தாக்கப்பட்டது என்றும், மொசூல் நகருக்கு அருகே, ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பின் வாகனம் தாக்கப்பட்டதில், ஐ.நா. அலுவலர் ஒருவர் காயமடைந்தார் என்றும், கர்தினால் குறிப்பிட்டார்.

கடந்தகாலத்தில், இந்த புரட்சிக் குழுக்கள், துறைமுகங்கள் மற்றும், விமானநிலையங்களை, தங்களின் கட்டுப்பாடுக்குள் வைத்திருந்தன எனவும், கல்தேய திருஅவையின் தலைவர் எடுத்துரைத்தார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2020, 14:01