பிரிட்டனின் கத்தோலிக்க சிறுவர் பள்ளி பிரிட்டனின் கத்தோலிக்க சிறுவர் பள்ளி 

உணவு உதவிகள் வழங்கும் கத்தோலிக்க பள்ளிகள்

வெஸ்ட்மின்ஸ்டர் மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகள், ஏழை மாணவர்களுக்கு உணவை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கியுள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள் 

இந்த கோவிட்-19 கொள்ளை நோய் காலத்தில் எவரும் பசியால் வாடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில், இங்கிலாந்தின் கத்தோலிக்கப் பள்ளிகள் ஏழைகளுக்கு உணவு உதவிகளை வழங்கி வருகின்றன.

மார்ச் மாதத்தில் துவங்கிய கொள்ளை நோய் கதவடைப்புகள் காரணமாக பொருளாதார நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏழைகள் எவரும் உணவின்றி செல்லக்கூடாது என்ற நோக்கத்தில் இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில், கத்தோலிக்கப் பள்ளிகளால் துவக்கப்பட்ட உணவு வழங்கும் திட்டத்திற்கு, அப்பகுதியின் காரித்தாஸ் அமைப்பும் பொருளுதவிகளை வழங்கிவருகிறது.

அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, குறைந்த வருமானம் உடைய குடும்பங்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோரின் வாழ்க்கைத் தரம் மிகவும் சீர்குலைந்துள்ளதாகவும், இந்தக் கொள்ளைநோயால், 90 விழுக்காட்டு குடும்பங்களில் மேலும் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகள், முதலில் மாணவர்களின் படிப்பில் கவனம் செலுத்தியதோடு, சுய விருப்பப்பணியாளர்களின் உதவியுடன், ஏழை மாணவர்களுக்கு தேவையான உணவை, அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கியுள்ளன.

கத்தோலிக்கத் திருஅவையின் சமுகப்படிப்பினைகளை நடைமுறையில் காட்டுவதாக, கத்தோலிக்கப் பள்ளிகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என அறிவித்தனர், இதனால் பயன்பெறும் சமூகத்தினர்.

இந்தக் கொள்ளைநோய் காலத்தில் கத்தோலிக்கப் பள்ளிகளும், காரித்தாஸ் அமைப்பும் இணைந்து நடத்தும் இத்திட்டங்களால், வெஸ்ட்மின்ஸ்டர் மறைமாவட்டத்தின் 119 பங்குத்தளங்கள், மற்றும், பள்ளிகள் பயன்பெற்றுவருகின்றன.(ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2020, 13:03