கச்சா எண்ணெய் சிந்திய மொரீசியஸ் கடல் பகுதி கச்சா எண்ணெய் சிந்திய மொரீசியஸ் கடல் பகுதி 

மொரீசியஸ் கர்தினால்: பூமியின் அழுகுரலுக்கு செவிமடுப்போம்

மொரீசியஸ் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ பத்து கோடி நெகிழி பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை பயன்படுத்தப்படுவதைத் தடைசெய்யும் சட்டம் இயற்றப்படுவதற்கு, தலத்திருஅவை, அரசை வலியுறுத்த விரும்புகின்றது - கர்தினால் பியட் அவர்கள் கூறினார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழலை நாம் கையாளும் முறையை மாற்றி, இப்பூமி நம்மை நோக்கி எழுப்பும் அழுகுரலுக்குச் செவிசாய்ப்போம் என்று, மொரீசியஸ் தீவு நாட்டின் கர்தினால் மவ்ரிஸ் பியட் (Maurice Piat) அவர்கள், படைப்பின் காலத்தை முன்னிட்டு அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 01, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டின்  படைப்பின் காலத்தைத் துவக்கியிருப்பது, ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில், படைப்பைப் பாதுகாப்பதற்கும், எண்ணெய் கசிவு விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மொரீசியஸ் நாட்டிற்காகச் செபிப்பதற்கும் அவர் அழைப்பு விடுத்தது போன்றவை குறித்து, வத்திக்கான் செய்தித்துறைக்கு வழங்கிய பேட்டியில், இவ்வாறு, கர்தினால் பியட் அவர்கள் கூறினார்.

மொரீசியஸ் திருஅவையில் மேற்கொள்ளப்பட்டுவரும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் பியட் அவர்கள், பல மாதங்களாக மக்களைத் தாக்கிவரும் கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், துறவிகள் குழு ஒன்று, படைப்பு உண்மையிலேயே மதிக்கப்படவும், சூழலியல் பாதுகாக்கப்படவுமென, பல்வேறு நடைமுறை திட்டங்களை ஊக்குவித்து வருகின்றது என்று கூறினார்.

மொரீசியஸ் தீவின் பல்வேறு பகுதிகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த இசை நிகழ்ச்சிகள் நடத்துவது, உணவில் தன்னிறைவு பெறுவதற்கு இயற்கை விவசாயமுறையை ஊக்குவிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன என்றுரைத்த கர்தினால் பியட் அவர்கள், மொரீசியஸ் நாடு, இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்பொருள்களையே, பெரும்பாலும் சார்ந்திருக்கின்றது என்று கூறினார்.

பல்வேறு உணவு கலாச்சாரங்களையும், பழக்கவழக்கங்களையும், பழகிக்கொள்ள இளைஞர்களுக்கு அதிகப் பயிற்சி கொடுக்கவேண்டியுள்ளது என்றுரைத்த கர்தினால் பியட் அவர்கள், மொரீசியஸ் கடல்பகுதியிலும், கடற்கரைகளிலும் நெகிழிப்பொருள் கொட்டப்படுவதால், அந்தப் பொருள்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வையும், தலத்திருஅவை அளித்து வருகின்றது என்று எடுத்துரைத்தார்.

மொரீசியஸ் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ பத்து கோடி நெகிழி பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன எனவும், இந்தப் பொருள்கள் நாட்டிற்கும், கடலுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இவற்றைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் இயற்றப்படுவதற்கு அரசை வலியுறுத்த விரும்புகின்றோம் எனவும், தலைநகர் போர்ட்-லூயிஸ் ஆயரான, கர்தினால் பியட் அவர்கள் கூறினார்.

பவளப் பாறைகள் மிகுந்த மொரீசியஸ் தீவு நாட்டுக் கடலில், ஜப்பான் நாட்டு சரக்குக் கப்பல் ஒன்று, நான்காயிரம் டன் அளவுக்குக் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு இந்தியப் பெருங்கடலில் பயணித்தபோது, ஜூலை 25ம் தேதி, மொரீசியஸ் அருகே பவளப்பாறைகளின் மீது மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் கப்பலில் விரிசல் ஏற்பட்டு ஆயிரம் டன்களுக்கு அதிகமான கச்சா எண்ணெய் இந்தியப் பெருங்கடலில் கலந்தது. இந்த எண்ணெய், காடுகள், கடல்வாழ் உயிரினங்கள், மற்றும், வெள்ளைமணல் கடற்கரைப் பகுதிகளை மூழ்கடித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2020, 13:42