இஸ்ரேல் ஆக்ரமிப்பை எதிர்த்து போராட்டம் இஸ்ரேல் ஆக்ரமிப்பை எதிர்த்து போராட்டம் 

பாலஸ்தீனா, இஸ்ரேலில் அமைதி நிலவ, உலக அமைதி வாரம்

போர்களின் எதிர்விளைவுகள், வன்முறைக்குப்பின் மக்களின் மனங்களில் உருவாகும் வெறுப்பு, காழ்ப்புணர்வு, சமுதாய அநீதிகள், கோவிட்-19ன் கடும் விளைவுகள் போன்றவை, நாளுக்கு நாள், மனித சமுதாயத்தை மேலும் வலுவற்றதாக மாற்றி வருகின்றன - WCC அவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாலஸ்தீனா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் அமைதி நிலவுவதற்கென்று, வருகிற செப்டம்பர் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும், ‘உலக அமைதி வாரம்’ என்ற நடவடிக்கையில், அனைவரும் இணையுமாறு, WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் அவை அழைப்பு விடுத்துள்ளது. 

“வலுவற்ற சமுதாயத்தில் படைப்பாற்றல்மிக்க ஒருமைப்பாடு” என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்படும் இந்த வாரத்தில், உலகிலுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் அமைதிக்கான செயல்களில் ஈடுபட்டு, பாலஸ்தீனா மற்றும், இஸ்ரேலில், நீதியான அமைதி நிலவ ஊக்குவிப்போம் என்றும், WCC அவை கேட்டுக்கொண்டுள்ளது.  

பாலஸ்தீனா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே அமைதி இடம்பெறுவதற்கென பல்வேறு யுக்திகளும், ஒப்பந்தங்களும் உருவானபோதிலும், அப்பகுதியில் அமைதி இன்னும் நிலவவில்லை, மக்களும் அமைதிக்காக நீண்ட காலமாக ஏங்கி வருகின்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

போர்களின் எதிர்விளைவுகள், வன்முறைக்குப்பின் மக்களின் மனங்களில் உருவாகும் வெறுப்பு, காழ்ப்புணர்வு, சமுதாய அநீதிகள், கோவிட்-19ன் கடும் விளைவுகள் போன்றவை, நாளுக்கு நாள், மனித சமுதாயத்தை மேலும் வலுவற்றதாக மாற்றி வருகின்றன என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

உலக கிறிஸ்தவ சபைகள் அவை, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பரில், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் அமைதி நிலவ, உலக அமைதி வாரத்தைக் கடைப்பிடித்து வருகின்றது. WCC அவையில், 110க்கும் அதிகமான நாடுகளில், 50 கோடிக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது இந்த அவையில், 350 கிறிஸ்தவ சபைகள் உறுப்புகளாக உள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2020, 13:46