தேடுதல்

Vatican News
ஆகஸ்ட் 15ல் கடல்கள் ஆசிர்வதிக்கப்படுகின்றன ஆகஸ்ட் 15ல் கடல்கள் ஆசிர்வதிக்கப்படுகின்றன 

ஆகஸ்ட் 15ல் கடல்களை ஆசிர்வதிக்கும் பாரம்பரிய முறை

கடல்களை ஆசிர்வதிக்கும் பழக்கம், இத்தாலியில் 15ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் இந்தப் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவான ஆகஸ்ட் 15ம் தேதி, கடல்களை ஆசிர்வதித்து, அதில் பயணம் மேற்கொள்வோருக்காக, அன்னை மரியாவின் பரிந்துரையை மன்றாடும் மரபுமுறை, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, பல நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கடல்களை ஆசிர்வதிக்கும் பழக்கம், இத்தாலியில், 15ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, பெருங்கடலில் புயல் அடித்தபோது பயணம் மேற்கொண்ட ஓர் ஆயர், தனது மோதிரத்தைக் கழற்றி நீரில் வீசினார் என்றும், அப்போது புயல் அடங்கியது என்றும், அதிலிருந்து அந்த ஆயர் இந்த வழக்கத்தைத் தொடங்கி வைத்தார் என்றும் பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடற்கரை நகரங்களிலுள்ள கத்தோலிக்கப் பங்குகள், அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா நாளில், கடல்களை ஆசிர்வதித்து, வருகிற ஆண்டு முழுவதும், கடல்களில் பயணம் மேற்கொள்வோரை மட்டுமல்ல, அனைவரும் தங்களின் விசுவாச வாழ்வில் உறுதியாயிருக்க, அன்னை மரியாவிடம் செபித்து வருகின்றன.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் சில பங்குத்தளங்கள், இந்தப் பெருவிழா நாளில் கடல்களை ஆசீர்வதித்து, கடல் நீரில் மலர் வளையங்களை வீசுகின்றனர். சிலர் இந்த நிகழ்வுக்குப்பின் கடலில் நீந்துகின்றனர் மற்றும், பாட்டில்களில் கடல் நீரை எடுத்து வருகின்றனர் என்று CNA கத்தோலிக்க செய்தி கூறுகின்றது. (CNA)

14 August 2020, 13:20