தொழுகைக்கூடத்தில் இருந்த கூன் விழுந்த பெண் - லூக்கா 13, 11 தொழுகைக்கூடத்தில் இருந்த கூன் விழுந்த பெண் - லூக்கா 13, 11 

விவிலியத்தேடல்: கூன் விழுந்த பெண் குணமடைதல் 1

18 ஆண்டுகளாக தீய ஆவி பிடித்த பெண்ணை இயேசு குணமாக்கியப் புதுமையில் (லூக்கா 13:10-17) நம் தேடலைத் துவக்குகிறோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

லூக்கா நற்செய்தி – கூன் விழுந்த பெண் குணமடைதல் 1

ஏனைய மூன்று நற்செய்திகளிலும் பதிவாகாமல், லூக்கா நற்செய்தியில் மட்டும் பதிவாகியுள்ள ஐந்து புதுமைகளில், கெனசரேத்து ஏரியில், பெருமளவு மீன்பிடிப்பு நிகழ்ந்த புதுமை (லூக்கா 5:1-11) மற்றும், நயீன் ஊரைச் சேர்ந்த கைம்பெண்ணின் இறந்த மகனை உயிர்பெற்றெழச் செய்த புதுமை (லூக்கா 7:11-17) என்ற முதலிரு புதுமைகளில், கடந்த சில வாரங்கள் நாம் தேடலை மேற்கொண்டோம். இன்று, இவ்வரிசையில், மூன்றாவதாக, 18 ஆண்டுகளாக தீய ஆவி பிடித்த பெண்ணை இயேசு குணமாக்கியப் புதுமையில் (லூக்கா 13:10-17) நம் தேடலைத் துவக்குகிறோம்.

இப்புதுமைக்குள் அடியெடுத்து வைப்பதற்குமுன், நற்செய்தியாளர் லூக்கா, தன் நற்செய்தியில், எத்தருணத்தில் இப்புதுமையைப் பதிவுசெய்துள்ளார் என்பதைப் புரிந்துகொள்வது பயனளிக்கும்.

ஒவ்வொரு நற்செய்தியாளரும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, ஒரு குறிப்பிட்ட மக்களை மனதில் கொண்டு, தங்கள் நற்செய்தியை எழுதினர் என்பதை அறிவோம். நற்செய்தியாளர் லூக்கா, புறவினத்தாருக்கு இயேசுவை அறிமுகப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள், அவரது நற்செய்தியாகவும், திருத்தூதர் பணிகள் நூலாகவும் வெளியாயின. அதிலும், அவர், இயேசுவின் மனிதத் தன்மையை, இன்னும் சிறப்பாக, அவரது பரிவை  வெளிச்சமிட்டுக் காட்டும்வண்ணம், தன் நற்செய்தியை உருவாக்கியிருப்பதால், இந்த நற்செய்தியை 'கருணையின் நற்செய்தி' என்றும் அழைக்கிறோம். இயேசு, தன் பணிவாழ்வில் வழங்கிய உரைகளையும், ஆற்றிய செயல்களையும், நற்செய்தியாளர் லூக்கா, தொகுத்து வழங்கும் வேளையில், கூன் விழுந்த ஒரு பெண்ணைக் குணமாக்கும் இப்புதுமைக்கு வழங்கியிருக்கும் இடம், நம் சிந்தனைகளைத் தூண்டுகிறது.

நற்செய்தியாளர் லூக்கா, 7ம் பிரிவில், நூற்றுவர் தலைவரின் பணியாளரைக் குணமாக்கியப் புதுமையையும், அதைத் தொடர்ந்து, நயீன் ஊர் கைம்பெண்ணின் மகனுக்கு இயேசு உயிர் வழங்கியப் புதுமையையும் ஒன்றன்பின் ஒன்றாக பதிவு செய்திருந்தார். "ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்" (லூக்கா 7:7) என்று நூற்றுவர் தலைவர் வெளியிட்ட நம்பிக்கை அறிக்கைக்கு ஏற்ப, அவ்வில்லத்திற்குச் செல்லாமலேயே, தன் சொற்களின் வல்லமையால், அந்த ஊழியரை இயேசு குணமாக்கினார் என்பதை, நற்செய்தியாளர் லூக்கா உணர்த்தினார். அதைத் தொடர்ந்து, நயீன் ஊரில் நடந்த அடுத்தப் புதுமையிலோ, யூத சட்டங்களை மீறும் வண்ணம், இறந்த உடல் வைக்கப்பட்டிருந்த பாடையைத் தொட்டு, புதுமையை ஆற்றும் இயேசுவை, லூக்கா நமக்கு வழங்குகிறார். இயேசு, தன் சொல்லாலும், கனிவுள்ள செயல்களாலும் புதுமைகள் செய்தார் என்பதை இணைத்துக் காட்ட, நற்செய்தியாளர் லூக்கா, இவ்விரு நிகழ்வுகளையும் தொடர்ந்து பதிவு செய்துள்ளார் என்ற கோணத்தில் நாம் சிந்திக்கலாம்.

இன்று நாம் தேடலைத் துவக்கியுள்ள புதுமை, லூக்கா நற்செய்தி, 13ம் பிரிவின் 10வது இறைவாக்கியத்தில் ஆரம்பமாகிறது. இப்பிரிவின் முதல் 5 இறைவாக்கியங்களில், (லூக்கா 13:1-5) வேதனைதரும் இரு செய்திகளைக் குறித்து, இயேசு கூறும் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதைத் தொடரும் நான்கு இறைவாக்கியங்களில் (லூக்கா 13:6-9), பொறுமையை வலியுறுத்தும் 'காய்க்காத அத்திமரம்' உவமையை இயேசு கூறுகிறார். தொடர்ந்து, கூன் விழுந்த பெண்மணியை இயேசு குணமாக்கும் புதுமையை, நற்செய்தியாளர் லூக்கா இணைத்துள்ளார் (லூக்கா 13:10-17).

அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். (லூக்கா 13:1)  என்று, லூக்கா நற்செய்தி 13ம் பிரிவு ஆரம்பமாகிறது. இச்செய்தியை ஏன் இயேசுவிடம் கூறினர் என்ற கேள்வி எழுகிறது. கோவிலில், அல்லது, ஒரு திருத்தலத்தில், பலி செலுத்திக் கொண்டிருந்தவர்களை, பிலாத்து கொன்றது சரியா, தவறா என்ற கேள்விக்கு, அரசியல் பதில்கள் பல இருக்கலாம். ஆனால், அந்தப் பதில்களைத் தேடி, இயேசுவிடம் வரத் தேவையில்லை. இச்செய்தியை இயேசுவிடம் சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம், இந்நிகழ்வில், கடவுள் எங்கே இருக்கிறார் என்ற விளக்கம் பெறுவதற்காகத்தான்.

கோவிலில், பலி நேரத்தில், இந்தக் கொலை நடந்திருக்கிறதே. கோவில், பலி இவையெல்லாம் அந்த கலிலேயரைக் காப்பாற்றமுடியவில்லையா? கோவிலில், பலி நேரத்தில், பிலாத்து கொலை செய்திருக்கிறானே, அவனைக் கடவுள் ஒன்றும் செய்யமாட்டாரா? என்ற கேள்விகளுக்கு இயேசு விடைதரக்கூடும் என்ற நம்பிக்கையில், அவரிடம் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்டனர்.

ஒரு சில விவிலியப் பதிப்புகளில், பிலாத்து செய்தது, இன்னும் பயங்கரமாய் கூறப்பட்டுள்ளது. "பிலாத்து அவர்களைக் கொன்று, அவர்கள் இரத்தத்தை அந்தப் பலியின் இரத்தத்தோடு கலந்தான்" என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இது சாதாரண கொலை அல்ல. இஸ்ராயேல் மக்களிடையே தெய்வநிந்தனை என்று தடை செய்யப்பட்டிருந்த மனிதப்பலியை, பிலாத்து நடத்தினான். இறைவனின் சந்நிதியை, இஸ்ராயலரின் வாழ்வு நெறிகளை, மோசே தந்த சட்டங்களைக் களங்கப்படுத்தும் ஒரு பெரும் குற்றத்தை, செய்த பிலாத்துவை, கடவுள் ஒன்றும் செய்யமாட்டாரா? என்ற கேள்விக்கு விடைதேடியே, இச்செய்தி இயேசுவிடம் சொல்லப்பட்டது.

இக்கேள்விகளுக்கு இயேசு நேரடியாக விடை தந்ததுபோல் தெரியவில்லை. சொல்லப்பட்ட செய்திக்கு, நடந்த நிகழ்வுக்கு இயேசு விளக்கம் சொல்லவில்லை. மாறாக, அந்நிகழ்வினால் பாதிக்கப்பட்டோரைக் குறித்து, அவசரத் தீர்ப்புக்களை வழங்கவேண்டாம் என்று எச்சரிப்பதே, இயேசுவின் முக்கிய நோக்கமாய் இருந்தது. அவர்கள் சொன்ன செய்தியையும், வேறொரு செய்தியையும் இணைத்து, இப்பகுதியில், இயேசு கூறும் விளக்கம், நமக்கு ஒருசில வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத்தருகிறது.

கோவிலில் நடந்த இந்த கொலையைப் பற்றிய செய்தியுடன், சீலோவாமில் கோபுரம் ஒன்று விழுந்ததால் 18 பேர் உயிரிழந்த நிகழ்வை இயேசு இணைத்தார். பிலாத்து செய்த கொலை போன்று, மனிதர்களால் மனிதர்களுக்கு அழிவுகள் ஏற்படும்போதும், கோபுரத்தின் இடிபாடு போன்று இயற்கை வழியே, அல்லது விபத்துக்கள் வழியே மனிதர்களுக்கு அழிவுகள் ஏற்படும்போதும், அவை ஏன் நடந்தன என்ற விளக்கங்களை தருவதைவிட, அந்த அழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று அவசர முடிவுகள் எடுக்கவேண்டாம் என்பதைச் சொல்வதில் இயேசு குறியாய் இருந்தார். பாதிக்கப்பட்டவர்களை, பாவிகள் என்று அவசரத் தீர்ப்பிடவேண்டாம். அவர்களைவிட நாம் பெரும் பாவிகள். எனவே இந்நிகழ்வுகள் நமக்கு எச்சரிக்கைகளாய் இருக்கட்டும் என்பதையே இயேசு இந்த நற்செய்திப் பகுதியில் வலியுறுத்துகிறார்.

துன்பங்கள் நிகழும்போது, கடவுளையோ, பிறரையோ காரணம் காட்டுவதற்குப் பதில், அத்துன்பம் நிகழ்வதற்கு, நாம் எவ்வகையில் காரணமாய் இருந்தோம் என்று ஆய்வுசெய்வது நல்லது. அத்துன்பங்களைத் தடுக்க, அல்லது, அத்துன்பங்களிலிருந்து மக்களைக் காக்க கடவுள் என்ன செய்யவேண்டும் என்று அவருக்கு ஆலோசனைகள் வழங்குவதை விட்டுவிட்டு, அத்துன்பத்திலிருந்து மக்களை மீட்க, நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திப்பது பயனளிக்கும்.

2010ம் ஆண்டு ஹெயிட்டி நாட்டிலும், 2015ம் ஆண்டு, நேபாளத்திலும் நில நடுக்கங்கள் ஏற்பட்டபோது, நம்முடைய மனங்களில், 'கடவுள் எங்கே' என்ற கேள்வி, வெகு இயல்பாக, எளிதாக, எழுந்திருக்கும். கடவுள் எங்கே என்ற கேள்விக்குப் பதில், இந்த நிலநடுக்கத்தில் நாம் எங்கே, மனித சமுதாயம் எங்கே என்ற கேள்விகளையும் எழுப்பலாம்.

நிலநடுக்கமே, இப்போது, இயற்கையில், தானாக ஏற்படும் விபரீதமா, அல்லது, மனிதர்கள், இயற்கையை, அளவுக்கதிகமாய் சீர்குலைத்து வருவதன் எதிரொலியா, என்ற விவாதம் எழுந்துள்ளது. நிலநடுக்கம், இயற்கையில் ஏற்படும் விபரீதம் என்றே ஏற்றுக்கொண்டாலும், ஹெயிட்டி, நேபாளம் போன்ற ஏழை நாடுகளில் ஏற்படும் நிலநடுக்கங்களில், பெருமளவில் உயிர்கள் பலியாவதற்கு, அங்கு கட்டப்பட்டிருக்கும் தரம்குறைந்த கட்டடங்களே காரணம் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வரும்போது, மனசாட்சியுள்ள மனிதர்கள் எங்கே என்ற கேள்வியும் ஓங்கி ஒலிக்கிறது.

வறிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும்போது, வறியோரின் குடியிருப்புக்களே பெருமளவில் தரைமட்டமாகின்றன என்பதும், அந்த இடிபாடுகளில் சிக்கியிருப்போர் வறியோர் என்ற காரணத்தால், அவர்களை மீட்கும் பணிகளிலும் அக்கறையற்ற தாமதங்கள் உருவாகி, இன்னும் பல நூறு உயிர்கள் பலியாகின்றன என்பதும், மனிதர்களாகிய நம்மைப்பற்றிய கேள்விகளையே அதிகம் எழுப்புகின்றன.

இன்று, இவ்வுலகை, பெருமளவு வதைத்துவரும் கோவிட்-19 கொள்ளைநோயை, கடவுள் வழங்கிய தண்டனையாக பறைசாற்றிவரும் பல மதத்தலைவர்களை, இந்நாள்களில் கண்டுள்ளோம். ஆழமாக ஆய்வு செய்தால், நம் கட்டுக்கடங்காத பேராசையின் காரணமாக, இயற்கையை நாம் சீரழித்ததால், இயற்கை, இந்தக் கிருமியின் வடிவில் பதிலிறுத்துள்ளது என்பது, இக்கொள்ளைநோயைப் பற்றி சொல்லப்படும் ஒரு விளக்கம். இதைவிடக் கொடுமையான ஒரு விளக்கமும் அவ்வப்போது சொல்லப்படுகிறது. அணுசக்தியை ஆயுதங்களாக உருவாக்கியதுபோல், நுண்கிருமிகளை ஆயுதங்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஓர் ஆய்வுக்கூடத்திலிருந்து வெளியேறிய கிருமியே, கோவிட் 19 என்ற கொள்ளைநோயாக உருவாகியுள்ளது என்ற கருத்தும் அவ்வப்போது சொல்லப்படுகிறது.

துன்ப நேரங்களில், கடவுளை எளிதாக குற்றம் கூறி, அவரை நோக்கி, நாம் வழக்கமாக எழுப்பும் கேள்விகளை, நம் மனதை நோக்கியும், சமுதாயத்தை நோக்கியும் எழுப்பி, நம் தேடல்களைத் தொடர்ந்தால், இன்னும் பல தெளிவுகள் கிடைக்கும்.

உலகெங்கும், அநியாயங்கள் பல நடந்தும், கடவுள் ஏன் சும்மா இருக்கிறார்? என்பது, கடவுளைப்பற்றி அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி. இக்கேள்விக்குப் பதில்கூறும்வண்ணம், இயேசு கூறிய 'காய்க்காத அத்திமரம்' உவமையையும் (லூக்கா 13:6-9), அதைத் தொடர்ந்து, கூன் விழுந்த பெண்ணை அவர் குணமாக்கியப் புதுமையையும், நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2020, 12:05