தேடுதல்

Vatican News
இயேசு உடனே தம் கையை நீட்டி பேதுருவைப் பிடித்து, "நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?" என்றார்.  - மத்தேயு 14:31 இயேசு உடனே தம் கையை நீட்டி பேதுருவைப் பிடித்து, "நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?" என்றார். - மத்தேயு 14:31 

பொதுக்காலம் 19ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அலையும், புயலும் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கும். இருப்பினும், அஞ்சாது செல்வோம்.... புயலின் நடுவில், கடலின் நடுவில், கொள்ளைநோயின் நடுவில், கடவுள் நம்மோடு இருக்கிறார்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 19ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

ஆகஸ்ட் 4, கடந்த செவ்வாயன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் கிழக்குக் கடற்கரையில் 'Isaias' என்ற பெயர் கொண்ட புயல் வீசியது. அதே நாளில், அந்நாட்டின் மேற்குக் கடற்கரையில் 'Apple Fire' என்ற பெயரில் காட்டுத் தீ பரவிவந்தது. இதைக்குறித்து, New York Times என்ற நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில், "கிழக்குக் கடற்கரையில் புயல், மேற்குக் கடற்கரையில் தீ. இடைப்பட்ட நாட்டில், கொள்ளைநோய்" என்று எழுதப்பட்டிருந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டைக் குறித்து எழுதப்பட்டிருந்த இந்த உருவகம், இன்று உலகம் அனைத்திற்கும் பொருந்துவதுபோல் தெரிகிறது.

புயல், வெள்ளம், காட்டுத்தீ, கொள்ளைநோய் என்ற அனைத்துமே நம் கட்டுப்பாட்டில் இல்லை, அவை தானாகவே நம்மைத் தாக்கின என்று கூறிவந்த காலம் போய், இப்போது, நம்மைச் சுற்றி நிகழும் காலநிலை மாற்றங்கள், நம்மை நிலைகுலையைச் செய்துள்ள கொள்ளைநோய் ஆகிய அனைத்திற்கும், மனிதர்களாகிய நாம், ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்துள்ளோம் என்பதை மறுப்பதற்கில்லை.

இயற்கையை அழிப்பதில் ஆரம்பித்து, மனிதர்களை அழிப்பது வரை, பல்வேறு ஆபத்தான சோதனைகளில் நாம் ஈடுபட்டு வருகிறோம். நாம் எடுத்துவரும் ஆபத்தான முயற்சிகளுக்கு, அண்மையில் நிகழ்ந்த மற்றொரு விபத்து, ஓர் எடுத்துக்காட்டு. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கரைகளை புயலும், நெருப்பும் தாக்கிய அதே ஆகஸ்ட் 4, கடந்த செவ்வாயன்று, லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடிவிபத்தில், 130க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மற்றும், 5000த்திற்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.

பெய்ரூட்டில், அந்த வெடிவிபத்து நிகழ்ந்தபோது உருவான காளான் வடிவப் புகை மேகம், 75 ஆண்டுகளுக்கு முன், ஜப்பானில் எழுந்த காளான் வடிவப் புகை மேகத்தை நினைவில் கொணர்ந்தது. 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரிலும், 9ம் தேதி, நாகசாகி நகரிலும், அமெரிக்க ஐக்கிய நாடு வீசிய அணுகுண்டுகளால் உருவான காளான் வடிவப் புகைமேகத்திலிருந்து வெளிப்பட்ட அணுக்கதிர்கள், 2,26,000த்திற்கும் அதிகமான உயிர்களைக் கொன்றது. தொடர்ந்துவந்த ஆண்டுகளில், அணுக்கதிர்களின் தாக்கம், இன்னும் பல்லாயிரம் பேரின் உயிர்களை, சிறிது, சிறிதாகக் கொன்றது. ஆகஸ்ட் 6, வியாழனன்றும், ஆகஸ்ட் 9, இந்த ஞாயிறன்றும், ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணுகுண்டு தாக்குதலின் 75ம் ஆண்டு நினைவுகள் கடைபிடிக்கப்பட்டன. அணுகுண்டு வீச்சால் உயிரிழந்தோருக்கும், ஆகஸ்ட் 4, பெய்ரூட் வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கும், நம் அஞ்சலியைச் செலுத்தி, நம் சிந்தனைகளைத் துவக்குவோம்.

இயற்கை பேரிடர்களாலோ, மனிதரின் வன்முறைகளாலோ, துன்பங்கள் நம்மைத் தாக்கும்போது, கடவுள் எங்கே? என்ற கேள்வியை அடிக்கடி நாம் எழுப்புகிறோம். வாழ்வில், துன்பங்களும், போராட்டங்களும், நம்மைச் சூழும் நேரங்களில், கடவுள் காணாமற் போய்விட்டதைப் போல் உணர்கிறோம்.

உலகப்புகழ் பெற்ற மனநல மருத்துவர், கார்ல் யுங் (Carl Jung) அவர்களின் அறைக்கு வெளியே, ஒரு கல்லில் பொறிக்கப்பட்டிருந்த சொற்கள் இவை: "Called or Not, God is Present" - "அழைத்தாலும், அழைக்கவில்லையென்றாலும், கடவுள் எப்போதும் பிரசன்னமாகியிருக்கிறார்". மறுக்கமுடியாத இந்த உண்மையை, நம் உள்ளத்தில் இன்னும் ஆழமாய்ப் பதிக்க, இன்றைய ஞாயிறு வழிபாடு, நமக்கு வாய்ப்பளிக்கிறது. நம் வாழ்வில், எவ்வடிவில், எவ்வகையில், கடவுள் உடன் இருக்கிறார் என்ற உண்மையை, இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலியா வழியாகவும், நற்செய்தியில் புனித பேதுரு வழியாகவும் கற்றுக்கொள்ள முயல்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில் நாம் சந்திக்கும் இறைவாக்கினர் எலியா, தன் உயிருக்குப் பயந்து, குகையில் ஒளிந்திருக்கிறார். பாகால் என்ற தெய்வத்தை வைத்து, பிழைப்பு நடத்திவந்த பொய்வாக்கினர்களை பழிதீர்த்த இறைவாக்கினர் எலியா, (அரசர்கள் முதல் நூல் 18: 40) அரசி ஈசபேலின் கோபத்திற்கு உள்ளானதால், நாட்டைவிட்டு ஓடிப்போகிறார். தான் வாழ்ந்தது போதும் என்று விரக்தியடைந்த இறைவாக்கினர் எலியாவை, தன் திருமலைக்கு அழைத்துச் செல்கிறார், இறைவன். அங்கே, தன்னைச் சந்திக்கும்படி, இறைவன், எலியாவுக்கு அழைப்பு விடுக்கிறார். இந்த அழைப்பைத் தொடர்ந்து அங்கு வந்த சுழல்காற்று, நிலநடுக்கம், தீ ஆகியவற்றில் இறைவன் இல்லை. இவற்றிற்குப் பின் வந்த ‘அடக்கமான மெல்லிய ஒலி’யில் (1 அரசர்கள் 19: 12-13) இறைவனின் அழைப்பை எலியா கேட்கிறார்.

சக்தி வாய்ந்த அரசியை எதிர்த்து, தன்னைக் காக்கவரும் இறைவன், சக்தியின் வெளிப்பாடுகளான சுழல்காற்று, நிலநடுக்கம், தீ இவற்றின் வழியே வரவேண்டும் என்பது, எலியாவின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கலாம். இந்த எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக, மெல்லிய ஒலியில் இறைவன் இறைவாக்கினரைச் சந்தித்தது, எலியாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்ல பாடம். நாம் எதிர்பாராத வழிகளில் நம்மை சந்திப்பது, இறைவனின் அழகு. இன்றைய நற்செய்தி நிகழ்விலும் இயேசு, தன் சீடர்களைச் சந்திக்க தேர்ந்தெடுத்த ஒரு வியப்பான வழியை நாம் காண்கிறோம்.

இயேசு கடல்மீது நடந்தது, பேதுரு கடல்மீது நடக்க முயன்றது ஆகிய நிகழ்வுகள் இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளன. இயேசு 5000 பேருக்கு உணவளித்த பிறகு அன்று மாலை, அல்லது, இரவே, இந்தப் புதுமை நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.

இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளே நமக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தருகின்றன. பசியால் வாடியிருந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்த இயேசு, உடனே அவ்விடத்தை விட்டு அகல நினைத்தார். அது மட்டுமல்ல. தன் சீடர்களையும், அவ்விடத்தைவிட்டு செல்லும்படி கட்டாயப்படுத்தினார் என்று, இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இயேசு ஏன் இவ்விதம் நடந்துகொண்டார் என்பதற்குரிய காரணத்தை, யோவான் நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. யோவான் நற்செய்தியிலும் இயேசு, 5000 பேருக்கு உணவளித்த புதுமை சொல்லப்பட்டுள்ளது. அப்புதுமை முடிந்ததும், அங்கு உருவானச் சூழலை, நற்செய்தியாளர் யோவான் இவ்விதம் கூறியுள்ளார்:

யோவான் நற்செய்தி: 6: 14-15

இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

வயிறார உண்டவர்கள், இயேசுவை, வாயாரப் புகழ்ந்திருக்கவேண்டும். அந்தக் கூட்டத்தில் ஒருவர் திடீரென, "இவர்தாம் நாம் இத்தனை ஆண்டுகளாய் காத்து கிடந்த அரசர்" என்று உரக்கச் சொல்லியிருக்கலாம். அத்துமீறிச் சென்ற அவர்களது எண்ணங்களையும், அவ்வெண்ணங்களை செயல்படுத்த அவர்கள் கொண்ட வேகத்தையும் பார்த்தார் இயேசு. அவர்கள் மத்தியிலிருந்து விலகிச்சென்றார்.

கூட்டத்தில் உருவாகும் நிதானமற்ற உணர்வுகள், கற்களைத் திரட்டி, ஒருவருக்குக் கோவில் கட்டக்கூடும். அல்லது, அதே கற்களை எறிந்து, அவரைக் கொன்று, சமாதியும் கட்டக்கூடும். இதை நன்கு உணர்ந்திருந்த இயேசு, அங்கிருந்து அகன்று சென்றார். எதற்காக? தன் தந்தையுடன் உறவாட, உரையாட...

தந்தையோடு தனியே உறவாடச்சென்ற இயேசு, அங்கேயேத் தங்கிவிடவில்லை. காற்றோடு, கடலோடு போராடிய தன் சீடர்களைத் தேடிவந்தார். அதுவும், கடல்மீது நடந்து வந்தார்.

கடல்மீது நடந்துவருவது இயேசுதான் என்பதை, சீடர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அவர்களது எண்ணங்கள், பார்வைகள் எல்லாம், அவர்களைச் சூழ்ந்தெழுந்த கடல் அலைகளிலும், சுழற்றியடித்த காற்றிலும் இருந்ததால், தங்களைச் சந்திக்க வந்த கடவுளை அவர்களால் பார்க்கமுடியவில்லை.

2020ம் ஆண்டு புலர்ந்ததிலிருந்து நம்மைச் சூழ்ந்து அச்சுறுத்திவரும் கொள்ளைநோய், நம் முழு கவனத்தையும் ஈர்த்துள்ளதால், நம் உள்ளங்கள் பெருமளவு சோர்ந்துள்ளன. ஒவ்வொருநாளும் நம்மை வந்தடையும் செய்திகள், நம் நம்பிக்கையைக் குலைத்துவருகின்றன. கண்ணுக்குத் தெரியாத, இதுவரை, யாராலும் தெளிவாக புரிந்துகொள்ள இயலாத ஒரு கிருமியைப்பற்றி, உயிரியல் ஆய்வகங்களும், நலவாழ்வு நிறுவனங்களும், ஒவ்வொரு நாளும் கூறிவரும் வெவ்வேறு கருத்துக்களை, அதிலும், முரண்பட்டக் கருத்துக்களை நம்பி, அச்சத்தில் வாழும் நாம், நம்மிடம் உள்ள சக்தியை, அந்தச் சக்தியை நமக்கு வழங்கும் கடவுளை நம்பத் தயங்குகிறோம். நம் தயக்கத்தை நீக்கி, நம்பிக்கையை வளர்க்க இறைவனிடம் உருக்கமாக மன்றாடுவோம்.

இயேசு கடல்மீது நடந்த நிகழ்வு, மத்தேயு, மாற்கு, யோவான் ஆகிய மூன்று நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ளது. நற்செய்தியாளர் மத்தேயு மட்டும், இன்னுமொரு நிகழ்வை இங்கு இணைக்கிறார். அதுதான், பேதுரு கடல் மீது நடக்கமுயன்ற நிகழ்வு. (மத்தேயு நற்செய்தி 14: 26-32)

பின்விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல், துடிப்புடன் செயல்பட்ட பேதுரு, தானும் தண்ணீரில் நடக்க விழைகிறார். இயேசுவும் அவரை அழைக்கிறார். தண்ணீரில் நடப்பது, ஒரு சவால். அதுவும், புயல், அலை என, பயமுறுத்தும் சூழலில், தண்ணீரில் நடப்பது, பெரியதொரு சவால்.

இதில் கவனிக்க வேண்டிய ஓர் அம்சம் என்னவென்றால், பேதுருவுக்கு அந்தச் சவாலான அழைப்பைத் தருவதற்கு முன்பு, இயேசு, காற்றையும், கடலையும் அமைதிப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.

வாழ்க்கையில் வீசும் புயல்கள் எல்லாம் ஓய்ந்த பிறகுதான், பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்த பிறகுதான், இறைவனைச் சந்திக்க முதல் அடி எடுத்துவைப்போம் என்று நினைக்கும் நம் எண்ணங்கள் தவறு; மாறாக, அந்தப் புயலின் நடுவில், இறைவன் காத்துக்கொண்டிருப்பார்; துணிந்து சென்று, அவரைச் சந்திக்கலாம் என்பதை, இயேசு, இந்நிகழ்வின் வழியே, நமக்குச் சொல்லித்தருகிறார்.

மற்றுமொரு சிந்தனையும், நம் கவனத்தை ஈர்க்கிறது. பேதுரு நீரில் மூழ்கினார் என்பதைக் கேட்கும்போது, மனதில் நெருடல் உண்டாகிறது. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுகிறது. மீன்பிடித் தொழிலை வாழ்வாகக் கொண்டிருந்த பேதுருவுக்கு, தண்ணீர், அலைகள், புயல் ஆகிய அனைத்தும் பழகிப்போன விடயங்கள். அத்தகைய அனுபவம் கொண்ட பேதுரு, இந்நிகழ்வில் நீரில் மூழ்கக் காரணம் என்ன?

நமது திறமைகள், நமது முயற்சிகள் இவற்றையே அளவுக்கு அதிகமாக நம்பும்போது, இவை அனைத்தும் நம்மிடமிருந்து விடைபெற்றுப் போகக்கூடும் என்பதைச் சொல்லித்தரவே, பேதுரு நீரில் மூழ்கினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதையொத்த கருத்தை இறையியல் பேராசிரியரான அருள்பணி Ron Rolheiser அவர்கள் தன் மறையுரை ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

நம் விசுவாச வாழ்வில், சிகரங்களைத் தோட்ட நேரங்கள் உண்டு; பாதாளத்தில் புதைக்கப்பட்ட நேரங்களும் உண்டு. இந்த மாற்றத்தை, அருள்பணி Rolheiser அவர்கள் கூறும்போது, நம் விசுவாசம், சில நாள்கள், நம்மை, தண்ணீரின் மேல் நடக்கவைக்கிறது; வேறு சில நாள்கள், தண்ணீரில் போட்ட கல்லைப்போல, மூழ்கச் செய்துவிடுகிறது என்று கூறியுள்ளார்..

எப்போதெல்லாம், நம் விசுவாசம், இறைவனை மையப்படுத்தியிருந்ததோ, அப்போதெல்லாம், நம்மால், தண்ணீர்மேல் நடக்கமுடிந்தது. ஒரு சில வேளைகளில், நாம் ஆற்றும் செயல்கள், நம்மையே ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவதால், நமது கவனம் இறைவனைவிட்டு விலகி, நமது சக்தி, நமது திறமை இவற்றின் மீது திரும்புகிறது. அவ்வேளையில், நாம் தண்ணீரில் மூழ்கத் துவங்குகிறோம். இதுதான் பேதுருவுக்கு நிகழ்ந்தது.

நம்மை அச்சுறுத்திவரும் கோவிட்-19 கொள்ளைநோய் தொடர்ந்து நம்மோடு இருக்கும் என்பதையும், அத்துடன் வாழப் பழகிக்கொள்ளவேண்டும் என்பதையும், இப்போது பலரும் கூறிவருகின்றனர். பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அலையும், புயலும் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கும். இருப்பினும், அஞ்சாது செல்வோம்.... புயலின் நடுவில், கடலின் நடுவில், கொள்ளைநோயின் நடுவில், கடவுள் நம்மோடு இருக்கிறார்.

இந்த ஞாயிறு வழிபாட்டில் பதிலுரைப்பாடலாக நாம் பயன்படுத்தும் திருப்பாடல் 85ல் ஒலிக்கும் நம்பிக்கைதரும் வரிகளுடன் இன்றைய சிந்தனைகளை நிறைவு செய்வோம்:

திருப்பாடல் 85

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும்.

08 August 2020, 13:19