கர்தினால் Andrew Yeom Soo-jung கர்தினால் Andrew Yeom Soo-jung  

விண்ணேற்புப் பெருவிழாவுக்கு கர்தினால் Yeom Soo-jung செய்தி

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, ஜப்பானிய ஆதிக்கத்திலிருந்து கொரியா விடுதலை அடைந்ததை, அந்நாடு சுதந்திர நாளாக சிறப்பிக்கும் வேளையில், கத்தோலிக்கர்கள், இந்த விடுதலையை, அன்னை மரியா வழங்கிய ஒரு கொடையாக சிறப்பித்து வருகின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா மகிழ்வை, வட கொரிய சகோதரர், சகோதரிகளுடன் இணைந்து கொண்டாடும் வாய்ப்பிற்காக, நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்று, Seoul பேராயர், கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள், ஆகஸ்ட் 12, இப்புதனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

"அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" (லூக்கா 1:28) என்ற தலைப்பில், கர்தினால் Yeom Soo-jung அவர்கள் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், வட மற்றும் தென் கொரிய நாடுகள், திறந்த மனதுடன் உரையாடல்களை மேற்கொள்வதற்கு, அன்னை மரியாவின் துணையை வேண்டியுள்ளார்.

1945ம் ஆண்டு, ஜப்பானிய ஆதிக்கத்திலிருந்து கொரியா விடுதலைப் பெற்றதன் 75ம் ஆண்டும், வட, தென் கொரிய நாடுகளிடையே போர் மூண்டதன் 70ம் ஆண்டு நிறைவும் இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதையொட்டி, Pyongyang மறைமாவட்டத்தை, பாத்திமா அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கத் தீமானித்திருப்பதாக, கர்தினால் Yeom Soo-jung அவர்கள் கூறியுள்ளார்.

இந்த அர்ப்பணத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆசீரை தான் வேண்டியதாகவும், ஆகஸ்ட் 15ம் தேதி, நடைபெறும் அர்ப்பணத்திற்கு, திருத்தந்தை, தன் ஆசீரை உறுதியளித்துள்ளார் என்றும், கர்தினால் Yeom Soo-jung அவர்கள் அறிவித்துள்ளார்.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, ஜப்பானிய ஆதிக்கத்திலிருந்து கொரியா விடுதலை அடைந்ததை, அந்நாடு சுதந்திர நாளாக சிறப்பிக்கும் வேளையில், கத்தோலிக்கர்கள், இந்த விடுதலையை, அன்னை மரியா வழங்கிய ஒரு கொடையாக சிறப்பித்து வருகின்றனர் என்றும், எனவே, அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, அனைத்து பேராலயங்களிலும், திருப்பலி நேரத்தில், நாட்டுக்கோடி ஏற்றப்படுகிறது என்றும், UCA செய்தி கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2020, 14:09