தேடுதல்

Vatican News
தென் கொரியத் தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ் தென் கொரியத் தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

திருத்தந்தையின் கொரிய பயணம் – ஆறு ஆண்டுகளுக்குப்பின்...

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோருடன் மேற்கொண்ட உரையாடலும், மறையுரை சிந்தனைகளும் இன்னும் தங்கள் நாட்டில் ஓங்கி ஒலித்தவண்ணம் உள்ளன - ஆயர் Heung-sik

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தென் கொரியா நாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு ஆறு ஆண்டுகள் சென்றபின்னரும், அவரது கூற்றுகள், தங்கள் நாட்டில் இன்னும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன என்று, அந்நாட்டு ஆயர் ஒருவர், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

2014ம் ஆண்டு, ஆகஸ்ட் 13ம் தேதி முதல், 18ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரியா நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தைக் குறித்து Daejeon மறைமாவட்டத்தின் ஆயர்  Lazzaro You Heung-sik அவர்கள் தன் பேட்டியில் நினைவுகூர்ந்தார்.

"மிக அமைதியான காலைப்பொழுதின் நாடு" என்று திருத்தந்தையால் அழைக்கப்பட்ட தென் கொரிய நாட்டில், ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளிலும், 129 பேரை அருளாளர்களாக உயர்த்திய திருப்பலியிலும் திருத்தந்தை கலந்துகொண்டதைக் குறித்து, ஆயர் Heung-sik அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

கொரிய நாட்டின் திருஅவை, புனிதமாக, மறைபரப்புப்பணியில் ஆர்வம் கொண்டதாக, பணிவாக இருக்கவேண்டும் என்றும், இவ்வுலகின் அளவுகோல்களிலிருந்து வெகுதூரம் விலகி, தனக்கே உரிய அளவுகோல்களை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரிய ஆயர்களிடம் கூறியதை ஆயர் Heung-sik அவர்கள் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

Solmoe திருத்தலத்திலும், பின்னர், ஆசிய இளையோர் நாளின் சிகரமாக அமைந்த திருப்பலியிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோருடன் மேற்கொண்ட உரையாடலும், மறையுரை சிந்தனைகளும் இன்னும் தங்கள் நாட்டில் ஓங்கி ஒலித்தவண்ணம் உள்ளன என்று, ஆயர் Heung-sik அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

"விழித்தெழுங்கள்" என்று திருத்தந்தை இளையோரைப் பார்த்து கூறியதை நினைவுகூரும்வண்ணம் அதே பெயரில், இளையோர் கலாச்சார மையம் ஒன்று 2021ம் ஆண்டு திறந்துவைக்கப்படும் என்று, ஆயர் Heung-sik அவர்கள், தன் பேட்டியில் கூறினார்.

13 August 2020, 13:59