பிலிப்பீன்ஸ் நாட்டில் அரசுத்தலைவரின் உரைக்கு எதிர்ப்பு பிலிப்பீன்ஸ் நாட்டில் அரசுத்தலைவரின் உரைக்கு எதிர்ப்பு  

பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவரின் தேசிய உரை குறித்து தலத்திருஅவை

பிலிப்பீன்ஸ் நாட்டில், மின்சக்தி பயன்பாட்டிற்கென அணுசக்தி பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுவதில் ஒளிவுமறைவற்ற தன்மை அவசியம் - தலத்திருஅவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாடு, ஆசிய-பசிபிக் பகுதியில், கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் கொண்டிருக்கும்வேளை, அந்நாட்டு அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தெர்த்தே (Rodrigo Duterte) அவர்கள், இந்த கொள்ளைநோயைக் கையாளும்முறை குறித்து குறை கூறியுள்ளது, பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கத் திருஅவை.

பிலிப்பீன்சில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 89,374 ஆக உயர்ந்துள்ளது என்றும், இந்த எண்ணிக்கை, சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைவிட அதிகம் என்றும் WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

இவ்வேளையில், அரசுத்தலைவர் துத்தெர்த்தே அவர்கள், அந்நாட்டிற்கு ஆற்றிய ஐந்தாவது தேசிய உரை குறித்து விமர்சித்துள்ள, Kidapawan (Cotabato) ஆயர் Jose Colin Bagaforo அவர்கள், நாட்டு மக்களின் உடல்நலன் மற்றும், கொள்ளைநோய்க்கு எதிரான சிறந்த நடவடிக்கை ஆகியவற்றைவிட, கர்வம், முற்சார்பு எண்ணம், அதிகாரம் போன்றவையே, அந்த உரையில் மேலோங்கி இருந்தன என்று கூறியுள்ளார்.

துத்தெர்த்தே அவர்கள், ஒரு மணி 40 நிமிடங்கள் ஆற்றிய நீண்ட உரையில், பிரிவினையை உருவாக்கும், மற்றும், பகட்டு வார்த்தைகளே இடம்பெற்றிருந்தன என்றும் கூறிய, பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் அமைப்பின் தலைவரான ஆயர் Bagaforo அவர்கள், நாட்டிற்கு இப்போது மிக முக்கியமாகத் தேவைப்படும் ஒன்றிப்பை உருவாக்குவதற்கு கிடைத்த வாய்ப்பை, அரசுத்தலைவர் நழுவ விட்டுவிட்டார் என்றும் குறிப்பிட்டார். (AsiaNews)

இதற்கிடையே, பிலிப்பீன்ஸ் நாட்டில் அணுசக்தி பயன்படுத்தப்படுவதற்கு இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி பரிசீலனை செய்வதற்கு, அந்நாட்டு அரசு திட்டமிட்டுவருவது குறித்து கருத்து தெரிவித்த, அந்நாட்டு ஆயர் Ruperto Santos அவர்கள், மின்சக்தி பயன்பாட்டிற்கென அணுசக்தி பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுவதில் ஒளிவுமறைவற்ற தன்மை அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2020, 13:39