நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள்  

நைஜீரியாவில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப நாள்

நைஜீரியாவில், அண்மை மாதங்களில், பல்வேறு புரட்சிக் குழுக்கள், பலநேரங்களில் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து, கொலைகள், ஆள்கடத்தல்கள் மற்றும், வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன - கத்தோலிக்க ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாதுகாப்பற்ற ஒரு சூழலை, தொடர்ந்து எதிர்கொண்டுவரும் நைஜீரியாவில், குடிமக்கள் அனைவரும் அமைதியிலும், பாதுகாப்பிலும் வாழ்வதற்கு உதவும் நோக்கத்தில், அந்நாட்டு கிறிஸ்தவ சபைகள் அனைத்தும் இணைந்து, தேசிய செப நாள் ஒன்றைக் கடைப்பிடிப்பதற்குத் தீர்மானித்துள்ளன.

ஆகஸ்ட் 22, வருகிற சனிக்கிழமையிலிருந்து, செப்டம்பர் 30ம் தேதி வரை நாற்பது நாள்களுக்கு, தேசிய இறைவேண்டல் நாள்களாக, நைஜீரிய கத்தோலிக்க ஆயர் பேரவை ஏற்கனவே அறிவித்துள்ளவேளை, அந்நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபைகளும் இணைந்து, ஆகஸ்ட் 23, வருகிற ஞாயிற்றுக்கிழமையை தேசிய செப நாளாக அறிவித்துள்ளது.

கத்தோலிக்கம், பெந்தக்கோஸ்து, இவாஞ்சலிக்கல், கிறிஸ்தவ அவை உட்பட, நாட்டின் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 23ம் தேதியன்று, நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்காக, குறைந்தது 15 நிமிடங்களாவது இறைவேண்டல் செய்யுமாறும், கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், ஒப்புரவு நிலவவும், நாடு நலம் பெறவும், குறிப்பாக, கோவிட்-19 கொள்ளைநோய் சூழலில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அந்நாடு குணம்பெறவும், வருகிற ஞாயிறன்று சிறப்பாக இறைவனை மன்றாடுமாறு, அவ்வறிக்கை வலியுறுத்துகிறது.

இதற்கிடையே, நைஜீரியாவில், குறிப்பாக, அண்மை மாதங்களில், பல்வேறு புரட்சிக் குழுக்கள், பலநேரங்களில் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொலைகள், ஆள்கடத்தல்கள் மற்றும், வன்முறைகளில் ஈடுபட்டுவருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், அந்நாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறைச் சூழலை, ஓர் இனப்படுகொலை என்று பலர் குறிப்பிடுகின்றனர் என்று கூறியுள்ளனர்.

தற்போது, நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலையை அகற்ற, அரசு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும், ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2020, 13:59