லூர்து நகர் திருத்தலத்தில், அன்னை மரியா காட்சியளித்த கெபி லூர்து நகர் திருத்தலத்தில், அன்னை மரியா காட்சியளித்த கெபி 

லூர்து நகர் திருத்தலத்தில் பிரான்ஸ் மக்களின் திருப்பயணம்

இந்தக் கொள்ளைநோய் காலத்தில், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் வருகை, திருத்தந்தையின் அருகாமையை லூர்து நகர் திருத்தலத்திற்குக் கொணர்கிறது - ஆன்மீகப் பணியாளர் Nicola Ventriglia

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்தில், ஆகஸ்ட் 12, இப்புதன் முதல், 16 வருகிற ஞாயிறு முடிய, பிரான்ஸ் நாட்டு மக்களின் சிறப்புத் திருப்பயணம் நடைபெறும் என்றும், ஆகஸ்ட் 15, இச்சனிக்கிழமை கொண்டாடப்படும் அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தலைமையேற்று நடத்தும் சிறப்புத் திருப்பலி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் 147வது திருப்பயணம்

இத்திருத்தலத்தில் ஆன்மீக வழிகாட்டியாகப் பணியாற்றும் அருள்பணி Nicola Ventriglia அவர்கள், இவ்வாண்டு நடைபெறுவது, பிரான்ஸ் நாடு மேற்கொள்ளும் 147வது திருப்பயணம் என்றும், இந்தக் கொள்ளைநோய் காலத்தில், நம் நம்பிக்கையின் ஊற்றுக்குத் திரும்பிச் செல்வது முக்கியம் என்றும் கூறினார்.

Assumptionists என்றழைக்கப்படும் மரியாவின் விண்ணேற்பு துறவு சபையைச் சேர்ந்தவர்கள், ஒவ்வோர் ஆண்டும் நடத்திவரும் இத்திருப்பயணத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம் என்றாலும், இவ்வாண்டு, கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடியால், இத்திருப்பயணத்தில் ஒரு சிலரே பங்கேற்பர் என்று அருள்பணி Ventriglia அவர்கள் கூறினார்.

குணமளிக்கும் குளியல் தொட்டிகள்

கடந்த சில மாதங்களாக இத்திருத்தலத்தில் மூடிவைக்கப்பட்டிருந்த குணமளிக்கும் குளியல் தொட்டிகள், இந்தப் பெருவிழாவை முன்னிட்டு, மீண்டும் திறக்கப்படும் என்றும், இத்தொட்டிகளை திருப்பயணிகள் பார்வையிடலாமே தவிர, அவற்றில் இறங்கி நீராட இயலாது என்றும் அருள்பணி Ventriglia அவர்கள் குறிப்பிட்டார்.

நெருக்கடி நிறைந்த இந்தக் கொள்ளைநோய் காலத்தில், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் வருகை, திருத்தந்தையின் அருகாமையை இத்திருத்தலத்திற்குக் கொணர்கிறது என்று ஆன்மீகப் பணியாளர் Ventriglia அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2020, 13:50