கைதி கைதி 

கைதிகள் சமுதாயத்தில் மீள்ஒருங்கிணைக்கப்பட

தாங்கள் செய்த தீமைக்காக ஏற்கனவே தண்டனைகளை அனுபவித்துள்ள கைதிகள், புறக்கணிப்பு மற்றும், ஒதுக்கப்படல் போன்றவற்றால் புதிய சமுதாய தண்டனைகளுக்கு உட்படுத்தப்படக் கூடாது - ஆயர் ஆல்வின்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில், முன்னாள் கைதிகள், சமுதாயத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படவும், அவர்கள் மாண்புடன் வாழவும், உதவிகள் வழங்கப்படுமாறு, தலத்திருஅவை அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 2, இஞ்ஞாயிறன்று, இந்திய கத்தோலிக்கத் திருஅவை, சிறைப்பணி ஞாயிறைச் சிறப்பித்தவேளை, அந்நாளுக்கென மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்ட, இந்திய ஆயர் பேரவையின் சிறைப்பணிக்குழுவின் தலைவர், ஆயர், ஆல்வின் டிசில்வா (Allwyn D’Silva) அவர்கள், தண்டனை காலத்தை முடித்து திரும்பும் கைதிகள், சமுதாயத்தில் மாண்புடன் வாழ வழியமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சமுதாயத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படல் என்பது, முன்னேற்றம், கல்வி, தரமான வேலை, நலவாழ்வு வசதி, பொதுமக்கள் கூடும் இடங்களில் கலந்துகொள்ள அனுமதி போன்ற அனைத்திற்கும் உறுதியளிப்பதாகும் என்றும், மும்பை துணை ஆயர் ஆல்வின் டிசில்வா அவர்கள் கூறியுள்ளார்.

தாங்கள் செய்த தீமைக்காக ஏற்கனவே தண்டனைகளை அனுபவித்துள்ள கைதிகள், புறக்கணிப்பு மற்றும், ஒதுக்கப்படல் போன்றவற்றால் புதிய சமுதாய தண்டனைகளுக்கு, உட்படுத்தப்படக் கூடாது என்றும் ஆயரின் அறிக்கை கூறியது. 

2019ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற, சிறைப்பணி ஆன்மீக இயக்குனர்கள் பன்னாட்டு கருத்தரங்கில் பங்குபெற்றவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய உரையில், தண்டனை காலத்தை முடித்துத் திரும்பும் கைதிகள், சமுதாயத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது பற்றி, ஆயர் ஆல்வின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் கைதிகள், சமுதாயத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படாவிட்டால், வன்முறை, பாதுகாப்பின்மை, மனச்சோர்வு போன்ற ஆபத்துக்களில், அவர்கள் தங்களை மீண்டும் உட்படுத்தப்படக்கூடும் என்று எச்சரித்துள்ள ஆயர் ஆல்வின் அவர்கள், வேலை, திருமணம், குடும்ப வாழ்வு, வீடுகள் கட்ட உதவி போன்ற வாய்ப்புகள், அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

சிறைப்பணியின் முக்கியத்துவத்தையும், தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆயர் ஆல்வின் அவர்கள், மனம்வருந்துதல், ஒப்புரவு, மறுசீரமைப்பு போன்றவற்றில் ஈடுபட கைதிகள் ஊக்குவிக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உலகெங்கும் உள்ள கைதிகள், குறிப்பாக, இந்தியாவின் 1412 சிறைகளிலுள்ள ஏறத்தாழ 45 இலட்சம் கைதிகள், அவர்களின் குடும்பங்கள், சிறை அதிகாரிகள், தன்னார்வலர்கள், சிறையில் பலியானவர்கள் ஆகிய அனைவரையும் சிறப்பாக நினைத்து செபிப்போம் என்றும், ஆயரின் அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.  

PMI எனப்படும் இந்திய கத்தோலிக்க திருஅவையின் சிறைப்பணி அமைப்பில், எட்டாயிரத்திற்கும் அதிகமான தன்னார்வலர்கள் உள்ளனர். மேலும், இந்த அமைப்பு, நடத்துகின்ற மறுவாழ்வு மையங்களில், கைதிகளின் குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2020, 15:11