புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் 'Salus Populi Romani' திருப்படத்திற்கு முன் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் 'Salus Populi Romani' திருப்படத்திற்கு முன் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

மரியன்னையின் திருத்தலங்களுக்கு தாய்வீடு

புனித மேரி மேஜர் பெருங்கோவில், மேற்கத்திய நாடுகளில், அன்னை மரியாவுக்கென எழுப்பப்பட்ட முதல் பெருங்கோவில் என்பதால், இது, கிறிஸ்தவ உலகில் உள்ள மரியன்னையின் திருத்தலங்கள் அனைத்திற்கும் தாய்வீடாக உள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரில் உள்ள பல நூறு ஆலயங்களில், புனித மேரி மேஜர் பெருங்கோவில், தனியொரு இடம் வகிக்கிறது என்று, இந்தப் பெருங்கோவிலின் தலைமை அருள்பணியாளரான கர்தினால் Stanisław Ryłko அவர்கள், ஆகஸ்ட் 5, இப்புதனன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

ஆகஸ்ட் 5ம் தேதி, உரோம் நகர் புனித மேரி மேஜர் பெருங்கோவிலின் நேர்ந்தளிப்பு விழா சிறப்பிக்கப்பட்டதையடுத்து, இவ்விழா திருப்பலியை நிறைவேற்றிய கர்தினால் Ryłko அவர்கள், இப்பெருங்கோவில், மேற்கத்திய நாடுகளில், அன்னை மரியாவுக்கென எழுப்பப்பட்ட முதல் பெருங்கோவில் என்பதால், இது, கிறிஸ்தவ உலகில் உள்ள மரியன்னையின் திருத்தலங்கள் அனைத்திற்கும் தாய்வீடாக உள்ளது என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

இப்பெருங்கோவிலின் வரலாற்று நிகழ்வுகளை தன் மறையுரையின் துவக்கத்தில் சுருக்கமாகக் குறிப்பிட்ட கர்தினால் Ryłko அவர்கள், இந்த வரலாறு, திருஅவையின் ஆரம்பக் காலத்துடன் பின்னிப் பிணைந்தது என்றும், இவ்விழாவிற்கு வழங்கப்பட்டுள்ள வழிபாட்டு வாசகங்கள், இந்தப் பெருங்கோவில் உருவானதை தியானிக்க உதவுகின்றன என்றும் கூறினார்.

இறைவன் மனிதரிடையே தன் உறைவிடத்தை அமைத்தார் என்பதற்கு இந்த பெருங்கோவில் ஓர் அடையாளமாக உள்ளது என்பதை தன் மறையுரையில் கூறிய கர்தினால் Ryłko அவர்கள், உரோம் மக்களுக்கு நலம் வழங்கும் அன்னை என்ற பொருள்கொண்ட 'Salus Populi Romani' என்ற பெயர் தாங்கிய அன்னை மரியாவின் திருப்படம் இப்பெருங்கோவிலில் உள்ள ஒரு கருவூலம் என்பதையும் எடுத்துரைத்தார்.

"இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்" (லூக்கா 1:48) என்று அன்னை மரியா, தன் புகழ்ப்பாடலில் கூறியதன் ஓர் வெளி அடையாளமாக இந்தப் பெருங்கோவில் விளங்குகிறது என்றும், இங்கு வருவோர் அனைவரும் அன்னை மரியாவை பேறுபெற்றவர் என்று, இத்தனை நூற்றாண்டுகளாகப் போற்றி வருகின்றனர் என்றும், கர்தினால் Ryłko அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

கானா திருமண விருந்தில் தேவை ஒன்று உருவானதும், அங்கு பிரசன்னமான அன்னை மரியா, பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5) என்று கூறியதை நாம் வாழ்வில் ஒருபோதும் மறக்கவேண்டாம் என்ற விண்ணப்பத்துடன், புனித மேரி மேஜர் பெருங்கோவிலின் தலைமை அருள்பணியாளர் கர்தினால் Stanisław Ryłko அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2020, 14:39