ஹிரோஷிமா நாளில் உலகிற்கு அழைப்பு ஹிரோஷிமா நாளில் உலகிற்கு அழைப்பு 

இந்த உலகை அணு ஆயுதங்களிலிருந்து விடுதலை செய்யுங்கள்

உலகில் இன்றும் 16 ஆயிரம் அணு ஆயுதங்கள் சேமிப்பில் உள்ளன - ஜெர்மன் கிறிஸ்தவத் தலைவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்த உலகை அணு ஆயுதங்களிலிருந்து விடுதலை செய்யுங்கள் என்று, ஜெர்மனியின் கத்தோலிக்க மற்றும், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6, 9 ஆகிய இரு நாள்களில் அணு குண்டுகள் வீசப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜெர்மன் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அணு ஆயுதப் போர், கடந்தகால நிகழ்வு மட்டுமல்ல என்றும், இன்றும், உலகில், 16 ஆயிரம் அணு ஆயுதங்கள் சேமிப்பில் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்கள் அவசியம் என்ற உணர்வு, எக்காலத்தையும்விட இக்காலத்தில் அதிகரித்து வருவது கவலை தருகின்றது என்றும், இந்த அணு ஆயுத வளர்ச்சி குறித்து கண்டுகொள்ளாமல் நம்மால் இருக்க இயலாது என்றும் கூறியுள்ள அத்தலைவர்கள், உலகளாவிய அணு ஆயுதக்களைவு குறித்த ஒப்பந்தம் முழுமையாய் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி ஹிரோஷிமாவில் உரையாற்றியபோது, போர்களுக்காக அணு சக்தியைப் பயன்படுத்துவதும், அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதும் நன்னெறிக்கு முரணானது என்று கூறியதைக் குறிப்பிட்டுள்ள ஜெர்மன் கிறிஸ்தவத் தலைவர்கள், இந்த உலகை அணு ஆயுதங்களற்ற இடமாக அமைக்குமாறு, மனித சமுதாயத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த அறிக்கையில், ஜெர்மனியின் கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழு தலைவர் ஆயர் Heiner Wilmer அவர்களும், அந்நாட்டின் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைத் தலைவர் Renke Brahms அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2020, 13:33