பெலாருஸ் நாட்டின் Minsk நகரில் அரசை எதிர்த்து போராட்டம் பெலாருஸ் நாட்டின் Minsk நகரில் அரசை எதிர்த்து போராட்டம் 

பெலாருஸ் ஆயர்கள்: நாட்டின் ஒற்றுமைக்காக செபம்

பெலாருஸ் அரசியல் தலைமைக்கும், எதிர்க்கட்சி வேட்பாளர் Svetlana Tikhanovskaya உட்பட, பொதுமக்கள் மற்றும், சமுதாய அமைப்புகளுக்கிடையே உரையாடல் இடம்பெற, கத்தோலிக்க ஆயர்கள் அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பெலாருஸ் நாட்டில், அண்மையில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலின் முடிவுகளுக்கு எதிர்ப்புதெரிவித்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டங்கள் இடம்பெற்றுவரும்வேளை, அந்நாட்டு மக்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு, கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

பெலாருசில், ஏறத்தாழ 26 ஆண்டுகளாக அரசுத்தலைவர் பதவியிலிருக்கும், Alexander Lukashenko  அவர்கள், இம்மாதம் 9ம் தேதி, நடைபெற்ற தேர்தலில், மீண்டும் வெற்றி பெற்றுள்ளதை எதிர்க்கும் மக்கள் மீது, மேற்கொள்ளப்படும் கடும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுமாறும், அந்நாட்டு கத்தோலிக்க மற்றும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

அந்நாட்டில் தற்போது நிலவும் வன்முறைகள் மற்றும், குழப்பநிலைகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, கத்தோலிக்க அமைப்பின் உயர்மட்ட குழு, பெலாருஸ் அதிகாரிகள் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் சித்ரவதைகளை வன்மையாய்க் கண்டிப்பதாக அறிவித்துள்ளது.

அதேநேரம், கத்தோலிக்க சமுதாயக் கோட்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கி, வன்முறைகள் எந்த வடிவில் இடம்பெற்றாலும், அதை கத்தோலிக்கத் திருஅவை அனுமதிக்காது என்றும், அக்குழு கூறியுள்ளது.

அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் துவங்கிய எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட மக்களில், ஏறத்தாழ ஏழாயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, அறிக்கை வெளியிட்டுள்ள, ஐரோப்பாவில் நீதி மற்றும், அமைதியை ஊக்குவிக்கும் கூட்டமைப்பு, இந்தக் கைதுகளை நியாயப்படுத்தாமல், கைதானவர்களை, உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று பெலாருஸ் அரசை வலியுறுத்தியுள்ளது.

வாழ்வதற்கு உரிமை, சித்ரவதைகளுக்கு தடை, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு உரிமை, ஊடகச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், சனநாயகக் கோட்பாடுகளுக்கு ஒத்திணங்கி வாழ்தல் போன்றவை உள்ளிட்ட அனைத்து விதமான மனித உரிமைகள் முழுமையாக மதிக்கப்படுமாறும், அந்த கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பெலாருஸ் அரசியல் தலைமைக்கும், எதிர்க்கட்சி வேட்பாளர் Svetlana Tikhanovskaya உட்பட, பொதுமக்கள் மற்றும், சமுதாய அமைப்புகளுக்கிடையே உரையாடல் இடம்பெறவும், அமைதியை அடிப்படையாகக் கொண்ட உண்மையைத் தேடவும் வேண்டும் என்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் விடுத்த அழைப்புக்கு, ஐரோப்பிய கூட்டமைப்பும் தனது ஆதரவை வழங்கியுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், பெலாருஸ் நாட்டிற்காகச் செபிக்குமாறு, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் அழைப்புவிடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாருசின் தற்போதைய அரசுத்தலைவர் Alexander Lukashenko அவர்கள், 1994ம் ஆண்டு, ஜூலை மாதம் 20ம் தேதி முதல், அப்பதவியில் இருந்துவருகிறார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2020, 13:04