தேடுதல்

Vatican News
சீனாவில் Uyghur இன மக்கள் விடுதலை செய்யப்பட  அழைப்பு சீனாவில் Uyghur இன மக்கள் விடுதலை செய்யப்பட அழைப்பு  

சீனா, Uyghur இன மக்களை நடத்தும்முறை குறித்து கண்டனம்

இரண்டாம் உலகப் போரின்போது யூதர்கள் படுகொலை செய்யப்பட்டபின், உலகில் இத்தகைய படுகொலைகள் இனிமேல் ஒருபோதும் வேண்டாம் என்று உலகினர் கூறியதை 76 மதத்தலைவர்கள் நினைவுபடுத்தியுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சீன அரசு, Uyghur சிறுபான்மை முஸ்லிம் இன மக்களை நடத்தும்முறை, உலகில் இடம்பெற்ற யூத இனப் படுகொலைக்குப்பின் நடைபெறும், மிகவும் அதிர்ச்சியூட்டும் மனிதப் பெருந்துயரங்களில் ஒன்று என, இரு ஆசிய கர்தினால்கள் மற்றும், ஏனைய 74 மதத்தலைவர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையொன்று கூறுகிறது.

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான, யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ, இந்தோனேசியாவின் ஜகார்த்தா பேராயர் கர்தினால்  இக்னேஷியஸ் சுகார்யோ, முன்னாள்  கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ் ஆகியோர் உட்பட, கிறிஸ்தவ, முஸ்லிம், யூத, புத்த மதங்களின் 76 தலைவர்கள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் முஸ்லிம் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இடம்பெறும் அட்டூழியங்கள் நிறுத்தப்படுமாறு அழைப்பு விடுத்துள்ள அத்தலைவர்கள், அந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சிறுபான்மை இன மக்களுடன் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும், செபங்களையும் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின்போது யூதர்கள் படுகொலை செய்யப்பட்டபின், உலகில் இத்தகைய படுகொலைகள் இனிமேல் ஒருபோதும் வேண்டாம் என்று உலகினர் கூறியதையும் நினைவுபடுத்தியுள்ள மதத்தலைவர்கள், இக்காலக்கட்டத்திலும் அதே கூற்றை திரும்பச் சொல்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

சீனாவில் கலாச்சார புரட்சி இடம்பெற்றதற்குப்பின், அந்நாட்டில் மிக மோசமான சமய சுதந்திர அடக்குமுறையை எதிர்கொள்ளும் திபெத்திய புத்த மதத்தினர், Falun Gong கோட்பாட்டைப் பின்பற்றுவோர், கிறிஸ்தவர்கள், Uyghur இன முஸ்லிம்கள் ஆகிய அனைவருக்கும் ஆதரவாக இருக்கிறோம் என்றும், 76 மதத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.     

சீனாவின் வடமேற்கு மாநிலமான Xinjiangல், ஒன்பது இலட்சம் முதல், 18 இலட்சம் வரையிலான, Uyghur மற்றும், ஏனைய சிறுபான்மை மதத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அரசு உருவாக்கியுள்ள 1,300க்கும் அதிகமான தடுப்பு முகாம்களில் மக்கள், சித்ரவதைகள், அடிஉதைகள் மற்றும், கட்டாய வேலைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன. (CNA)

11 August 2020, 10:13