தேடுதல்

கர்தினால் சார்லஸ் மாங் போ கர்தினால் சார்லஸ் மாங் போ  

சனநாயகத்தைக் காக்கும் மாபெரும் ஆயுதங்கள், ஒப்புரவு, நீதி

மியான்மாரில், அமைதிக்காக ஏங்கும் மக்களுடன், மதத் தலைவர்களாகிய நாங்களும் இணைகின்றோம், அமைதியே நம் இறுதி இலக்கு, அமைதியை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் நாங்களும் இணைகின்றோம் - கர்தினால் போ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சனநாயகத்தில் நல்தாக்கத்தை உருவாக்கவல்ல மாபெரும் ஆயுதங்கள், ஒப்புரவு மற்றும், நீதி என்று, FABC எனப்படும் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கூறியுள்ளார்.

மியான்மாரில், ஆகஸ்ட் 19, வருகிற புதனன்று தொடங்கவிருக்கும் 21ம் நூற்றாண்டின் Panglong தேசிய அமைதி கருத்தரங்கை முன்னிட்டு, அந்நாட்டின் மதத் தலைவர்களின் பெயரால் செய்தி வெளியிட்டுள்ள, யாங்கூன் பேராயர் கர்தினால் போ அவர்கள், இந்த தேசிய கருத்தரங்கு வெற்றிபெற, மதத் தலைவர்களின் செபங்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

அமைதிக்காக ஏக்கம்

மியான்மார் நாட்டில், அமைதிக்காக ஏங்கும் மக்களுடன், மதத் தலைவர்களாகிய நாங்களும் இணைகின்றோம், அமைதியே நம் இறுதி இலக்கு, அமைதியை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் நாங்களும் இணைகின்றோம் என்றும், கர்தினால் போ அவர்களின் செய்தி கூறுகிறது. 

புதியதொரு, ஒன்றிணைந்த மியான்மார் நாட்டை உருவாக்குவதற்கு கனவுகண்ட முன்னாள் இராணுவ அதிபர் Aung San அவர்களும், ஏனைய சுதந்திரத் தாகம் கொண்டவர்களும், 73 ஆண்டுகளுக்குமுன் எதிர்கொண்ட தியாக வாழ்வை மிகத்தாழ்மையுடன் நினைவுகூர்கின்றோம் என்றும், கர்தினால் போ அவர்கள், கூறியுள்ளார்.   

இவர்கள் கொடூரமாய்க் கொல்லப்பட்டதே, நாட்டில் பிரிவினைகளும், மோதல்களும், மக்கள் வாழ்வில் இருண்ட நாள்களும் உருவாகக் காரணமாயின என்றும், இந்நிலை அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு முரணானது என்றும் கூறியுள்ள, மியான்மார் கர்தினால், இவர்களின் நம்பிக்கைக்கு வஞ்சகம் இழைத்த வரலாற்றை நம்மால் மாற்றியமைக்க முடியும் என்று கூறியுள்ளார்.

கலந்துரையாடலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ள கர்தினால் போ அவர்கள், இந்த கோவிட்-19 நெருக்கடி காலத்திலும், ஆயுதமோதல்கள் தொடர்ந்து இடம்பெறுவது கவலையளிக்கின்றது என்றும், ஒன்றித்து செயலாற்றுவதன் வழியாகவே, இந்த கொள்ளைநோயை முறியடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்..

மியான்மார் நாட்டில் 2015ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில், Aung San Suu Kyi அவர்களின் தேசிய சனநாயக கட்சி வெற்றிபெற்றதையடுத்து, அந்நாட்டில் பல ஆண்டுகள் இடம்பெற்ற இராணுவ ஆட்சி மாறி, சனநாயக ஆட்சி மலர்ந்தது.

மியான்மாரின் Rohingya முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர், உலகில் அதிகமாகத் துன்புறும் இனத்தவருள் ஒன்றாக, ஐக்கிய நாடுகள் நிறுவனம் கணித்துள்ளது. அந்நாட்டின் புத்தமத தீவிரவாதிகளுக்கும், Rohingya இனத்தவருக்கும் இடையே தொடங்கிய வன்முறை மோதல்களால், 2012ம் ஆண்டிலிருந்து இதுவரை 200க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் மற்றும், ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர். (Zenit)

இதற்கிடையே, கோவிட்-19 கொள்ளைநோயால் இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் Panglong தேசிய அமைதி கருத்தரங்கு, ஆகஸ்ட் 19,20,21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று, மியான்மார் அரசுத்தலைவரின் கருத்துப் பதிவாளர் U Zaw Htay அவர்கள் அறிவித்துள்ளார்.

மியான்மாரின் வரலாற்று சிறப்புமிக்க Panglong தேசிய அமைதி கருத்தரங்கு, முதன் முதலில் 1947ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2020, 13:04