ஹெய்ட்டி நாட்டில் voodoo ஹெய்ட்டி நாட்டில் voodoo  

பில்லிசூனிய வன்முறைக்கு எதிரான முதல் உலக நாள்

பில்லிசூனியத்தை ஒரு சாக்காகச் சொல்லி, வன்முறையில் ஈடுபடுகின்றவர்கள், மனித சமுதாயத்திற்கு எதிராக குற்றம் புரிகின்றவர்கள் - பாப்புவா நியு கினி ஆயர் Donald Lippert

மேரி தேரேசா: வத்திக்கான் செய்திகள்

பில்லிசூனியம் என்ற பெயரில், பெண்களை சித்ரவதைப்படுத்துகின்றவர்கள் மற்றும், கொலை செய்கின்றவர்கள், தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகள் என்று, பாப்புவா நியு கினியைச் சேர்ந்த கத்தோலிக்க ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 10, வருகிற திங்களன்று, பில்லிசூனிய வன்முறைக்கு எதிரான, முதல் உலக நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, அறிக்கை வெளியிட்டுள்ள, பாப்புவா நியு கினி நாட்டின் Mendi மறைமாவட்ட ஆயர் Donald Lippert அவர்கள், பில்லிசூனியத்தை ஒரு சாக்காகச் சொல்லி, வன்முறையில் ஈடுபடுகின்றவர்கள், மனித சமுதாயத்திற்கு எதிராக குற்றம் புரிகின்றவர்கள் என்று கூறினார்.

பில்லிசூனியத்தைப் பயன்படுத்தி வன்முறை தாக்குதல்களை நடத்துபவர்கள், மரணதண்டனைக்குரிய குற்றவாளிகள் என தீர்ப்பிடப்படுவார்கள் என்று, பாப்புவா நியு கினி நாடாளுமன்றம், ஏழு ஆண்டுகளுக்குமுன் அறிவித்திருக்கின்றபோதிலும், அந்நாட்டில் இத்தகைய தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன என்று, ஆயர் Lippert அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தார்.

பாப்புவா நியு கினி நாட்டில், இத்தகைய வன்முறைகள், வீடுகளிலும், வெளியிலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று கூறியுள்ள ஆயர் Lippert அவர்கள், இந்த வன்முறைகள், சமுதாயங்களிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட உழைக்குமாறு, திருஅவை மற்றும், நன்மனம்கொண்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையே, Mendi மறைமாவட்டத்தில் மறைப்பணியாற்றும் அருள்சகோதரி Lorena Jenal அவர்கள், பில்லிசூனியம் தொடர்பான வன்முறைகள் குறித்து பீதேஸ் செய்தியிடம் பேசுகையில், இவ்வாண்டு, உயிர்ப்பு ஞாயிறன்று, வயதுமுதிர்ந்த ஒருவரது இறப்பைக் காரணம் காட்டி, மூன்று பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டனர் என்று கூறினார்.

அந்த முதியவர், பல ஆண்டுகளாக, ஆஸ்துமா மற்றும், சிறுநீரகக்கோளாறால் துன்புற்றவர் என்பதையும், அச்சகோதரி சுட்டிக்காட்டினார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2020, 14:10