மன நலம் மன நலம் 

கோவிட்-19 – மன நலத்திற்கு அக்கறை காட்ட அழைப்பு

ஆஸ்திரேலிய ஆயர்கள் - அனைத்து மதத்தவரும், அரசுகளும், தனிநபர்களும், மன நலத்திற்கு, குறிப்பாக, மனச்சோர்வும், கவலையும் நிறைந்துள்ள கோவிட்-19 காலத்தில், அதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு வலியுறுத்தல்

மேரி தேரேசா: வத்திக்கான் செய்திகள்

இப்போதைய கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், மன நலத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுமாறு, ஆஸ்திரேலிய கத்தோலிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 30ம் தேதி, சமுதாய நீதி ஞாயிறு கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய ஆயர்கள், அனைத்து மதத்தவரும், அரசுகளும், தனிநபர்களும், மன நலத்திற்கு, குறிப்பாக, மனச்சோர்வும், கவலையும் நிறைந்துள்ள கோவிட்-19 காலத்தில், அதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

“வாழ்வை முழுமையாக வாழ்தல்: இன்றைய ஆஸ்திரேலிய மன நலம்” என்ற தலைப்பில், அறிக்கை வெளியிட்டுள்ள, ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் சமுதாய நீதி, மறைப்பணி மற்றும், சேவைப் பணிக்குழுவின் தலைவர், சிட்னி துணை ஆயர் Terence Brady அவர்கள், கோவிட் -19 சூழலில், இந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அனைவரிடமும் விண்ணப்பித்துள்ளார்.

பங்குத்தளங்கள், பள்ளிகள், சமுதாயங்கள் போன்ற அனைத்தின் உறுப்பினர்களையுமே கோவிட்-19 கொள்ளைநோய் பாதித்துள்ளவேளை, இந்த காலக்கட்டத்தில், மக்கள் மன நலக்குறைவால் பாதிக்கப்படாமல் இருப்பதில், அரசுகள் அக்கறை காட்டுமாறு, ஆயர் Brady அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

சமுதாயத்தில் வாய்ப்பிழந்த மற்றும், நலிவடைந்த மக்கள் மீது கவனம் செலுத்தப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  கூறியிருப்பதையும், தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆயர் Brady அவர்கள், இயேசுவைப் பின்பற்றி, மன நலம் குன்றிய நோயாளிகள் மீது பரிவுகாட்டுமாறு, கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2020, 13:55