தலித் மக்களின் உரிமை போராட்டம் தலித் மக்களின் உரிமை போராட்டம் 

பாகுபாட்டுடன், முற்சார்பு எண்ணங்களுடன் நடத்தப்படும் தலித் மக்கள்

தலித் மக்களின் மேம்பாட்டுக்காகவும், அவர்கள் குழந்தைகளின் கல்விக்காகவும் திருஅவை தொடர்ந்து உழைத்துவரும் நிலையில், அரசிடமிருந்து எவ்வித உதவியும் ஊக்கமும் கிட்டுவதில்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிறரால், பாகுபாட்டுடனும், முற்சார்பு எண்ணங்களுடனும் நடத்தப்பட்டு, துயர்களை அனுபவிக்கும் தலித் மக்களின் நிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஆகஸ்ட் 10ம் தேதி, இத்திங்களன்று, கறுப்பு தினத்தைச் சிறப்பித்தது, இந்திய தலத் திருஅவை.

ஏழ்மை நிலையில் வாடும் தலித் மக்கள், இந்த கொள்ளை நோய் காலத்தில், பெருந்துயர்களை அனுபவித்து வருகின்றனர் என்ற கவலையை வெளியிடும் தலத் திருஅவை அதிகாரிகள், ஏழைக் குழந்தைகளின் கல்வியும் மிகப் பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்து மதத்தைச் சேர்ந்த தலித் மக்களுக்கு மட்டுமே சலுகைகளையும், உரிமைகளையும் வழங்கும், இந்திய அரசியலமைப்பின் மூன்றாவது பிரிவு அங்கீகரிக்கப்பட்ட 1950ம் ஆண்டின் ஆகஸ்ட் 10ம் தேதியை  நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும், அதே நாளில் கறுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தலித் மக்களுடன் இந்தியக் கிறிஸ்தவ திருஅவையும் சிறப்பிக்கும் இந்த கறுப்பு தினம் குறித்து, வத்திக்கான் வானொலிக்கு பேட்டி வழங்கிய வசாயி (Vasai) பேராயர் ஃபீலிக்ஸ் மச்சாடோ அவர்கள், பாகுபாடுகளால் மட்டுமல்ல, சிலவேளைகளில், வன்முறைகளாலும் தலித் மக்கள் பாதிக்கப்படுகின்றனர், என்றார்.

தலித் மக்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள், நேரடியாக அல்லாமல், மறைமுகமாக இடம்பெறுகின்றன, என்பதைச் சுட்டிக்காட்டியப் பேராயர் மச்சாடோ அவர்கள், தலித் மக்கள் மத்தியில், அவர்களின் மேம்பாட்டுக்காகவும், அவர்கள் குழந்தைகளின் கல்விக்காகவும் திருஅவை தொடர்ந்து உழைத்துவரும் நிலையில், அரசிடமிருந்து எவ்வித உதவியும் ஊக்கமும் கிட்டுவதில்லை என எடுத்துரைத்தார்.

கோவிட் கொள்ளைநோய் காலத்தில், தலித் மக்கள், தாங்கள் வேலை செய்த இடங்களிலிருந்து, சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதில் அனுபவித்த துன்பங்களையும், தங்கள் வேலைகளை இழந்துள்ளதையும் குறிப்பிட்ட பேராயர் மச்சாடோ அவர்கள், தலித் மக்கள் பல்வேறு வகைகளில் சுரண்டப்படுவதும், உரிமைகள் மறுக்கப்படுவதும் தொடர்கிறது, என்று கூறினார்.

தலித் மக்கள், பாகுபாட்டுடன் நடத்தப்படுவதையும், அவர்களின் பல்வேறு துயர்களையும்,  களைந்தெடுக்கும் நோக்கத்தில் தலத்திருஅவை, மனித உரிமை அமைப்புக்களுடனும், பல்வேறு மத குழுக்களுடனும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் வசாயி  பேராயர் மச்சாடோ அவர்கள் மேலும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2020, 14:06