இறைவா உமக்கே புகழ்-Laudato Si' இறைவா உமக்கே புகழ்-Laudato Si'  

Laudato Si' திட்டத்திற்கு 5 இலட்சம் டாலர் உதவி

2015ம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Laudato Si' திருமடலை வெளியிட்ட ஐந்தாம் ஆண்டின் நிறைவாக, உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையில், 2020ம் ஆண்டு மே 24ம் தேதி முதல், 2021ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி வரை Laudato Si' சிறப்பு ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், இறைவா உமக்கே புகழ் என்று பொருள்படும் Laudato Si' திருமடலை நடைமுறைப்படுத்தும், வறுமை ஒழிப்பு அமைப்பு ஒன்றிற்கு, ஐந்து இலட்சம் டாலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளனர், அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

கத்தோலிக்கத் திருஅவையில் Laudato Si' ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டுவரும் இவ்வேளையில், காலநிலை மாற்றத்தால் வறுமைநிலைக்கு உள்ளாகியுள்ள அந்நாட்டின் தென்கிழக்குப் பகுதிக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உதவும் வகையில், இந்த நிதியை வழங்குவதாக, ஜூலை 22, இப்புதனன்று அறிவித்துள்ளனர், அமெரிக்க ஆயர்கள்.

கத்தோலிக்கத் திருஅவையின் தேசிய மனித முன்னேற்ற நடவடிக்கைகளுக்கென வழங்கப்பட்டுள்ள இந்த நிதியுதவி, காற்று மற்றும் தண்ணீர் மாசுக்கேடு, சத்துள்ள உணவுப் பற்றாக்குறை, வேதியத் தொழிற்சாலைகளின் கழிவுகள் போன்றவற்றால் துன்புறுவோருக்கென செலவழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மியாமி நகரை மையமாகக் கொண்டு இயங்கும், நேரடிச் செயல்பாடு, ஆய்வு மற்றும், பயிற்சி மையத்திற்கு (DART), "படைப்பைப் பாதுகாத்தல், சமுதாயத்தைப் பராமரித்தல்" என்ற தலைப்பில், இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த மையம், அந்நாட்டின் ஒன்பது மாநிலங்களில் நீதி சார்ந்த விவகாரங்களுக்குப் பணியாற்றி வருகின்றது. இந்த அமைப்பில் 23 சமுதாய குழுக்கள் உள்ளன.

இந்த DART அமைப்பின் இயக்குனர் John Aeschbury அவர்கள் கூறுகையில், காலநிலை மாற்றத்தால் உருவாகும் பாதிப்பை மேற்கொள்வதற்கு நகரங்கள் அதிகப்பணத்தைச் செலவழிக்கின்றன, ஆனால் சமுதாயத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்களும், சிறுபான்மை சமுதாயத்தினரும் இந்த மாற்றத்தால் அதிகம் துன்புறுகின்றனர் என்று கூறினார்.

நம் பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியைப் பாதுகாக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, 2015ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Laudato Si' திருமடலை வெளியிட்ட ஐந்தாம் ஆண்டின் நிறைவாக, உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையில், 2020ம் ஆண்டு மே 24ம் தேதி முதல், 2021ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி வரை Laudato Si' சிறப்பு ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2020, 12:47