தேடுதல்

இயேசு தன் சீடர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: "ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்." (மத்தேயு 13:44) இயேசு தன் சீடர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: "ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்." (மத்தேயு 13:44) 

பொதுக்காலம் 17ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

இறைவன், நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ள புதையலையும், முத்தையும் போற்றி வளர்க்க, எத்தகையத் தியாகத்தையும் செய்யும் துணிவை இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 17ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

சென்ற இரு ஞாயிறு வழிபாட்டுச் சிந்தனைகளை வயல்வெளியில் துவக்கிய நாம், இந்த ஞாயிறு, ஒரு கனவுக்காட்சியுடன் துவக்குவோம். இந்தக் கனவுக்காட்சியை, இன்றைய முதல் வாசகம் இவ்வாறு அறிமுகப்படுத்துகிறது:

1 அரசர்கள் 3: 5, 7,9

அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!" என்று கடவுள் கேட்டார். அதற்குச் சாலமோன், "என் கடவுளாகிய ஆண்டவரே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான, ஞானம் நிறைந்த உள்ளத்தை, அடியேனுக்குத் தந்தருளும்" என்று கேட்டார்.

இந்தக் கனவுக் காட்சியுடன், சிறிது கற்பனையைக் கலந்து, இன்றைய உலகச் சூழலைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

இன்றைய ஞாயிறு வழிபாடு நடைபெறும் ஆலயம் ஒன்றில், பல்வேறு நாடுகளின் அரசுத்தலைவர்களும், பிரதமர்களும் கலந்துகொள்வதாகக் கற்பனை செய்துகொள்வோம். அந்த வழிபாட்டில், இன்றைய முதல் வாசகம் வாசிக்கப்படும்போது, அங்கு அமர்ந்திருக்கும் தலைவர்களின் உள்ளங்களில், எவ்வகை எண்ணங்கள் ஓடியிருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!" என்று கேட்கும் இறைவனிடம், தன் பதவிகால நீட்டிப்பு, அளவற்ற செல்வம், எதிர்கட்சிகளின் தோல்வி என்ற ‘முக்கியமான’ வரங்களைக் கேட்பதற்குப் பதில், ‘எதற்கும் உதவாத, தேவையற்ற’ வரமான ஞானத்தை வேண்டிக்கேட்ட மன்னன் சாலமோனை, ஆலயத்தில் அமர்ந்திருக்கும் தலைவர்கள், ‘பிழைக்கத்தெரியாத மனிதர்’ என்று எண்ணி, தங்களுக்குள் ஏளனமாகச் சிரித்திருப்பர்.

இவ்வுலகத் தலைவர்களின் ஏளனத்திற்கு உள்ளான சாலமோனை, இறைவன் மகிழ்ந்து பாராட்டுவதை, இன்றைய வாசகம், தெளிவாகக் கூறியுள்ளது:

1 அரசர்கள் 3: 10-12

சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், "நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது, நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை" என்றார்.

இன்றைய முதல் வாசகம் இச்சொற்களுடன் முடிவடைகிறது. ஆயினும், அக்கனவுக் காட்சியில், கடவுளின் வாக்குறுதி அத்துடன் முடிவடையவில்லை. அடுத்த இறைவாக்கியத்தில், கடவுள் சாலமோனுக்கு வழங்கும் கூடுதல் கொடைகள், நம் கவனத்தை ஈர்க்கின்றன.

கடவுள் சாலமோனிடம், "இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்" என்றார். (1 அரசர்கள் 3: 13)

ஞானத்தை வரமாகக் கேட்ட சாலமோனுக்கு, ஞானத்துடன் சேர்த்து, செல்வத்தையும் புகழையும் இறைவன் வழங்கியதைக் காணும்போது, பாரம்பரியமாகக் கூறப்படும் சிறுகதையொன்று நினைவுக்கு வருகிறது.

ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த ஓர் எளிய வீட்டின் முன், வயது முதிர்ந்த மூவர், நின்றுகொண்டிருந்தனர். அவர்களைக் கண்டு, வெளியே வந்த வீட்டுத்தலைவி, அம்மூவரையும் நோக்கி, "தயவுசெய்து வீட்டுக்குள் வாருங்கள்" என்று அழைத்தார்.

அம்மூவரில் நடுவில் இருந்தவர், "நாங்கள் மூவரும் வீட்டுக்குள் ஒன்றாக வரமுடியாது. இதோ, என் இடதுபுறம் நிற்பவர் செல்வம். வலதுபுறம் நிற்பவர் வெற்றி. நான் அன்பு. எங்களில் யார் வீட்டுக்குள் வருவது என்பதை, நீயும், உன் குடும்பத்தினரும் கலந்து பேசி முடிவெடுத்து சொல்லவும்" என்று அந்த முதியவர் கூறினார்.

வீட்டுத்தலைவி, உள்ளே சென்று, கணவரிடம், வெளியில் நடந்ததைச் சொன்னார். கணவர் மிகவும் மகிழ்ந்து, "சரி, செல்வத்தை வீட்டுக்குள் அழைத்துவருவோம். அவர் வந்து நம் வீடு முழுவதையும் செல்வத்தால் நிறைக்கட்டும்" என்று சொன்னார். மனைவியோ, "வேண்டாம். வெற்றியை வீட்டுக்குள் கொணர்ந்தால், நாம் நினைத்த காரியம் எல்லாம் வெற்றியாக அமையும்" என்று சொன்னார். அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட அவர்களது மகள், "நாம் அன்பை அழைத்துவந்தால், இந்த வீட்டில் மகிழ்வாக வாழமுடியும்" என்று சொன்னார்.

மகள் சொன்னதுதான் சரி என்று பெற்றோர் சம்மதிக்கவே, வீட்டுத்தலைவி வெளியேச் சென்று, அன்பை வீட்டுக்குள் அழைத்தார். உடனே, செல்வமும், வெற்றியும் அவரைப் பின்தொடர்ந்து வந்தனர். வீட்டுத்தலைவி அவர்களிடம், "உங்களில் ஒருவர்தான் உள்ளே வரமுடியும் என்று சொன்னீர்களே, இப்போது, ஏன் இருவரும் கூடவே வருகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு, முதியவரான அன்பு கூறினார்: "நீங்கள், செல்வத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால், மீதி இருவரும் வெளியிலேயே நின்றிருப்போம். நீங்கள் அன்பை அழைத்ததால், அங்கு, செல்வமும், வெற்றியும் கூடவே வருவதுதான் வழக்கம்" என்று கூறினார்.

ஞானம் வேண்டும் என்று கேட்ட சாலமோனுக்கு செல்வத்தையும், புகழையும் சேர்த்து இறைவன் வழங்கியதுபோல், அன்பை, நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும், வரவேற்றால், செல்வமும், புகழும், வெற்றியும் இன்னும் பலவும் தானாகவே வந்துசேரும் என்ற உண்மையைப் புரிந்துகொள்ளும் ஞானத்தைப் பெறுவதற்காக செபிப்போம்.

பகுத்தறிவு என்பது, மனிதர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள தலைசிறந்த ஒரு கொடை. நன்மை, தீமை ஆகிய இரண்டையும், பகுத்து, பிரித்து அறிவது மட்டும் பகுத்தறிவு அல்ல, அதற்கும் மேலாக, நல்லவற்றிலும், மிக உயர்ந்தவற்றை தேர்ந்து தெளிவதே, உண்மையான பகுத்தறிவு, உண்மையான ஞானம். அத்தகையப் பகுத்தறியும் திறனை தனக்கு வழங்கும்படி, சாலமோன், இறைவனிடம் வேண்டினார்.

வாழ்வில் வந்துசேரும் நல்லவற்றில், மிகச் சிறந்தவை எவை என்பதைப் பகுத்தறிந்தால் மட்டும் போதாது, அவற்றைப் பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். அவற்றைப் பெறுவதற்கு, நம்மிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை, இன்றைய நற்செய்தி வலியுறுத்திக் கூறுகிறது.

புதையல், முத்து, மீன்கள் நிறைந்த வலை, என்ற மூன்று உவமைகள் வழியே, இறையரசைத் தேடிக்கண்டுபிடித்தல், அதைப் பெறுவதற்கு, நம்மிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்தல் என்ற கருத்துக்களை, இயேசு, இன்று சொல்லித்தருகிறார். இம்மூன்று உவமைகளில், நமது சிந்தனைகளை, புதையல், முத்து என்ற இரு உவமைகள் பக்கம் திருப்புவோம்.

'புதையல்' என்ற சொல், பொதுவாக, பூமியில் 'புதையுண்டு' கிடக்கும் அரியக் கருவூலங்களைக் குறிக்கும். இந்த அரியக் கருவூலங்களில் ஒன்றாக, அடிக்கடிப் பேசப்படுவது, வைரம். வைரங்கள் எவ்விதம் உருவாகின்றன என்பதை ஆய்வுசெய்தால், அது, இறையரசின்  பண்புகளைப் புரிந்துகொள்ள உதவும்.

பூமிக்கடியில் புதையுண்டு போகும் நிலக்கரி, அங்கு நிலவும் மிக உயர்ந்த அழுத்தம், மிக அதிக வெப்பநிலை ஆகியவற்றின் உதவியால், வைரமாக மாறுகின்றது. எவ்வளவுக்கெவ்வளவு அழுத்தமும், வெப்பமும் கூடுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு, அங்கு உருவாகும் வைரமும், உயர்ந்த தரமுள்ளதாக மாறுகின்றது. அதேபோல்,  வாழ்வில், அழுத்தமும், வெப்பமும் கூடும் வேளைகளில், இறையரசின் மதிப்பீடுகளை வெளிப்டுத்தும் வைரங்களாக நாமும் மாறமுடியும் என்பதே, வைரமாக மாறும் நிலக்கரி, நமக்குச் சொல்லித்தரும் பாடம்.

அடுத்து, நம் எண்ணங்கள், முத்தை நோக்கித் திரும்புகின்றன. ஆழ்கடலில் வாழும் சிப்பிக்குள் உருவாகும் அரியக் கருவூலம், முத்து. முத்து உருவாகும் விதம், இறையரசின் மற்றொரு பண்பை நமக்குச் சொல்லித்தருகிறது. வெளியிலிருந்து, சிப்பிக்குள் நுழையும் அன்னியத் துகளோ, துளியோ சிப்பிக்குள் மாற்றங்களை உருவாக்குகின்றன. உத்தரவின்றி உள்ளே நுழைந்துவிடும் அன்னியப் பொருளைச்சுற்றி, சிப்பி உருவாக்கிக்கொள்ளும் காப்புக் கவசமே, முத்தாக மாறுகிறது. அதேபோல், நமது உள்ளங்களில், உத்தரவின்றி நுழையும் அன்னிய எண்ணங்களை, அழகிய முத்தாக மாற்றும் வலிமை பெற்றவர்கள் நாம் என்பதை, முத்து, நமக்குச் சொல்லித்தருகிறது.

புதையலும், முத்தும், மதிப்பு மிக்கவை என்று சிந்திக்கும்போது, கூடவே ஓர் எச்சரிக்கை மணியும் ஒலிக்கிறது. நம்மில் பலர் 'மதிப்பு' என்ற சொல்லுக்கு, 'விலைமதிப்பு' என்ற பொருளைத் தந்திருப்போம். ஒரு பொருள், ஒரு செயல், ஒரு கருத்து இவற்றின் மதிப்பை இவ்வுலகம் 'விலை' என்ற அளவுகோலை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.

இன்றைய உலகில் எல்லாவற்றிற்கும் விலை குறிக்கப்படுகிறது என்பது மிகவும் வேதனையான போக்கு. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டை, புயல், வெள்ளம், சூறாவளி என்ற இயற்கைப் பேரிடர்கள் தாக்கும்போது, அவற்றால் ஏற்படும் உயிர்ச் சேதங்களைப் பற்றிப் பேசும் அதே மூச்சில், அந்த இயற்கைப் பேரிடரால் உருவான அழிவுகளுக்கு, ‘இவ்வளவு மில்லியன் டாலர்கள்’ என்ற விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. நாட்டில் நிகழும் விபத்து, தீவிரவாதிகளின் தாக்குதல், கொள்ளை நோய், வறட்சி என்ற அனைத்துமே, பணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன.

கடந்த ஆறு மாதங்களாக, நம் உலகை உருக்குலைய வைத்திருக்கும் கோவிட்-19 கொள்ளைநோய், மனித சமுதாயத்தில் பல்லாயிரம் உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. அத்துடன், பலகோடி மக்களின் வாழ்வாதாரங்களை வேரோடு சாய்த்துள்ளது. இக்கொடுமைகளால் துன்புறும் மனிதர்களைப்பற்றி அதிகம் பேசாமல், உலகத்தலைவர்கள், இந்தக் கொள்ளைநோயின் தாக்கத்தை, உலகின் பொருளாதாரம், பங்குச்சந்தை வீழ்ச்சி என்ற கோணங்களிலேயே அதிகம் சிந்திக்கும் அவலம், நம்மை வேதனையில் ஆழ்த்துகிறது.

இவ்விதம், உலக நிகழ்வுகள் அனைத்திற்கும், வர்த்தக உலகின் அளவுகோல்களைக் கொண்டு, விலை நிர்ணயிக்கப்படும்போது, இலாபம், நட்டம் என்ற கணக்கு எழுகின்றது. உபயோகமானவை, உபயோகமற்றவை என்று தரம் பிரிக்கப்படுகின்றன. இந்தக் கண்ணோட்டத்தின் மிகக் கொடூரமான வெளிப்பாடு, மனிதர்களில், பயனுள்ளவர்கள், பயனற்றவர்கள் என்ற பாகுபாடு. இந்த பாகுபாட்டினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், வயதில் முதிர்ந்தோர்.

ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 26ம் தேதி, மரியாவின் பெற்றோரும், இயேசுவின் தாத்தா, பாட்டியுமான, புனிதர்கள் அன்னா, சுவக்கீன் ஆகியோரின் திருநாளைச் சிறப்பிக்கிறோம். இவ்வாண்டு, ஜூலை 26ம் தேதி, ஞாயிறு என்பதால், இத்திருநாளை நாம் கொண்டாடவில்லை. ஆயினும், நம் குடும்பங்களில் வாழும் தாத்தாக்களையும், பாட்டிகளையும் நாம் இன்று சிறப்பாக நினைவுகூர்ந்து நன்றிகூற, இத்திருநாள் நமக்கு அழைப்புவிடுக்கிறது. பயன்படுத்திவிட்டு, தூக்கியெறியும் (Use and throw) கலாச்சாரத்தில் ஊறிப்போய்விட்ட நாம், வயதில் முதிர்ந்தோரை, அவர்கள் வாழ்நாளெல்லாம் பயன்படுத்திவிட்டு, பின்னர், முதியோர் இல்லங்களில் தூக்கியெறியும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டுள்ளோம்.

புதையலையும், முத்தையும் குறித்த நற்செய்தியை, புனிதர்களான அன்னா, சுவக்கீன் திருநாளன்று கேட்பதற்கு வழிவகுத்த இறைவனுக்கு நன்றி சொல்வோம். வயதில் முதிர்ந்த நம் உறவுகள் என்ற புதையலை, முத்தை, போற்றி பாதுகாக்க இறைவன் நமக்கு நல்மனம் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

புதையல், முத்து, இவற்றின் மதிப்பை உணர்ந்த இருவர், தங்களிடம் இருந்த அனைத்தையும் கொடுத்து அவற்றைப் பெற்றனர் என்று இன்றைய நற்செய்தியில் கேட்கும்போது, உன்னதமானவற்றை நாம் பெறுவதற்கு, அனைத்தையும் தியாகம் செய்யும் துணிவுவேண்டும் என்பதை உணர்கிறோம். தாத்தா, பாட்டி உறவுகளில் துவங்கி, இறைவன், நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ள புதையலையும், முத்தையும் போற்றி வளர்க்க, எத்தகையத் தியாகத்தையும் செய்யும் துணிவை இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

இறுதியாக, இரு எண்ணங்கள்... ஜூலை 28, இச்செவ்வாயன்று, உலக வரலாற்றில் ஒரு முக்கிய நாள் என்பதால், நமது சிந்தனைகளை இந்நாளை நோக்கித் திருப்புவோம். 1914ம் ஆண்டு, ஜூலை 28ம் தேதி, முதல் உலகப் போர் துவங்கியது. 90 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்த அந்தப் போரின் எதிரொலிகள் இன்னும் இவ்வுலகில் ஓயவில்லை. கோவிட் 19 கொள்ளைநோயால் உயிர்பலிகள் நிகழும் இந்தக் கடினமானச் சூழலிலும், சிரியா, ஏமன், இஸ்ரேல், பாலஸ்தீனா, இந்தியா, சீனா, போன்று, உலகின் ஒரு சில பகுதிகளில், அரசுகளும், அடிப்படைவாதக் குழுக்களும், கொலைவெறி கொண்டு திரிகின்றன.

இவ்வுலகில் அமைதி ஆட்சி செய்யவேண்டுமெனில், ஆட்சியில் இருப்போர், அமைதி பெறவேண்டும்; அமைதியின் சக்தியை உணரும் அறிவுத்திறனையும் பெறவேண்டும். இன்றைய முதல் வாசகத்தில், மன்னன் சாலமோன், நீடிய ஆயுள், செல்வம், எதிரிகளின் சாவு என்ற வரங்களை இறைவனிடம் கேட்காமல், "உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்" (1 அரசர்கள் 3: 9) என்று வேண்டியதைப்போல், உலகத் தலைவர்கள், குறிப்பாக, மோதல்களில் ஈடுபட்டிருக்கும் நாடுகளின் தலைவர்கள், உண்மையான ஞானம் பெறவேண்டும் என்று மனமுருகி இறைவனிடம் மன்றாடுவோம்.

அதேவண்ணம், ஜூலை 30, வருகிற வியாழனன்று, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் கடைபிடிக்கப்படுகின்றது. உலகிலுள்ள அனைத்திற்கும் விலையை நிர்ணயிக்கும் இவ்வுலகப் போக்கின் மிகக் கொடுமையான ஒரு வெளிப்பாடு, மனித வர்த்தகம்.

உலகெங்கும் இன்று 4 கோடிக்கும் அதிகமானோர், வியாபாரப் பொருள்களைப்போல் விற்கப்படுகின்றனர். இவர்களில் 76 விழுக்காட்டினர், பெண்கள், மற்றும் சிறுவர், சிறுமியர். இக்கொடுமையை செய்துவரும் குற்றவாளிகள், எவ்விதத் தண்டனையும் பெறாமல் போவது, அவர்கள், இந்த வர்த்தகத்தை, உலகெங்கும் மேற்கொள்வதற்கு வழிவகுக்கிறது.

மனிதர்கள் ஒவ்வொருவரும் மதிப்புள்ளவர்கள், விலை மதிப்பு ஒட்டப்பட்ட பொருள்கள் அல்ல என்பதை, மனித சமுதாயம் உணரவேண்டும். குறிப்பாக, இந்தக் கொள்ளைநோய் காலத்தையும், இலாபம் ஈட்டும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தும், மனசாட்சியற்ற, மனித வர்த்தகக் குற்றவாளிகளை, இறைவன் நல்வழி கொணரவேண்டும் என்று உருக்கமாகச் செபிப்போம்.

ஜூலை 26 - புனிதர்கள் அன்னா, சுவக்கீன் திருநாளன்று, முதியோருக்காகவும்,

ஜூலை 28 - முதல் உலகப்போரின் நினைவுநாளன்று, அமைதிக்காகவும்,

ஜூலை 30 - மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாளன்று, விலைபேசப்படும் வறியோருக்காகவும்... என, இம்மூன்று நாள்களில் நாம் செபிக்கவேண்டிய விடயங்கள் பல உள்ளன!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2020, 13:12