தேடுதல்

Vatican News
இயேசு கூறிய கோதுமைகளுக்கிடையே களைகள் என்ற உவமை - மத்தேயு 13:24-25 இயேசு கூறிய கோதுமைகளுக்கிடையே களைகள் என்ற உவமை - மத்தேயு 13:24-25  

பொதுக்காலம் 16ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

பயிர்களும், களைகளும் வளரும் நிலம், பூமியில் ஊன்றப்பட்ட கடுகு விதை, புளிப்பு மாவு கலக்கப்பட்ட மாவு, என்ற மூன்று உவமைகளும் நமக்குச் சொல்லித்தரும் ஒரே பாடம், பொறுமை!

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 16ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

சென்ற ஞாயிறு போலவே, இந்த ஞாயிறன்றும், நற்செய்தி வாசகம், நம்மை, வயல்வெளிக்கு அழைத்துவந்துள்ளது. சென்ற வாரம், இயேசு கூறிய விதைப்பவர் உவமையில், விதைப்பவர், பாதை, பாறை, பதப்படுத்தப்பட்ட நிலம், என்ற பாகுபாடுகள் எதுவும் பாராமல், தாராளமனதுடன், விதைகளை அள்ளித்தெளித்தார் என்று சிந்தித்தோம்.

இந்த ஞாயிறன்று வழங்கப்பட்டுள்ள நற்செய்தியில், நிலத்தில் விதைக்கப்பட்ட கோதுமையையும், களைகளையும் குறித்து இயேசு மற்றுமோர் அழகான உவமையைக் கூறியுள்ளார். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார் (மத்தேயு 13: 3) என்று சென்ற வார உவமையை அறிமுகம் செய்த இயேசு, இந்த வாரம், விதைக்கச் சென்ற இருவரைப்பற்றி குறிப்பிடுகிறார்:

மத்தேயு 13: 24-25

இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: 'விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான் என்று, இயேசு தன் உவமையைத் துவக்குகிறார்.

இந்த அறிமுக வரிகளை வாசிக்கும்போது, நல்ல விதைகளை விதைத்தவரைக் காட்டிலும், இரவோடிரவாக, களைகளை விதைத்துச் சென்றவர், நம் கவனத்தை ஈர்க்கின்றார். எந்த ஒரு நிலத்திலும், பயிர்களுடன் ஒரு சில களைகள் தானாகவே வளர்வது இயற்கைதான். ஆனால், களைகள், பயிர்களைவிட அதிகம் பெருகவேண்டும் என்ற எண்ணத்துடன், களைகளை விதைப்பவரும் உள்ளனர் என்ற எண்ணம், நம்மைச் சங்கடப்படுத்துகிறது. இன்றைய உலகில், தானாகவே மலிந்துவரும் தீமைகள் போதாதென்று, ஒரு சிலர் திட்டமிட்டு தீமைகளை விதைத்து, அவை வளர்வதைக் கண்டு இரசிக்கும் அவலத்தை நாம் அறிவோம்.

எடுத்துக்காட்டாக, ஒரு சில கணணி நிறுவனங்களில் பணிபுரிந்தோர், குற்றங்களில் சிக்கி, அந்நிறுவனங்களை விட்டு வெளியேற்றப்பட்டபோது, அந்நிறுவனங்களின் கணணிகளில் 'வைரஸ்' (virus) எனப்படும் களைகளை நுழைத்துச்சென்றனர் என்பதை, கேள்விப்பட்டிருக்கிறோம்.

கணணிகளில் 'வைரஸ்'களைப் புகுத்தியது போதாதென்று, மனித உடல்களிலும் 'வைரஸ்'களைப் புகுத்தும் முயற்சிகள் நாம் வாழும் காலத்தில் நிகழ்கின்றன என்ற செய்தி, நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றது.

மனித சமுதாயத்தை, கடந்த ஏழு மாதங்களாக, கசக்கிப் பிழிந்துவரும் 'கொரோனா வைரஸ்', நாடுகளுக்குள் எழுந்த 'யார் பெரியவன்' என்ற போட்டியின் ஒரு வெளிப்பாடு என்றும், இக்கிருமி, உயிரியல் ஆய்வுக்கூடம் ஒன்றில் உருவாக்கப்பட்ட களை என்றும், அது, மனிதரின் கட்டுப்பாட்டை மீறி, ஆய்வுக்கூடத்தை விட்டு வெளியேறிவிட்டது என்றும், அவ்வப்போது செய்திகள் வலம்வருவதை நாம் அறிவோம்.

மனித சமுதாயத்தில் வேரூன்றிவிட்ட இந்த 'கொரோனா' களையை வேரோடு அழிக்க இயலாது என்றும், இந்தக் களையோடு வாழ்வதற்கு நம்மையேப் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அண்மைய வாரங்களில் நமக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதையொத்த அறிவுரையை இயேசு, இன்றைய உவமையின் வழியே நமக்கு வழங்குகிறார்.

களைகளை அகற்றுவதில், அவசரம் காட்டாமல், பொறுமையைக் கடைபிடிக்கவேண்டும் என்பதை, இயேசு, இவ்வுவமையில் தெளிவாக்குகிறார். களைகளைக் கண்டதும், அவற்றை அகற்றிவிட விரும்பிய பணியாளர்களிடம், “வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள்” (மத். 13:29-30) என்று நில உரிமையாளர் அறிவுரை வழங்குகிறார்.

களைகளை அகற்றிவிட பணியாளர்கள் காட்டிய அவசரத்தை, பல்வேறு நாடுகளில், பல வடிவங்களில் பார்க்கிறோம். உள்நாட்டவர், வெளிநாட்டவர், இம்மதம், அம்மதம், உயர் சாதி, தாழ்ந்த சாதி, வெள்ளையினம், கறுப்பினம் என்று எத்தனையோ அளவுகோல்களை வைத்து, தங்களைச் சாராதவர்களை, களைகளென முத்திரை குத்தி, அவர்களை அகற்றும் முயற்சியில், அரசுகளும், ஏனைய அடிப்படைவாதக் குழுக்களும் ஈடுபட்டுவருகின்றன.

அண்மைய நாள்களில், களைகளை அகற்றுகிறோம் என்ற போர்வையில், காவல்துறை காட்டியுள்ள வேகமும், வன்முறையும், அப்பாவியான பயிர்களைப் பலிவாங்கியுள்ளன என்பது, இந்த முழு அடைப்புக் காலத்தில் நம்மை வதைத்த செய்திகள்!

கோவிட்-19 கொள்ளைநோய் என்ற களை, கட்டுக்கடங்காமல் வளர்ந்துவரும் இவ்வேளையில், அமெரிக்க ஐக்கிய நாடு, இந்தியா போன்ற நாடுகளில், காவல் துறையில் வேர்விட்டு வளர்ந்துள்ள களைகள், வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

காவல்துறையில் உள்ள அனைவரையும் களைகள் என்று கூறுவது தவறு. இந்தக் கொள்ளைநோய் காலத்தில், காவல்துறையைச் சேர்ந்த பலர், தங்கள் உயிரையும் பணயம் வைத்து, மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருவதையும் நாம் அறிவோம். சமுதாயத்திற்கு நன்மைபயக்கும் இந்தக் கதிர்கள் நடுவே, ஒரு சில களைகள் வளர்ந்துள்ளன. ஊடகங்கள், இந்தக் களைகளைப்பற்றிய செய்திகளை அதிகமாக வெளியிடுவதால், கதிர்களையும், களைகளையும் வேறுபடுத்திப் பார்க்கும் பொறுமையை இழந்துவிடுகிறோம். கதிர்களையும், களைகளையும் பகுத்துப்பார்க்க, நமக்குப் பொறுமை தேவை என்பதே, இவ்வுவமையில் இயேசு சொல்லித்தரும் முக்கியமானப் பாடம்.

'அகழ்ந்தாரைத் தாங்கும் நிலம்' என்று, நிலத்தை, நாம், பொறுமைக்கு எடுத்துக்காட்டாகக் கூறுகிறோம். தன்னில் விதைக்கப்பட்ட பயிர்களையும், களைகளையும் எவ்விதப் பாகுபாடுமின்றி, வளரவிடுகிறது, நிலம். அந்த நிலத்தைப் பின்புலமாகக் கொண்டு தன் உவமையைக் கூறியுள்ள இயேசு, பொறுமையுடன் காத்திருந்து, பயிர்களும், களைகளும் முற்றிலும் வளர்ந்தபின், அவற்றை பிரிப்பதே இறையரசின் அழகு என்று, இவ்வுவமையில் சொல்லித்தருகிறார்.

அதேவண்ணம், இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் கடுகுவிதை உவமையும், புளிப்பு மாவு உவமையும் பொறுமையைச் சொல்லித்தருகின்றன. விதைகளை விதைத்த மறுநாளே செடிகளை எதிர்பார்ப்பது மதியீனம் என்பதை, நாம் அனைவரும் அறிவோம்.

ஒருவர் தன் வீட்டின் பின்புறம் இருந்த சிறு தோட்டத்தில், சில விதைகளை ஊன்றி வைத்தார். ஒவ்வொருநாளும், காலையில், தோட்டத்திற்குச் சென்று, மண்ணைத் தோண்டி, தான் ஊன்றிய விதைகள் வளர்ந்துவிட்டனவா என்று அவர் பார்த்து வந்தாராம். அந்த விதைகள் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாம் அறிவோம்.

அதேபோல், மாவில் புளிப்புமாவைக் கலந்தபின், அதை மூடி வைக்கவேண்டும். மாவு முழுவதிலும் புளிப்பு ஏறுவதற்குக் காத்திருக்கவேண்டும். புளிப்பு ஏறிவிட்டதா என்று பார்க்க, மூடிவைக்கப்பட்டுள்ள பாத்திரத்தை அடிக்கடி திறந்து பார்த்தால், உள்ளிருக்கும் மாவில் புளிப்பு ஏற வாய்ப்பில்லை.

பயிர்களும், களைகளும் வளரும் நிலம், பூமியில் ஊன்றப்பட்ட கடுகு விதை, புளிப்பு மாவு கலக்கப்பட்ட மாவு, என்ற மூன்று உவமைகளும் நமக்குச் சொல்லித்தரும் ஒரே பாடம், பொறுமை!

நாம் எதிர்பார்ப்பவை அனைத்தும், துரிதமாக, உடனடியாக கிடைக்கவேண்டும் என்று அவசரப்படுவது, நாம் வாழும் 'உடனடி யுகத்தின்' (Instant Era) இலக்கணமாகிவிட்டது. 'துரித உணவு' (fast food) என்ற நிலையைக் கடந்து, உடனடி உணவுகளை தயாரிக்கத் துவங்கிவிட்டோம். உடனடி நூடுல்ஸ் (instant noodles), உடனடி தோசை, உடனடி இட்லி என்று, அனைத்தையும் 'உடனடியாகப்' பெறுவதற்குத் துடிக்கிறோம்.

அதேபோல், டிஜிட்டல் வழி தகவல் பரிமாற்றத்தின் வழியே, நம்மீது திணிக்கப்படும் செய்திகள், நூற்றுக்கணக்கில் வந்து சேருவதால், எந்த ஒரு செய்தியையும், ஆர, அமர, முழுமையாகப் பார்த்து, படித்து, சிந்தித்து, செயல்படும் பொறுமை நம்மிடம் இல்லை. நம்மை வந்தடையும் செய்திகளில், எவை தேவையானவை, தேவையற்றவை, எவை பயனுள்ளவை என்று தரம்பிரித்துப் பார்த்து, பயனுள்ள செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் பக்குவத்தையும் நாம் இழந்துவருகிறோம். இதனால், நம் மத்தியில், உண்மையானச் செய்திகள், பயனுள்ள தகவல்கள் ஆகிய பயிர்கள் வளர்வதற்குப் பதில், நம் அவசர சிந்தனை எனும் நிலத்தில், வதந்திகள், புறணிகள், அவதூறுகள் என்ற களைகளே மண்டிக்கிடக்கின்றன.

கோவிட்-19 கொள்ளைநோய் நம்மீது சுமத்தியுள்ள முழு அடைப்புக்காலத்தில், அவசர, அவசரமாக அள்ளித்தெளிக்கப்பட்ட களைகள் போன்ற செய்திகள், நம் செல்லிடப்பேசி என்ற வயலில் இரவும், பகலும் வந்து விழுந்தன. அவற்றை, நாமும், நம் பங்கிற்கு, அவசரமாக, பரபரப்பாக மற்றவர்கள் உள்ளங்களில் விதைத்தோம்.

அவசரமும், பரபரப்பும் ஆட்டிப்படைக்கும் உலகில், பொறுமையுடன் உண்மைகளை விதைப்பதற்கும், அந்த உண்மைகளை கருத்தாய் வளர்ப்பதற்கும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள உவமைகள் வலியுறுத்துகின்றன.

உல்லாசக் கப்பலில் பயணம் செய்த ஓர் ஆயருக்கு, முன்பின் அறிமுகமில்லாத வேறு ஒருவருடன் ஒரே அறையில் தங்கவேண்டிய சூழல் உருவானது. எனவே, உறங்கச் செல்வதற்கு முன், ஆயர், தன்னிடமிருந்த பொன் சங்கிலி, விலையுயர்ந்த தங்கக் கைக்கடிகாரம் இரண்டையும், கப்பலின் மேலாளர் தங்கியிருந்த அறைக்கு எடுத்துச்சென்றார். மேலாளரிடம், ஆயர், "என் அறையில் தங்கியிருப்பவர் மீது எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. எனவே, இந்தப் பொருள்களை நீங்கள் பத்திரமாகப் பூட்டி வைத்திருங்கள். நாளைக் காலையில் பெற்றுக்கொள்கிறேன்" என்று கொடுத்தார். அந்த மேலாளர், ஆயர் தந்தவற்றை, சிரித்தபடியே பெற்றுக்கொண்டார். அவரது சிரிப்புக்கு ஆயர் காரணம் கேட்டபோது, மேலாளர், ஆயரிடம், "ஆயர் அவர்களே, உங்கள் அறையில் உள்ள நண்பர், அரை மணி நேரத்திற்கு முன் இங்குவந்து, தன் சங்கிலி, கைக்கடிகாரம் இரண்டையும் என்னிடம் ஒப்படைத்தபோது, அவரும், நீங்கள் சொன்னதையே சொன்னார்" என்று கூறினார்.

நம் அயலவர், கதிரா, களையா என்பதை, தோற்றத்தை வைத்து முடிவெடுப்பது தவறு என்பதை, பல நேரங்களில் நாம் உணர்ந்துள்ளோம்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் கதிர்கள், களைகள் இரண்டும் வளர்கின்றன என்பதையும், கதிர்களை வளர்ப்பதும், களைகளை வளர்ப்பதும் நமக்குத் தரப்பட்டுள்ள சுதந்திரம் என்பதையும், பழங்குடியினர் பயன்படுத்தும் ஓரு கதை வழியே புரிந்துகொள்ள முயல்வோம்.

‘செரோக்கி’ (Cherokee) என்ற அமெரிக்கப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தன் பேரனுக்கு, வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித்தந்தார். "எனக்குள் இரு ஓநாய்கள் உள்ளன. ஒரு ஓநாய், மிகவும் நல்லது. சாந்தம், பொறுமை, கருணை, என்ற நல்ல குணங்கள் கொண்டது. மற்றொரு ஓநாய், பொல்லாதது. கோபம், ஆணவம், பொய்மை என்ற பல எதிர்மறை குணங்கள் கொண்டது. இவ்விரு ஓநாய்களும், எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே உள்ளன. இதே சண்டை, உனக்குள்ளும் நடக்கிறது. உலக மக்கள் அனைவருக்குள்ளும் நடக்கிறது" என்று முதியவர் சொன்னார்.

சிறிது நேர சிந்தனைக்குப் பின், பேரன், தாத்தாவிடம், "இந்தச் சண்டையில் எந்த ஓநாய் வெல்லும்?" என்று கேட்டான். அதற்கு தாத்தா, பேரனிடம், "நீ எந்த ஓநாய்க்கு அதிக உணவளிக்கிறாயோ, அதுதான் வெல்லும்" என்றார்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் நல்லவை, தீயவை இணைந்து வளர்கின்றன. முழுமையான வளர்ச்சி அடைந்தபின்னரே, அவற்றின் பண்புகள் முழுமையாக வெளிப்படும். நாம் எந்த ஓநாயை ஊட்டி வளர்க்கிறோமோ, அந்த ஓநாயே வெற்றிபெறும்.

நாம் கதிர்களை கருத்துடன் வளர்த்தால், களைகள் கருகிப்போகும். நாம் களைகளை வளர்ப்பதில் கருத்தைச் செலவிட்டால், கதிர்கள் காணாமற்போகும். நாம் வளர்ப்பது கதிரா, களையா என்பதைப் புரிந்துகொள்ள, முதலில், பொறுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் கதிர்களை வளர்க்கிறோமா? களைகளை வளர்க்கிறோமா? கடவுளுக்கு முன் பதில் சொல்வோம்.

18 July 2020, 11:23