தேடுதல்

Vatican News
நால்வகை பூமிப் பரப்பில் விதைக்கும் விதைப்பவர் நால்வகை பூமிப் பரப்பில் விதைக்கும் விதைப்பவர் 

பொதுக்காலம் 15ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

'விதைப்பவர் உவமை'யைச் சிந்திக்கும்போதெல்லாம், நமது சிந்தனைகள், பொதுவாக, விதை, விளைநிலம் என்பனவற்றையேச் சுற்றிவந்துள்ளன. இன்று, ஒரு மாற்றமாக, நாம், விதைப்பவர் மீது நமது கவனத்தைத் திருப்புவோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 15ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

இளையவர் ஒருவர், ஒரு நாள், இறைவனிடம் நிபந்தனைகளை அடுக்கிவைத்தார்: "இறைவா, மோசேக்காக முட்புதரை நீர் எரித்ததுபோல், எனக்கும் எரித்துக்காட்டும், நான் உம்மைப் பின்தொடர்வேன். யோசுவாவுக்காக மதில் சுவரை நீர் இடித்ததுபோல், எனக்கும் இடித்துக்காட்டும், நான் உமக்காகப் போராடுவேன். கலிலேயக் கடலில் அலைகளை நீர் அடக்கியதுபோல், எனக்கும் அடக்கிக்காட்டும். உமக்கு நான் செவிசாய்ப்பேன்..." என்று தன் நிபந்தனைகளை அடுக்கிய இளையவர், ஒரு சுவரும், புதரும் அருகருகே அமைந்திருந்த கடற்கரையொன்றில் அமர்ந்து, கடவுள் என்னதான் செய்வார் என்பதைக் காணக் காத்திருந்தார்.

இளையவர் சொன்னதைக் கேட்ட இறைவன், அவருக்கு உடனடியாகப் பதிலளித்தார்.

அவர், நெருப்பை அனுப்பினார், புதரை எரிக்க அல்ல, மனித உள்ளங்களை... அவர், சுவரை இடித்தார், கற்களால் ஆன சுவரை அல்ல, பாவங்களால் கட்டப்பட்ட சுவரை... அவர், புயலை அடக்கினார், கடலில் அல்ல, ஆன்மாவில்...

இவற்றையெல்லாம் செய்துமுடித்த கடவுள், அந்த இளையவர் என்ன பதில் சொல்வார் என்று காத்திருந்தார், காத்திருந்தார், தொடர்ந்து காத்திருந்தார். அந்த இளையவரோ, புதரில், சுவரில், கடலில் மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்ததால், இறைவன் ஒன்றும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வந்தார்.

இறுதியில், அந்த இளையவர், இறைவனிடம், "என்ன, உமது ஆற்றலையெல்லாம் இழந்துவிட்டீரா?" என்று சிறிது ஏளனமாகக் கேட்டார். இறைவன் மறுமொழியாக, "நீர் உமது கேட்கும் திறனை இழந்துவிட்டீரா?" என்று கேட்டார்.

"ஒரு மென்மையான இடிமுழக்கம்: புயல் நடுவே இறைவனுக்குச் செவிமடுத்தல்" (A Gentle Thunder: Hearing God Through the Storm) என்ற நூலில், மேக்ஸ் லுக்காடோ (Max Lucado) என்பவர் எழுதியுள்ள உவமை இது.

இயேசுவும், இன்றைய நற்செய்தியில், ஓர் உவமையை நமக்குக் கூறுகிறார். பின்னர், "உங்கள் கேட்கும் திறனை இழந்துவிட்டீர்களா?" என்ற கேள்வியை, நம் அனைவரிடமும் கேட்கிறார். இதை ஒரு கேள்வியாகக் கேட்பதற்குப் பதில், "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" (மத். 13:9) என்ற சொற்கள் வழியே, ஒரு சவாலாக, ஓர் அழைப்பாக நம்முன் வைத்துள்ளார். இந்தச் சவாலை, அழைப்பை, இந்த ஞாயிறு வழிபாட்டில், சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்வோம்.

'செவி' என்பது மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் உறுப்பு. இந்த உறுப்பைப் பெற்றிருக்கும் மனிதர்கள் அனைவருமே கேட்கும் திறனைப் பெற்றிருப்பதில்லை. 'கண்' என்ற உறுப்பிருந்தும், பார்வைத் திறனின்றி, 'செவி' என்ற உறுப்பிருந்தும், கேட்கும் திறனின்றி, 'வாய்' என்ற உறுப்பிருந்தும் பேசும் திறனின்றி வாழ்வோரை நாம் அறிவோம். இயேசு இங்கு குறிப்பிடுவது அவர்களைப் பற்றியல்ல. இவ்விதம் வாழ்ந்தோரின் குறைகளை, தன் புதுமைகள் வழியே இயேசு குணமாக்கினார் என்பதை, நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம்.

கேட்கும் திறனிருந்தும், கேட்க விருப்பமின்றி வாழ்வோருக்கு, இயேசு, இந்த சவாலை, அழைப்பை விடுக்கிறார். 'கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையாய்' வாழும் நமக்கு விடுக்கும் ஓர் எச்சரிக்கையாக, இயேசுவின் அழைப்பு, சவால், ஒலிக்கிறது.

செவியிருந்து, கேட்கும் திறனும் இருந்து, கேட்காமல் இருக்க முடியுமா? முடியும். நம்மைச்சுற்றி, நாலாப்பக்கமும், அளவுக்கு மீறிய இரைச்சல்கள் நிறைந்து வழியும்போது, எதையும் கேட்கமுடியாமல் போகும். அல்லது, அவற்றைக் கேட்க விரும்பாமல், நாம், செவிகளையும், மனதையும், மூடிவைக்க முடியும். நம் செவிப்பறைகளைத் தாக்கும் அர்த்தமற்ற ஒலி அலைகள், நம் செவிகளைத் தாண்டி, அறிவில், மனதில் பதிந்து, மாற்றங்களை உருவாக்காமல் கடந்துவிடும். நம்மைச்சுற்றி நாம் பெருக்கிக்கொண்டுள்ள தொடர்புக்கருவிகள் உருவாக்கும் 'இரைச்சல்கள்', நமக்குள், எவ்வித பாதிப்புக்களை, மாற்றங்களை உருவாக்குகின்றன என்பதை ஆய்வு செய்வது பயன்தரும் ஒரு முயற்சி.

தொலைக்காட்சி, நாளிதழ்கள், வானொலி, செல்லிடப் பேசி, போன்ற கருவிகள் வழியே, நம்மை ஒரு நாளில் வந்தடையும், ஒலி, ஒளி வடிவச் செய்திகளும், தகவல்களும், குறைந்தது, 100 இருக்கும். இச்செய்திகள், எவ்வளவு தூரம் நம்மைச் செயல்பட வைக்கின்றன என்பதே, நாம் இன்று மேற்கொள்ள வேண்டிய ஆய்வு.

வாழ்வில் மாற்றங்களை உருவாக்காமல், நம்மைச் செயலுக்கு இட்டுச்செல்லாமல், வெறும் பார்வையாளர்களாக நம்மைச் சிறைப்படுத்தி வைக்கும் இந்த 'இரைச்சல்கள்', எவ்வித பலனையும் அளிக்காது என்பதே, இன்றைய நற்செய்தி தரும் எச்சரிக்கை. இத்தகைய 'இரைச்சல்களுக்கு' பழகிப்போய்விடும் நாம், இறைவனின் வார்த்தைகளையும் 'இரைச்சலாக'க் கருதி, அவற்றையும் ஒதுக்கி வைத்துவிடும் ஆபத்துக்கு உள்ளாகிறோம். இந்த ஆபத்தை நமக்கு உணர்த்தவே, இயேசு, "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்ற எச்சரிக்கையை விடுக்கிறார். இந்த எச்சரிக்கை, இறைவாக்கினர் எசாயா வழியே, ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது என்பதையும், இயேசு, இன்றைய நற்செய்தியில், தன் சீடர்களுக்கு நினைவுறுத்துகிறார்:

மத்தேயு 13:11,15

இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: "இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள்."

இறைவனின் குரலை, திறந்த மனதுடன் கேட்டால், மனம் மாறவேண்டியிருக்கும், செயலாற்றவேண்டியிருக்கும். அவரது செயல்களை, விசுவாசக் கண்களோடு பார்த்தால், அவரைப் பின்செல்லவேண்டியிருக்கும். இதை பிரச்சனையாக எண்ணி அஞ்சுபவர்கள், எதுவும் கேட்காததுபோல், பார்க்காததுபோல், வாழ விரும்புகின்றனர். செயலாற்ற விருப்பமின்றி, உள்ளம் கொழுத்துப்போய் மந்தமாகிவிடுவதால், இறைவன் இவ்வுலகில் இன்னும் தொடர்ந்து செயலாற்றுகிறார் என்ற நம்பிக்கைச் செய்தியைக் கேட்க விருப்பமின்றி, இவ்வுலகம், நம் மேல் திணிக்கும், நம்பிக்கையைக் குலைக்கும் செய்திகளுக்குள் சிறைப்பட்டு விடுகிறோம். அதே நம்பிக்கையின்மையை, மற்றவர் உள்ளங்களிலும் விதைக்கிறோம்.

இன்றைய நற்செய்தியில், 'விதைப்பவர் உவமை'யைப் பகிர்நதுகொள்ளும் இயேசு, அதே மூச்சில், "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்ற அழைப்பையும் விடுத்துள்ளார். இயேசு கூறும் இவ்வுவமையில், விதைப்பவர், விதை, விளைநிலம் என்ற மூன்று கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உவமையைச் சிந்திக்கும்போதெல்லாம், நமது சிந்தனைகள், பொதுவாக, விதை, விளைநிலம் என்பனவற்றையேச் சுற்றிவந்துள்ளன. இன்று, ஒரு மாற்றமாக, நாம் விதைப்பவர் மீது நமது கவனத்தைத் திருப்புவோம்.

விதைப்பவர் எடுத்துச்சென்ற விதைகள், விளைநிலத்தில் மட்டுமல்ல, சுற்றியிருந்த பாதை, பாறைகள், முட்புதர்கள் என்று பல இடங்களிலும் விழுந்தன என்று இயேசு கூறினார். இது விதைப்பவரின் கவனக்குறைவால் நிகழ்ந்ததா? அல்லது, விதைப்பவர், தாராள மனதுடன், விதைகளை, அள்ளித்தெளித்தாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. இயேசுவின் இவ்வுவமை, இறை வார்த்தையை மையப்படுத்தியது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, விதைப்பவர், இவ்வாறு செயல்பட்டது, அவரது தாராள மனதைக் காட்டுகிறது என்ற பொருளே, பொருத்தமாக உள்ளது.

தயக்கம் ஏதுமின்றி, நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தும் இறைவனிடம், "ஆற்றில் கொட்டினாலும், அளந்து கொட்டவேண்டும்", "பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும்" என்பன போன்ற பழமொழிகள் அர்த்தமற்று போகும். அத்தகைய இறைவனின் வார்த்தைகளை உலகில் விதைக்கச்செல்லும் நாம், தரம் மிகுந்த, நன்கு உழுது உரமிடப்பட்ட நிலத்தில் மட்டுமே விதைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றால், அது, இறைவார்த்தையை, விலங்கிட்டு, சிறைப்படுத்தும் முயற்சியாக அமையும்.

நாம் என்னதான் தடைகள் விதித்தாலும், விலங்கிட்டு சிறையில் அடைத்தாலும், இறைவார்த்தை, தன் செயல்களை ஆற்றியே தீரும் என்பதை, இறைவாக்கினர் எசாயா, இன்றைய முதல் வாசகத்தில் திட்டவட்டமாகக் கூறுகிறார். அதுவும், இவ்வார்த்தைகளை, இறைவனே நேரடியாகச் சொல்வதுபோல், இன்றைய முதல் வாசகத்தில் ஒலிக்கின்றன:

இறைவாக்கினர் எசாயா 55: 10-11

மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன: அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

நிபந்தனைகள் ஏதுமின்றி, தங்கு தடையின்றி, தாராளமாக, இறைவார்த்தையை அள்ளித் தெளிக்கவேண்டும் என்பதை, இயேசு, இவ்வுவமையில் மட்டும் கூறாமல், தன் வாழ்விலும் கடைபிடித்தார். மதத் தலைவர்கள் என்ற பாறைகளில், அவர் விதைத்த வார்த்தைகள், வெறுப்பாக வெடித்தாலும், அவர் சளைக்காமல் விதைத்தார். பாவம் என்ற முட்புதர்களில் சிக்கியிருந்தோரிடம், அவர் விதைத்த வார்த்தைகள் சென்றடைந்தன என்பதையும், முட்புதர்களும், இயேசுவின் வார்த்தையால், மலர்ச்செடிகளாயின என்பதையும், நற்செய்தியில் நாம் அடிக்கடி காண்கிறோம். வெறும் ஆர்வக் கோளாறால் அவரைக் காண வந்தவர்கள், பாதையோர நிலங்கள் என்பதை அறிந்தும், இயேசு, அந்தப் பாதைகளில் விதைப்பதை நிறுத்தவில்லை.

‘இறைவார்த்தையை விதைப்பது’ என்றதும், கோவில்களிலும், வேறுபல மத மேடைகளிலும் இறைவார்த்தையைப் பறைசாற்றுவதை மட்டும் எண்ணிப்பார்க்க வேண்டாம். இறைவார்த்தையை விதைப்பது என்பது, ஒவ்வொருவர் வாழ்வின் வழியாக நிகழும் அமைதியான விதைத்தல். அதன் வழியாக, சுற்றியிருப்போரின் வாழ்வில் உருவாகும் விளைச்சல்! பாகுபாடுகள் பார்க்காமல், ஐயங்களால் அவதிப்படாமல், விதைகளைத் தெளிப்பதைப்பற்றி சிந்திக்கும்போது, பொருள் நிறைந்த கதையொன்று நினைவுக்கு வருகிறது...

நாட்டிலேயே தலைசிறந்த சோளத்தை வளர்ப்பவர் என்ற விருதை, திருவாளர் மைக்கிள் அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் பெற்றுவந்தார். அவரது தொடர் வெற்றியின் இரகசியத்தை அறிய, ஒரு நாளிதழின் நிருபர், அவரைப் பேட்டி கண்டார். பேட்டியின்போது மைக்கிள் அவர்கள் பகிர்ந்துகொண்ட ஒரு விவரம், நிருபருக்கு வியப்பாக இருந்தது. மைக்கிள் அவர்கள், தன் நிலத்தைச் சுற்றியிருந்த மற்ற நில உரிமையாளர்களுக்கு, தன்னிடம் இருந்த சிறந்த விதைகளைக் கொடுத்தார் என்பதே, அந்த வியப்பான விவரம்.

"உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுடன் போட்டி போடுகிறவர்கள் என்பதை அறிந்தும், நீங்கள் ஏன் அவர்களுக்கு சிறந்த விதைகளைத் தந்தீர்கள்?" என்று நிருபர் கேட்டபோது, மைக்கிள் அவர்கள் கூறிய விளக்கம் இதுதான்: "இதைப்பற்றி ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்? நன்கு வளர்ந்துள்ள சோளக்கதிரின் மகரந்தத் தூள் காற்றில்  கலந்து அடுத்த நிலங்களில் உள்ள சோளக்கதிர்களில் மகரந்த சேர்க்கை செய்கின்றன, இல்லையா? அப்படியிருக்க, என் நிலத்தைச் சுற்றியுள்ளவர்களின் நிலங்களில் தரக் குறைவான சோளக்கதிர்கள் வளர்ந்தால், அது என் கதிர்களின் தரத்தையும் குறைத்துவிடுமே! நான் தலைசிறந்த சோளத்தை உருவாக்க வேண்டுமென்றால், என்னைச் சுற்றியிருப்போரும், நல்ல சோளத்தை உருவாக்கவேண்டும். எனவேதான், நல்ல விதைகளை சுற்றியுள்ள நில உரிமையாளர்களுக்கும் தருகிறேன்" என்று, அவர் சொன்ன பதில், வியப்பைத் தந்தாலும், ஆழ்ந்ததோர் உண்மையையும் சொல்லித்தருகின்றது.

நம்மைச் சுற்றிவாழும் அனைவரும் நலமாக இருந்தால் மட்டுமே, நாமும் நலமாக இருக்கமுடியும் என்ற உண்மையை, இந்தக் கொள்ளைநோய் காலம், ஆணித்தரமாக நம் உள்ளங்களில் பதித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக, ஆலயங்களையும், ஞாயிறு வழிபாடுகளையும், அங்கு ஒலிக்கும் இறைவார்த்தையையும் இழந்து வாழும் நம் மத்தியில், இறைவார்த்தையை விதைக்க இறைவன், நம் இல்லம் தேடி வந்துள்ளார்.

விதைப்பவர் உவமையை இன்று இறைவார்த்தையாக ஏற்கும் நாம், முதலில், திறந்த மனதுடன் இறைவார்த்தையைக் கேட்கும் செவியுடையோராய் இருக்கும் வரத்தை இறைவன் தர வேண்டுவோம். நாம் கேட்கும் இறைவார்த்தையை, தாராள மனதோடு, பிறர் உள்ளங்களில் விதைக்கும் நல்ல விதைப்பாளர்களாக மாறுவோம். இறைவார்த்தையை வாய்மொழியாக விதைப்பதைவிட, வாழ்வின் வழியே விதைப்பதில், ஆற்றலோடு செயலாற்றுவோம். நாம் உன்னத வாழ்வு வாழ்வதற்கு உதவியாக, நம்மைச் சுற்றியிருப்போரும் உன்னத வாழ்வு பெறவேண்டும் என்ற உயர்ந்த இலட்சியம் கொண்டு வாழ்வோம். இறைவன் இந்த நற்பணியில் நமக்குத் துணை புரிவாராக!

11 July 2020, 12:04