பங்களாதேஷில் கொரோனா பாதிப்பு பரிசோதனைகள் பங்களாதேஷில் கொரோனா பாதிப்பு பரிசோதனைகள் 

கோவிட்-19 பாதிப்புகளிடையே பங்களாதேஷ் திருஅவை பணிகள்

Aid to the Church in Need அமைப்பு வழங்கியுள்ள பாதுகாப்பு கருவிகளின் துணையுடன், ஏழை மக்களிடையே சென்று மருத்துவ உதவிகளையும், உணவு உதவிகளையும், பங்களாதேஷ் தலத்திருஅவை ஆற்றுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

.கோவிட்-19 கொள்ளைநோயால், பங்களாதேஷ் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடையே பணியாற்றிவரும் அருள்பணியாளர்கள், மற்றும், துறவறத்தாருக்கு, போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி உதவி வருகிறது, Aid to the Church in Need (ACN) என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.

கொரோனா தொற்றுநோய் பரவ வழிவகுக்கும் என்ற அச்சத்தில், ஏழை மக்களிடையே பணிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பணிகளைத் தொடர்ந்து நடத்த அருள்பணியாளர்களுக்கும், துறவறத்தாருக்கும் ஊக்கம் தரும்வகையில், இந்தப்  பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து செய்தி வெளியிட்ட பங்களாதேஷின்  Barisal மறைமாவட்ட ஆயர்,  Lawrence Subrato Howlader அவர்கள், இந்தக் கொள்ளைநோயின் ஆரம்பக் காலத்திலிருந்தே, இது பரவாமல் இருக்க, அனைத்து நடவடிக்கைகளையும், மக்களோடு ஒன்றிணைந்து, அவர்களின் உதவியுடன், தன் மறைமாவட்டம் ஆற்றிவருவதாகத் தெரிவித்தார்.

தற்போது,  Aid to the Church in Need அமைப்பு வழங்கியுள்ள பாதுகாப்பு கருவிகளின் துணையுடன், ஏழை மக்களிடையே சென்று மருத்துவ உதவிகளையும், உணவு உதவிகளையும், தலத்திருஅவைப் பணியாளர்களால் அச்சமின்றி ஆற்றமுடிகிறது என மேலும் கூறினார் ஆயர் Howlader.

வேலைக்குச் செல்லமுடியாத நிலையில், பலர், தங்கள் வேலையை இழந்துள்ளதாகவும், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், தங்கள் உற்பத்திப்பொருட்களை விற்கமுடியாமல், விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் வருமானமின்றி தவிப்பதாகவும் உரைத்த ஆயர் Howlader அவர்கள், மருத்துவ உதவிகளுடன் பொருளாதார உதவிகளையும் வழங்குவது குறித்து திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தார்.

பங்களாதேஷ் நாட்டில் இவ்வியாழன், ஜூலை 23ம் தேதி வரையுள்ள நிலவரப்படி, இரண்டு இலட்சத்து 16 ஆயிரத்து 110 பேர் கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, இந்நோய்க்கு, 2801 பேர் பலியாகியுள்ளனர்.

தென்கிழக்கு பங்களாதேஷின் Chittagong உயர் மறைமாவட்ட பேராயர் Moses Costa அவர்கள், கோவிட்-19 நோயால் தாக்கப்பட்டு குணம் பெற்றபின், அண்மையில், வேறு சில காரணங்களால், இறையடி சேர்ந்தது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2020, 14:21