நைஜீரியாவில் Eid al Adha விழா நைஜீரியாவில் Eid al Adha விழா 

பக்ரீத் திருநாளுக்கு கத்தோலிக்கத் தலைவர்கள் நல்வாழ்த்து

ஒவ்வொருவரும் தாங்கள் இணைந்துள்ள குழுமத்தின் தனிப்பட்ட ஆதாயங்களைத் தியாகம் செய்யவும், மனம் மாறி, தங்களையே புதுப்பித்துக்கொள்ளவும், நாட்டின் பொதுநலன் மற்றும் வளர்ச்சிக்காக தங்களையே அர்ப்பணிக்கவும், Eid al Adha திருநாள் அழைப்பு விடுக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

முஸ்லிம் சகோதரர்கள் சிறப்பித்துவரும், தியாகத்தின் திருநாள் என்றழைக்கப்படும் Eid al Adha விழாவுக்கு, கத்தோலிக்கத் தலைவர்கள் தங்களின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 30, இவ்வியாழன் மாலையில் Eid al Adha  அல்லது பக்ரீத் திருநாளைத் துவக்கியுள்ள முஸ்லிம் சகோதரர்களுக்கு நல்வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ள, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் லூயிஸ் சாக்கோ அவர்கள், பழைய ஏற்பாட்டு தந்தை ஆபிரகாம் அவர்கள், கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, தன் ஒரே மகன் ஈசாக்கைப் பலியிடுவதற்குத் தயாராக இருந்த உண்மையை, இத்திருநாள் நினைவுகூருகின்றது என்று கூறியுள்ளார்.

ஒவ்வொருவரும் தாங்கள் இணைந்துள்ள குழுமத்தின் தனிப்பட்ட ஆதாயங்களைத் தியாகம் செய்யவும், மனம் மாறி, தங்களையே புதுப்பித்துக்கொள்ளவும், நாட்டின் பொதுநலன் மற்றும், வளர்ச்சிக்காகவும், நம் குடிமக்களின்  மாண்பைப் பாதுகாக்கவும், தங்களையே அர்ப்பணிப்பதற்கு, இந்தத் திருநாள் அழைப்பு விடுக்கின்றது என்று, கர்தினால் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

ஈராக்கில், மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் இக்காலக்கட்டத்தில், எல்லாரும் தங்களுக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து, தற்போதைய அரசுடன், தேசியக் கடமையுணர்வில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும், பக்ரீத் திருநாள் வலியுறுத்துகின்றது என்றும், பாக்தாத் முதுபெரும்தந்தை எடுத்துரைத்துள்ளார். (Fides)

பிரான்ஸ் கத்தோலிக்கத் தலைவர்கள்

மேலும், ஆகஸ்ட் 3, வருகிற திங்கள் வரைக் கொண்டாடப்படும், பக்ரீத் திருநாளுக்கென, முஸ்லிம் சகோதரர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள், நம்பிக்கை மற்றும், மனித உடன்பிறந்தநிலை உணர்வில் ஒன்றித்திருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த கோவிட்-19 தொற்றுக்கிருமியால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்துள்ள பிரான்ஸ் கத்தோலிக்கத் தலைவர்கள், இந்நோயாளிகள் மத்தியில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும், தன்னார்வலர்களுக்கு, தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

பக்ரீத், இஸ்லாமியரின் இரண்டாவது முக்கிய பண்டிகையாகும். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2020, 13:23