மாற்றுத்திறனாளிகளுக்கென வாழ்வை அர்ப்பணித்த அருள்சகோதரி ரூத் மாற்றுத்திறனாளிகளுக்கென வாழ்வை அர்ப்பணித்த அருள்சகோதரி ரூத் 

மாற்றுத்திறனாளிகளுக்கென வாழ்வை அர்ப்பணித்த அருள்சகோதரி ரூத்

அருள்சகோதரி ரூத் அவர்களின் 51 ஆண்டுகால தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, 2014ம் ஆண்டில் கராச்சியின் பெருமை என்ற விருதையும், 2008ம் ஆண்டில் Hakeem Muhammad Saeed என்ற விருதையும், அவர் பெற்றுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அருள்சகோதரி ரூத் லூயிஸ் (Ruth Lewis) அவர்கள், மனித சமுதாயத்திற்கும், பாகிஸ்தான் நாட்டிற்கும் ஆற்றிய மிகச்சிறந்த சேவைகளைப் பாராட்டும் விதமாக, அச்சகோதரிக்கு, 2020ம் ஆண்டின் Sitara-e-Imtiaz என்ற, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. 

அமைதியின் இல்லம் என்று பொருள்படும், Darul Sukoon என்ற இல்லத்தில், மாற்றுத்திறனாளி சிறாருக்குச் சேவையாற்றிவந்த 77 வயது நிரம்பிய அருள்சகோதரி ரூத் அவர்கள், கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டு, 12 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும், அது பலனின்றி, ஜூலை 20, இத்திங்களன்று இறைபதம் சேர்ந்தார்.

1946ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி பிறந்த அருள்சகோதரி ரூத் அவர்கள், கிறிஸ்து அரசர் பிரான்சிஸ்கன் மறைப்பணியாளர்கள் துறவு சபையின் உறுப்பினராவார்.

அருள்சகோதரி ரூத் அவர்கள், Gertude Lemmens, Margared D’Costa ஆகிய அருள்சகோதரிகளுடன் இணைந்து, 1969ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி, உடலிலும், மனத்தளவிலும் குறையுள்ள ஏறத்தாழ 150 மாற்றுத்திறனாளிச் சிறார் மற்றும், இளையோருக்கென, Darul Sukoon இல்லத்தைத் தொடங்கினார். இவர், இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து அந்த இல்லத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

இவர் ஆற்றிய 51 ஆண்டுகால தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, 2014ம் ஆண்டில் கராச்சியின் பெருமை என்ற விருதையும், 2008ம் ஆண்டில் Hakeem Muhammad Saeed என்ற விருதையும், இவர் பெற்றுள்ளார்.

1998ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டியில், இந்த இல்லத்தைச் சேர்ந்த நான்கு சிறார் பதக்கங்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்சகோதரி ரூத் அவர்கள், எங்கள் அனைவரின் பெருமைக்கு ஊற்றாக உள்ளார் என்று, பாகிஸ்தான் கத்தோலிக்கர் கூறியுள்ளனர்.

அருள்சகோதரி ரூத் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சிந்து மாநிலத்தின் முதலமைச்சர் Syed Murad Ali Shah அவர்கள், அச்சகோதரிக்கு அந்நாட்டின் Sitara மற்றும் Imtiaz விருது வழங்கப்படவேண்டும் என்று, பாகிஸ்தானின் குடியரசுத்தலைவர் Arif Alvi அவர்களிடம் நேரிடையாகப் பரிந்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்து மாநில ஆளும் கட்சித் தலைவரான Bilawal Bhutto Zardari அவர்களும், அருள்சகோதரி ரூத் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் என்று செய்திகள் கூறுகின்றன. (UCAN/AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2020, 12:55