ஹாயா சோஃபியா ஹாயா சோஃபியா  

ஹாயா சோஃபியா ஆலயம், கிறிஸ்தவர்களின் வழிபாட்டுக்கும்...

அண்மையில் இஸ்லாமியத் தொழுகைக்கூடமாக மாற்றப்பட்ட ஹாயா சோஃபியா ஆலயம், கிறிஸ்தவர்களின் வழிபாடுகளுக்கும் திறந்துவிடப்படவேண்டும் - பாகிஸ்தான் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் விண்ணப்பம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில், அண்மையில், இஸ்லாமியத் தொழுகைக்கூடமாக மாற்றப்பட்ட ஹாயா சோஃபியா ஆலயம் கிறிஸ்தவர்களின் வழிபாட்டு நிகழ்வுகளுக்கும் திறந்துவிடப்படவேண்டும் என்று, பாகிஸ்தானில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

துருக்கி நாட்டு அரசுத்தலைவர் Recep Erdogan அவர்கள் ஹாயா சோஃபியா அருங்காட்சியகத்தை இஸ்லாமியத் தொழுகைக்கூடமாக மாற்றும் முடிவை அறிவித்ததும், பாகிஸ்தானிலுள்ள Raiwind மறைமாவட்டத்தின் ஆயர், Azad Marshall அவர்கள், அந்த அருங்காட்சியத்தில் பதிக்கப்பட்டுள்ள கிறிஸ்துவின் உருவத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இந்தப் புனித இடம், பலரையும் வரவேற்கும் இடமாக இருப்பதே சிறந்தது என்று கூறியிருந்தார்.

தொழுகைக்கூடமாக மாற்றப்பட்டிருக்கும் ஹாயா சோஃபியாவில், வெள்ளிக்கிழமைகளில், இஸ்லாமியர் தங்கள் தொழுகையை மேற்கொள்வதுபோல், ஞாயிற்றுக்கிழமைகளில், கிறிஸ்தவர்கள் தங்கள் வழிபாட்டை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவேண்டும் என்று, பாகிஸ்தான் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மத நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவை மிக அதிகமாகத் தேவைப்படும் இந்தக் காலக்கட்டத்தில், மத நல்லிணக்கத்தை உருவாக்கி வந்த ஹாயா சோஃபியா அருங்காட்சியகத்தை, மீண்டும் இஸ்லாமியரின் தொழுகைக்கூடமாக மட்டும் மாற்றியிருப்பது, மீண்டும் மதங்களிடையே கசப்புணர்வையே வளர்க்கும் என்று இத்தலைவர்கள் கூறியுள்ளனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2020, 14:03