மும்பை சேரி பகுதியில் மருத்துவ உதவிகள் மும்பை சேரி பகுதியில் மருத்துவ உதவிகள் 

மும்பை தாராவி பங்குத்தளத்திற்கு WHO பாராட்டு

மதம், இனம், ஜாதி என எவ்வித பாகுபாடும் பார்க்காமல், தேவையிலிருக்கும் அனைத்து மக்களுக்கும், பிறரன்பு பணிகளை கடந்த மூன்று மாதங்களாக ஆற்றிவருகிறது தாராவி பங்குத்தளம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

உலகின் மிகப்பெரிய சேரிகளுள் ஒன்றான மும்பை தாராவி பகுதியில், கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து சிறப்புடன் பணியாற்றிவருவதற்கு, அப்பகுதியின் புனித அந்தோனியார் பங்குதளத்திற்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளது, உலக நலவாழ்வு அமைப்பான WHO.

இரண்டரை சதுர கிலோமீட்டரில், ஆறரை இலட்சம் மக்களைக் கொண்டுள்ள தாராவி சேரிப் பகுதியில், இந்த கொரோனா நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கை காலத்தில், புனித அந்தோனியார் பங்குத்தளம் ஆற்றிவரும், நல ஆதரவு, மற்றும், உணவு விநியோகப் பணிகள் குறித்து பாராட்டுவதாகத் தெரிவிக்கிறது, உலக நலவாழ்வு நிறுவனம்.

இந்த கொரோனா காலத்தில், தாராவி பகுதி மக்கள், ஏழ்மை நிலைகளையும் தாண்டி, மனித மாண்புடன் செயல்பட்டதாக உரைத்த, அப்பங்குதள அருள்பணியாளர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார் அவர்கள், சமூக ஒருமைப்பாட்டுணர்வுடன், தலத்திருஅவை, தன் பணிகளை தொடர்ந்து ஆற்றிவருகிறது என்று கூறினார்.

போதிய நல ஆதரவு வசதிகள், குடிநீர், குப்பை அகற்றும் வசதிகள் போன்றவை இன்றி, மக்கள் மிக நெருக்கமாக வாழும் தாராவிப் பகுதியில், கொரோனா தொற்றுநோய் மிக வேகமாகப் பரவும் என்ற அச்சம், இந்நோய் பரவலின் துவக்க காலத்தில் இருந்தபோதிலும், அரசின் கட்டுப்பாடுகளாலும், மக்களின் ஒத்துழைப்பாலும், திருஅவையின் பணிகளாலும், இந்நோயின் பரவல், பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார், அருள்பணி ஜெயக்குமார்.

மதம், இனம், ஜாதி என எவ்விதப் பாகுபாடும் பார்க்காமல், தேவையிலிருக்கும் அனைத்து மக்களுக்கும் திருஅவை பிறரன்பு பணிகளை கடந்த மூன்று மாதங்களாக ஆற்றிவருவதாக உரைத்த அருள்பணி ஜெயக்குமார் அவர்கள், இத்துன்ப காலத்தில், கிறிஸ்தவர்களுக்கு மட்டும் என்று திருஅவையால் பணியாற்ற முடியாது, ஏனெனில், அனைவரும் இறைவனின் மக்களே என்றார்.

மும்பையின் தாராவி பகுதி என்றாலே, சேரி மக்கள் என்று நோக்கப்பட்டு, அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டுவரும் நிலையில், அம்மக்களிடையே திருஅவைப்பணியாளர்கள் ஆற்றிவரும் சேவை மதிக்கப்படுவதுடன், அப்பகுதி மேற்கொண்டுள்ள முயற்சிகள், அனைத்து மக்களாலும் வரவேற்கப்படுகிறது என மேலும் கூறினார், புனித அந்தோனியார் பங்குத்தள அருள்பணி ஜெயக்குமார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2020, 16:04